நெஞ்சு பொறுக்குதில்லையே!

பிஜேபி சாமியார் ஆளும் .பி. காட்டு விலங்காண்டிகளின் வேட்டைக்காடாகி விட்டதா?

உத்தரப் பிரதேசத்தில்  கோவில் ஒன்றில் அர்ச்சகர் மற்றும் அவரது உதவியாளரால் ஆசிரியை ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பிறப்புறுப்பில் திரிசூலத்தைச் சொருகி கொலை செய்துள்ளனர். பிறப்புறுப்பில் சொருகப்பட்ட திரிசூலம் பெண்ணின் நுரையீரல்வரை சென்று சிதைத்துள்ளது. உடற்கூறு அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. என்னே கொடுமை! கொடுமை!! இது நடந்தது எங்கு தெரியுமா?

உத்தரப் பிரதேசம் பதாயு மாவட்டத்தில் உள்ள சீதாராமன் கோவிலில் உள்ள பூசாரி சத்யநாராயணன் தாஸ் மற்றும் அவருக்கு உதவியாளராக இருப்பவர் யசுபால்கேது திரிபாடி இருவரும் கோவிலிலேயே தங்கி பூஜை மற்றும் அப்பகுதியில் நடக்கும் நிகழ்வுகளுக்கு யாகம் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கும் வேலையையும் செய்து கொண்டு வந்தனர்.

 இந்த நிலையில் கடந்த திங்கள் அன்று கோவில் கிணற்றில் பெண் ஒருவர் உடல் மிகவும் சிதைவடைந்த நிலையில் மிதப்பதைக் கண்ட சிலர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். நிகழ்விடத்திற்கு வந்த காவலர்கள் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி அந்தப் பெண் யார் என்று விசாரணை செய்துவந்தனர்.

விசாரணையில் அந்தப் பெண் அப்பகுதியில் உள்ள அரசு நடத்தும் சிறுவர் பள்ளியில் ஆசிரியராக பணியற்றி வருகிறார்.

கோவிலுக்கு அருகில் உள்ள பள்ளி அது. மேலும் தற்போது கரோனா தொற்று காரணமாக பள்ளியில் பணியாளர்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர். அந்தப்பள்ளியில் அனைத்துப் பொறுப்பையும் கொலை செய்யப்பட்ட ஆசிரியையே தனியாளாக கவனித்து வந்திருக்கிறார். இவர் தனியாக இருப்பதைத் தெரிந்து கொண்ட கோவில் அர்ச்சகன் சத்யநாராயணன் தாஸ் மற்றும் அவரது உதவியாளர் யசுபால் கேத் இருவரும் சேர்ந்து அவரைக் கோவிலுக்கு அழைத்துள்ளனர். 

அழைப்பது அர்ச்சகன் என்று நம்பி கோவிலுக்குச் சென்றுள்ளார் ஆசிரியை. அவ்விரு குரூரர்களும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.  மேலும் அவர் வெளியே சொல்லி விடுவார் என்று எண்ணி அவரைக் கொலை செய்ய முடிவு செய்தனர். அங்கிருந்த சிலையின் முன்பு வைத்திருந்த திரிசூலத்தை எடுத்து அவரது பிறப்புறுப்பில் சொருகி யுள்ளனர். அந்த கம்பி அவரது நெஞ்சு வரை பாய்ந்து நுரையீரலைச் சிதைத்துள்ளது. உடற்கூறு அறிக்கையில் இந்த கொடூர நிகழ்வுகள் வெளிவந்துள்ளது.

கடவுளும், சூலமும் எதற்குப் பயன்பட்டுள்ளது என்று பார்த்தீர்களா?

 இந்தக் கொலை தொடர்பாக முதற்கட்ட விசாரணை செய்த காவல்துறையினர் பெண் தற்கொலை செய்துகொள்ள கிணற்றில் குதித்துள்ளார் என்றும், அப்போது அவரது உடலில் அடிபட்டு மரணமடைந்துவிட்டார் என்றும் பதிவு செய்துள்ளனர். மேலும் கோவில் அர்ச்சகன் மற்றும் அவரது சீடனுக்கு இந்த கொலையில் எந்த தொடர்பும் இல்லை என்றும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர். இதுதான் பிஜேபி சாமியார் ஆட்சியின் லட்சணம்!

 பிரச்சினை பெரிய அளவில் வெடித்த நிலையில் உடற்கூறு அறிக்கையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்த நிகழ்வு வெளிவந்த பிறகு முதலில் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அர்ச்சகனும், அவரது சீடனும் இந்த கொடூர செயலைச் செய்த பிறகு அருகில் உள்ள கோவிலில் இருந்து மற்றொரு அர்ச்சகனும் அங்கு வந்து பெண்ணை சீரழித்துள்ளான். பின்னர் மூவரும் சேர்ந்து பெண்ணைக் கொலை செய்து கோவில் வளாகத்தில் சிதறிக்கிடந்த ரத்தத்தை பெண்ணின் ஆடைகளைக் கொண்டு துடைத்துள்ளனர். 

 இக்கொடூரக் கொலை தொடர்பாக மாவட்ட காவல்துறை ஆணையர் சித்தார்த் வர்மா தனது தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். முதல்கட்ட விசாரணையில் அர்ச்சகன் மற்றும் அவரது சீடன்கள் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று தொடர்ந்து கூறி வந்தனர்.  பெண்ணின் ரத்தம் படித்த ஆடைகள் மற்றும் பெண்ணின் உடலைச் சிதைக்க பயன்படுத்திய மண்வெட்டி, பெண்ணின் பிறப்புறுப்பில் செலுத்தப் பட்ட திரிசூலத்தில் இருந்த சிதைத்த உடல் உறுப்புக்கள் போன்றவை கோவிலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பின்பு அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அதன் பிறகு நடந்த தொடர் விசாரணையில் தாங்கள் குற்றவாளிகள் என்பதை  வேறு வழியின்றி அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

 கடந்த செப்டம்பர் மாதம் இதே போன்று ஒரு கொடூர பாலியல்வன்கொடுமைக் கொலை உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடந்தது; அந்த கொலையை மறைக்க அரசும் காவல்துறையும் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. காவி சாமியார்ஆட்சியில் 2016-ஆம் ஆண்டிலிருந்தே உத்திரப் பிரதேசத்தில் சிறுமிகள், குழந்தைகள் போன்றோர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. ஹத்ராஸ் நிகழ்வு நடந்து அந்தப் பரபரப்பு முடிவதற்குள் மீண்டும் கோவிலுக்குள் வைத்து மற்றொரு நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் கத்துவா கோயில் ஒன்றில் அடைத்து வைத்து ஆசிபா என்ற எட்டு வயது சிறுமியை கோவில் அர்ச்சகன் உட்பட  சிலர் 7 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யவில்லையா?

காஞ்சிபுரம் மச்சேந்திரநாதன் கோயிலில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் எத்தகைய லீலைகளில் ஈடுபட்டான்! சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அர்ச்சகர் பத்ரிநாத் காமலீலையை அரங்கேற்றவில்லையா?

கோயில்களின், அர்ச்சகர்களின் யோக்கியதை இதுதானா?

கோயில், அர்ச்சகன், சூலம் - சமூகக் கொடூரத்தின் கருவிகளா? சிந்திக்கவும்!

Comments