ஏட்டுத் திக்குகளிலிருந்து

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடனை அந்நாட்டு காங்கிரஸ் உறுதிப்படுத்தியது. இதன் மூலம் கலவரம் செய்து ஆட்சியைக் கவிழ்த்திட முயன்ற தற்போதைய அதிபர் டிரம்பின் முயற்சி தோல்வியடைந்தது. அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல் இப்போது எங்கும் எதிரொலிக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     கர்நாடகாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய பார்ப்பன அர்ச்சகர்களை திருமணம் செய்யும் பார்ப்பன பெண்களுக்கு ரூ.25000 திருமண உதவித் திட்டமும், ரூ. 3 லட்சம் வரை நிதிப் பத்திரங்களும் கொண்ட இரு திட்டங்களை மாநில அரசின் பார்ப்பன வளர்ச்சி போர்டு முடிவெடுத்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மதம் மாறி திருமண தடைச் சட்டத்தை எதிர்த்து .பி.யில் தொடரப்பட்ட வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் சனவரி 15ஆம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.

·     ஒடிசாவில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அசோக் மிஸ்ரா தலைமையிலான உயர் நிலைக் குழுவை அரசு அமைத்துள்ளது

தி டெலிகிராப்:

·     உத்தரப்பிரதேசத்தில் கோவிலில் வழிபடச் சென்ற அங்கன்வாடி பெண், அக்கோவிலின் சாமியார் சத்ய நாராயண் மற்றும் அவனது கார் ஓட்டுனர் ஜஸ்பால் சிங், அவனது சீடன் வேத் ராம் ஆகியோரால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து விசாரித்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்,  அந்த பெண், இரவில் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்திருந்தால் அல்லது குடும்பத்துடன் வந்திருந்தால் குற்றத்தைத் தவிர்த்திருக்க முடியும் என கூறியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

·   "தேர்தல் முடிவுகளுடன் நான் உடன்படாதபோதும், ஜனவரி 20ஆம் தேதி முறைப்படி ஆட்சி மாற்ற நடவடிக்கை இருக்கும். நான் எப்போதும் தெரிவித்து வந்ததை போல, சட்டப்பூர்வ வாக்குகள் எண்ணப்படும்வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினாலும், இந்த கருத்தை வெளியிடும் முன்பாக, அமெரிக்கா கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இல்லாத வன்முறையை புதன்கிழமை கண்டது.

- குடந்தை கருணா

8.1.2021

Comments