மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு - ஒரு பார்வை!

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒருவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட வழக்கு விசாரணை யின் போது, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு அதிர்ச்சிகரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேடிவாலா, "Skin-to-skin contact with sexual intent" அதாவது பாலியல் நோக்கத்துடன் ஒருவரை ஆடையில்லாத உடலோடு தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும் என்றும், 'Mere groping' will not fall under sexual assault அதாவது பாலியல் நோக்கத்துடன் விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்குக் கீழ் வராது என்றும் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆடைகளைக் கழற்றி, அவரது ஆடைகளுக்குள் கைகளை விட்டு உடல் தொடர்பில் ஈடுபடாமல், மார்ப கங்களை ஆடைக்கு மேல் வெறுமனே தொட்டால் அது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போக்ஸோ சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் நோக்கத்துடன்  குழந்தையின் தனிப்பட்ட பகுதிகளைத் தொடுவதன் மூலமோ அல்லது குழந்தையைக் குற்றம் சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட உறுப்புகளைத் தொட வைப்பதன் மூலமோ ஊடுருவாமல் உடலைத் தொடுவதை உள்ளடக்கியது என்றும் நீதிபதி தெரிவித்துளார்

பாலுணர்வு நோக்கத்துடன் ஒருவரைத் தொடுவது. குறிப்பாக, அப்படித் தொடப்படுவதை விரும்பாதவரைத் தொடுதல் என்பதை ஆங்கிலத்தில் Groping என்பார் கள். தடவுதல் என்று எளிமையாக இதைப் பொருள் கொள்ளலாம். இந்த Groping என்பதைத்தான் பாலியல் குற்றமல்ல என்கிறது மேற்படித் தீர்ப்பு. மேலும், நீதிமன்ற உத்தரவு தோலுடன் தோல் கொள்ளும் தொடர்பைப் பற்றிப் பேசுகிறது. அப்படியானால், ஆடையின் மேல் அத்துமீறித் தடவுவது பாலியல் வன்முறை அல்லது அத்துமீறலில் வராது என்று ஆகிறது என்பது கவனிக்கத் தக்கது.

தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் என்ற பேச்சுகள் இருக்கும் ஒரு காலகட்டத்தில் - சூழ்நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்வேறு கேள்வி களையும் எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரை சிறுமிகளின் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க தவறான தொடு தல், தவறான பார்வை குறித்து கடந்த 5 ஆண்டுகளாக விழிப்புணர்வு பேரணிகள், பரப்புரைகள் நடந்துவரும் நிலையில் நாக்பூர் அமர்வு நீதிபதியின் இந்தக்கருத்து அதிர்ச்சிகரமானதாக உள்ளது என்று பெண்குழந்தை பாதுகாப்பு தொடர்பான அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

"தீர்ப்புகள் நீதிபதிகளின் வியாக்கியானத்தைப் பொறுத்து அமைகிறது" என்று தந்தை பெரியார் கூறியதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

எந்த நோக்கத்தில் ஒரு பெண்ணைச் சீண்டுகிறான் என்பதுதானே முக்கியம்? இதில் அரை குறைத்தனம் என்பது, சந்து பொந்துகளில் தாராளமாக நுழைந்து குற்றவாளிகள் தப்பி ராஜநடை போடலாம் என்பதற்கான ராஜபாட்டையை நீதிமன்றமே திறந்து விடலாமா?

இது தீர்ப்பா? கருத்தா? எதுவாக இருந்தாலும் இது மறு ஆய்வுக்கும், கருத்துக்கும் உட்படுத்தப்பட வேண்டும். பெண்ணியவாதிகளின் குரல் இத்திசையில் ஓங்கி ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

Comments