பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்குத்தான் உச்சபட்ச அதிகாரம்

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில்

 புதுடில்லி,ஜன.21- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், அப்துல் நசீர் மற்றும் இந்து மல்கோத்ரா அமர்வில் நேற்று (20.1.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘‘பேரறி வாளனை விடுதலை செய்யும் முழு அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டும்தான் உள்ளது. இந்த விவ காரத்தில் அரசமைப்பு பிரிவு 72, 161 அடிப்படையிலும் ஆராய வேண்டி யுள்ளது. நாட்டின் பிரதமர் கொலை செய்யப்பட்டு இருப்பதால், அவர் களை விடுதலை செய்யக் கூடாது,’’ என்றார்.   பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கர நாராயணன், பிரபு வாதத்தில், ‘‘பேரறிவாளனை தமிழக ஆளுநர் விடுதலை செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எந்தவித பதில் மனுவையும் மத்திய அரசு தரப்பில் தற்போது வரை தாக்கல் செய்யவில்லை.

இதுகுறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைக் கூட ஆளுநருக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

ஆனால், கடந்த இரண்டு வரு டங்களுக்கும் மேலாக அது நிலுவையில்தான் இருக்கிறது. அதனால் இவை அனைத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டு பேரறிவாளன் விடுதலை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை இன்று பிற்பகல் 2மணிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments