தை முதல் நாள் புத்தாண்டின் தொடக்கம் என்போம்!

ஏருழுதல் பாவமென்றே இந்த நாட்டில்

                எழுதிவைத்துப் பிழைக்கின்ற எத்தர் கூட்டம்

நாரதனைக் கிருஷ்ணனவன் கூடிப் பெற்ற

                ஆறுபத்தில் முதற்பிள்ளைபிரபவதன்னை

பாரினிலே தமிழாண்டுக் கணக்கின் தோற்றாய்

                பகர்வதனை ஏற்றிங்கே தமிழர் என்று

வீரியமாய்த் திரிகின்ற பேர்கள் எல்லாம்

                வீணர்களே; ஆரியர்கால் பிடிப்போர் தாமே?

 

இத்தரையில் சங்கம்பல வளர்த்த தென்றும்

                இயற்றமிழாய் இசைத்தமிழாய் கூத்தாய் ஆன

முத்தமிழாய் முதன்முதலாய் முகிழ்த்த தென்றும்

                முன்தோன்று மூத்தகுடிப் பிறந்த மக்கள்

புத்தாக்க இலக்கியங்கள் படைத்தா ரென்றும்

                புயமுயர்த்திப் பெருமைகளைக் கூறி விட்டு

 சித்திரையைத் தமிழாண்டின் தொடக்கம் என்போர்

                சிறியர்களே; சனாதனத்தின் அடிமை கள்தாம்!

 

சமற்கிருதம் உயர்ந்ததென்று கூறும் அந்த

                சங்கிகளின் அடிவருடிக் கவிழ்ந்தோர் இங்கே

அமிழ்தான அன்னைமொழி தமிழைத் தள்ளி

                ஆரியத்தார் கூறுகின்ற வடக்கர் ஆண்டில்

அமைகின்ற சித்திரைதான் தொடக்கம் என்றே

                அடம்பிடித்துக் கொண்டாடி மகிழ லாமோ?

தமிழ்நாட்டில் தமிழணுவுக் குற்றோர் எல்லாம்

                தைமுதல்நாள் புத்தாண்டின் தொடக்கம் என்போம்!

- ஓவியக் கவிஞர் பெரு.இளங்கோவன்

Comments