ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     மத்திய அரசு நடத்திய நேதாஜி 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தன்னையும், மேற்கு வங்க மக்களையும் மத கிறுக்கர்கள் அவமானப்படுத்தி விட்டதற்கு உரிய பதிலடி தருவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா முழக்கம்.

·     அறுபது நாட்களாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்களை சந்திக்க மறுப்பதற்குக் காரணம் என்ன? போராடும் விவசாயிகள் எல்லாம் பாகிஸ்தானியர்களா? என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சாடல்.

·     மோடியின் ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை அதிகரிப்பு என்று இருந்தாலும், மோடியின் பிம்பத்தை உயர்த்துவதில் மட்டுமே அக்கறைக்காட்டப்படுகிறது என மூத்த பத்திரிக்கையாளர் ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.

·     மேற்கு வங்க மக்களின் தேச உணர்வையும் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ளாமல், தங்களது ஹிந்துத்துவா சித்தாந்தத்தை திணிக்கும்வரை மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு எந்த வாய்ப்பும் இருக்காது என மூத்த பத்திரிக்கையாளர் சிக்கா முகர்ஜி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

·     கரோனா தொற்று காரணமாக உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார சவால்கள் குறித்து அய்க்கிய நாடுகள் மன்றம் அமைத்துள்ள 20 பேர் கொண்ட உயர்மட்ட அறிஞர்கள் குழுவில் இந்தியாவின் பொருளாதாரப் பேராசிரியர் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     டில்லியில் இன்று விவசாயி அமைப்புகள் நடத்த உள்ள டிராக்டர் பேரணியில் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டு டிராக்டரை இயக்கிட முன்வந்துள்ளனர்.

தி டெலிகிராப்:

·   குஜராத் சுவுராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் பசு மாட்டுச் சாணம், கதிரியக்கத்தை தடுக்கும் என ஆய்வு அறிக்கை அளித்ததற்கு இந்திய விஞ்ஞானிகள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முழுமையான ஆய்வு மேற்கொள்ளாமல் அரசியல் காரணங்களைக் கொண்டு முடிவெடுக்கக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

பிபிசி நியூஸ் தமிழ்:

·   புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து குடியரசு தினத்தன்று டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் டிராக்டர் போராட் டத்தை தமிழக விவசாயிகள் நடத்தவுள்ளனர். பலத்த சிக்கல்களுக்கும், எதிர்ப்புகளுக்கு இடையில் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

- குடந்தை கருணா

26.1.2021

Comments