பார்ப்பனர் சங்கப் பொதுக் குழுவின் தீர்மானம்

பதிவு பெற்ற தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் 11ஆம் ஆண்டு மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் ஈரோடு கருங்கல் பாளையத்தில் நடந்துள்ளது. அதில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டுள்ளன.

"மத்திய அரசு அறிவித்துள்ள முற்படுத்தப்பட்டுள்ள வகுப் பில், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு திட்டத்தை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும்" என்பது முதல் தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்திற்கு மூலகாரணம் மத்திய பா... அரசு - பொருளா தாரத்தில் நலிவடைத்துள்ள உயர்ஜாதியினருக்கு (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்னும் சட்டத்தை அவசர கதியில் கொண்டு வந்து நிறைவேற்றியதுதான். இந்த சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும்.

தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் மூண்டெழுந்த போராட்டத்தின் காரணமாக இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டது. (15(4)  கல்வியில் இடஒதுக்கீட்டுக்கான திருத்த சட்டம் அது.

அப்பொழுது சட்ட அமைச்சராக இருந்தவர் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆவார்.

சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட வர்களுக்குக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கான சட்டம் அது.

அந்தத் திருத்தத்தின் போது, 'பொருளாதார ரீதியாகவும்' என்ற அளவுகோலும் சேர்க்கப்பட வேண்டும், என்ற திருத்தமும் உயர்ஜாதி பார்ப்பனர்களால் கொண்டு வரப்பட்டு வாக்களிப்புக்கு விடப்பட்டபோது, அதற்கு, ஆதரவாக அய்ந்தே அய்ந்து வாக்கு களும், எதிராக 243 வாக்குகளும் பதிவான நிலையில், திருத்தம் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

ஆனாலும் பார்ப்பனர்கள் தொடர்ந்து இந்த நிலைப்பாட்டி லிருந்து சற்றும் பின் வாங்காமல் வலியுறுத்திக் கொண்டே வந்தனர்.

காங்கிரஸ் ஆட்சியில் பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 விழுக்காடுக்கு வழி செய்தபோது, உச்சநீதிமன்றத்தால் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி  தள்ளுபடி செய்யப்பட்டது.

இப்பொழுது பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திர மோடி குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்தபோது, அதே போல் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு என்னும் சட்டத்தை நிறைவேற்றிய போதும் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

மத்தியப் பிரதேச பா... ஆட்சியில் இதே அடிப்படையில் 15 விழுக்காடு சட்டம் இயற்றியபோதும் நீதிமன்றம் செல்லாது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

இவ்வளவுக்குப் பிறகும் மத்தியில் உள்ள பா... தலைமையிலான (என்.டி..) ஆட்சியில் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு என்ற சட்டத்தை நிறைவேற்றி உடனடியாக, அவசர அவசரமாக செயல்பாட்டிற்குக் கொண்டு வந்து விட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் நிலையில், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் செயல்படுத்திய தானது - மத்திய பா... ஆட்சி என்பது உயர்ஜாதி பச்சைப் பார்ப்பனருக்கான அரசு என்று அப்பட்டமாக அய்யம் திரிபறக் காட்டிக் கொண்டு விட்டது.

இடஒதுக்கீடு காரணமாக தகுதி திறமை கெட்டுப் போய் விடும் என்று கிளிப்பிள்ளைப் பாடம் போல ஒப்பித்து வந்த பார்ப் பனர்கள், இப்பொழுது மட்டும் எப்படி இடஒதுக்கீடு கேட்டு, அனுபவித்தும் வருகிறார்கள்?

இந்த சட்டத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலை என்ன? பாரத ஸ்டேட் வங்கிக்கான எழுத்தர் தேர்வின் முடிவு 25.7.2020 அன்று வெளியானது. தேர்வு செய்யப்பட்டவர்களின் கட்-ஆப் மார்க் என்ன தெரியுமா?

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 61 புள்ளி 25. பழங்குடியினருக்கு 53 புள்ளி 75.

உயர்ஜாதி பார்ப்பனருக்கு கட்-ஆஃப் மார்க் என்ன தெரியுமா? வெறும் 28 புள்ளி 5.

ஏற்கெனவே கல்வியிலும் சமூகநிலையிலும் உயர்ந்த நிலையில் உள்ள உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் வெறும் 28 புள்ளி 5 மதிப்பெண் பெற்றாலே வேலை கிடைத்து விடுகிறது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 53 புள்ளி 75ம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் 61 புள்ளி 25 மார்க்கும் பெற்றாக வேண்டுமாம்.

நியாயமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கடும் போராட்டம் வெடித்து எழ வேண்டாமா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அந்த உணர்ச்சி ஒரு நூற்றாண்டு காலமாக திராவிட இயக்கத்தால் வார்த்து வார்த்து எடுக்கப்பட்ட காரணத்தால், அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப் படவில்லை.

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த பொருளாதார அளவுகோலால் அவர் சந்தித்த தோல்வி எத்தகையது என்பதையும் அதிமுக அரசு அறியும். எனவே செயல்படுத்தவில்லை என்பதால் பார்ப் பனர்களின் பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது. அதிமுக அரசு இதில் தடுமாறக் கூடாது. மேலிட அழுத்தங்களுக்கு இரையாகவும் கூடாது.

ஒட்டு மொத்த தமிழ்நாடே அதனை முறியடிக்கும் என்பதில் அய்யமில்லை.

Comments