ஒரே பிரச்சினை - இரண்டு பார்வை!

கவிஞர் கலி. பூங்குன்றன்

சாத்திரம், சம்பிரதாயம், ஆகமம் என்பது எல்லாம் நமக்கு மட்டும்தான். நமக்காக சட்டம் - வளையவே வளையாது.  ஆனால், பார்ப்பனர்களுக்கோ பாதாரவிந் தம் வரை வளைந்து கொடுக்கும்! உண்மை இது - பட்டவர்த்தனமான உண்மை!

இவ்வாரம் (29.1.2021) வெளி வந்துள்ள ஆர்.எஸ்.எஸின் வார இதழானவிஜய பாரதத்தில்இரண்டாம் பக்கத்தில் ஒரு தகவல் கட்டுரை.

தேச காரியத்திற்கு பரிகாரம் தேவையில்லை

திலகர் பெருமான் சுதந்திர இயக்க வளர்ச்சியின் பொருட்டு சென்னைக்கு வந்திருந்தார். மக்கள் அவருக்கு மாபெரும் வரவேற்பளித்து மகிழ்ந்தனர்.

சென்னையிலுள்ள தலைவர்கள் அவரை ஆலயம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். ஆலய அர்ச்சகர் அவரை நேராகக் கர்ப்பகிரகத்துக்குள்ளேயே அழைத் துச் சென்று விட்டார். தேசபக்தரான அந்த அர்ச்சகர் திலகரின் இறைபக்தியையும், தீவிரமான வைதீகப் பழக்கத்தையும் ஏற்கெனவே அறிந்திருந்தவர். திலகர் பெயரால் அர்ச்சனை செய்ய வேண்டு மெனக் கேட்டுக் கொண்டார் அவர்.

திலகர் அர்ச்சகரிடம், “இந்த அர்ச் சனைகளை ஏற்றுக்கொள்ளும் தகுதி இப்போது எனக்கில்லை. ஏனென்றால் நான் அந்நிய நாட்டிற்கு கடல் கடந்து பயணம் செய்துவிட்டு வந்திருக்கிறேன். அதற்கு இன்னும் பரிகாரம் கூட செய்து கொள்ளவில்லைஎன்று கூறி மறுத்தார்.

ஆலய அர்ச்சகர்தாங்கள் கப்பல் பயணம் செய்து வெளிநாடு போனதே தாய்நாட்டுப் பணிக்காகத்தானே! நல்ல லட்சியத்துடன் செய்யும் தொண்டுக்கு பரிகாரமெல்லாம் தேவையில்லைஎன தெரிவித்தார்.

இதன் பின்னர் திலகர் அர்ச்சனை செய்து கொள்ள இசைவு தெரிவித்தார்.”

கவனிக்கவும் - நன்றாகக் கவனிக்கவும் - சென்னை வந்த திலகரை ஆலய அர்ச்சகர் எதுவரை அழைத்துச் சென்றார்? கோயிலின் கர்ப்பக்கிரகத்துக்குள்ளேயே அழைத்துச் சென்றார்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற - இந்து மதத்தைச் சேர்ந்த பார்ப்பனர் அல்லாதார் கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கோரினால்அடேயப்பா! எத்தனைக் கூச்சல்! கூக்குரல்! எத்தனைக் களேபரம்! அது எப்படி என்ற ஆவேசம்!’

கர்ப்பக்கிரகம் என்றால் விளை யாட்டா? ‘கண்ட நாயும்நுழையும் இடமா? அதற்கென்ற கட்டு - சிட்டுகள் கிடையாதா?’ என்று காட்டுக் கூச்சல் போடுவதில்லையா?

தந்தை பெரியார் குரல் கொடுத்து, திராவிடர் கழகம் போராடி - அந்தக் கொள்கையை இயல்பாகவே ஏற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றி னால்... உச்சநீதிமன்றம் வரை சென்றவர்கள் யார்? பார்ப்பனர்கள் தானே! பின்புலத்தில் இருந்தவர்கள் காஞ்சி சங்கராச்சாரியாரும் - ராஜாஜியும் தானே! என்ன சொன் னார்கள்?

வைகனாச ஆகமத்திலிருந்து சுலோகங் களை சுளை சுளையாக எடுத்துக்காட்ட வில்லையா? ஆகமத்தை எப்படி  மீறலாம் என்று சண்ட பிரசண்டம் செய்யவில் லையா?

அர்ச்சக அன்யாத்லியைஹி ஸ்பு ருஷ்டே சுத்தோடை ரபிஷ்சாயேத் சபத் பிஹி சத்ரியைஹி ஸ்புருஷ் - காலாசைஹி ஸ்னபாயேத்தரிம்.”

பொது வழிபாட்டுக்குரியதான கோயில்களில் கடவுளின் உருவத்தையோ, சிலையையோ அல்லது பிற இது போன்ற உருவத்தையோ கோயில் சடங்குகளை அதிகாரப் பூர்வமாக நடத்தி வைப்பவரான அர்ச்சகர்கள் தவிர, பிற பிராமணன் எவ னாவது தொட்டு விட்டானானால் பின்னர் அந்தச் சிலையோ, உருவமோ தூய நீரினால் சம்ப்ரோட்சணம் செய்யப்பட வேண்டும்என்று எடுத்துக்காட்டவில் லையா?

தாழ்த்தப்பட்டோர் உள்பட இந்துக்கள் தான் என்று தேவையும், அவசியமும் ஏற்படும் தருணத்தில் எல்லாம் உரத்த குரலில் பேசுவார்கள். அதே இந்துக்களான தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகருக்குரிய பயிற் சியை முறையாகப் பெற்று  அர்ச்சகரானால் அந்த இடத்தில் மட்டும் அதெல்லாம் எப்படி சாத்தியம்? பிராமணர்களில்கூட ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான். அர்ச்சக ராக முடியும்; பிராமணனாகப் பிறந்த எல்லாரும் அர்ச்சகராகவே முடியாது என்று அரட்டைக் கச்சேரி அடிப்பதும் அதே பார்ப்பனர்தான் - அர்ச்சகர்கள்தான்!

அர்ச்சகர்கள் பயிற்சி பெறாத அர்ச்சகர் பிரிவைச் சாராத பாலகங்காதர திலகர் சென்னைக்கு வந்தபோது கோயில் கரு வறைக்குள் அழைத்துச்சென்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். இதழானவிஜயபாரதம்புளகாங்கிதத்தோடு வெளியிடுகிறதே - இது எப்படி சாத்தியப்பட்டது என்ற கேள்வி எழவில்லையா?

திலகர் ஒன்றும் பாரம்பரியமான அர்ச் சகர் பரம்பரையைச் சார்ந்தவர் இல் லையே! அத்தகைய ஒருவரை அர்ச்சகர், ஆலயத்தின் கர்ப்பக்கிரகம் வரை அழைத்துச் சென்று ஆராதித்தது எப்படி, எப்படி? அடுத்த வார ஆர்.எஸ்.எஸ். இதழில் பதில் வருமா? அல்லது விளக்கம் தான் கிடைக்குமா?

விஜயபாரதத்தின்அந்தக் கட்டுரை யில் இன்னொரு செய்தியும் இடம் பெற்றுள்ளது.

திலகர் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அர்ச்சகர் கேட்டுக் கொண்டபோது, திலகர் என்ன சொல்லி யிருக்கிறார்?

இந்த அர்ச்சனைகளை ஏற்றுக் கொள்ளும் தகுதி இப்போது எனக்கு இல்லை. ஏனென்றால், நான் அந்நிய நாட்டிற்குக் கடல் கடந்து பயணம் செய்து விட்டு வந்திருக்கிறேன். அதற்கு இன்னும் பரிகாரம்கூட செய்து கொள்ளவில்லைஎன்று மறுத்திருக்கிறார்.

ஆலய அர்ச்சகரோதாங்கள் கப்பல் பயணம் செய்து வெளிநாடு போனதே தாய்நாட்டுப் பணிக்காகத் தானே! நல்ல லட்சியத்துடன் செய்யும் தொண்டுக்குப் பரிகாரமெல்லாம் தேவையில்லைஎனத் தெரிவித்தாராம். இதன் பின்னர் திலகர் அர்ச்சனை செய்து கொள்ள இசைவு தெரிவித்தார்.

கோயில்களுக்கென்று சம்பிரதாயம் உண்டு; ஆகமவிதிகள் உண்டு - அவற்றை  மீறக் கூடாது என்பதில் கறாராக இருக்கக் கூடியவர்கள், புறக் காரணங்களை ஆலய வழிபாட்டுக்குள் கொண்டு வராதீர்கள் - ஆகமங்கள் அவற்றை அணு அளவும் அனுமதிக்காது என்று ஆவேசமாகப் பேசக் கூடிய அய்யன்மார்கள் - கடலைத் தாண்டிச் செல்வது தோஷம் என்று சொல்லக் கூடியவர்கள் - மாளவியா வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்க இலண்டன் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்ட போதுகூட, இந்துமத கோத்திரத்தை விட்டு விடக் கூடாது என்பதற்காக ஒருபிடி இந்திய மண்ணைத் தன்னோடு (மண்ணு ருண்டை மாளவியா என்று அதனால்தான் அழைக்கப்படுகிறார்) எடுத்துச் சென்றதை இன்றளவும் பெருமையாக எடுத்துக் கூறும் கூட்டம்நான் கடல் கடந்து சென்ற தோஷத்தைக் கூடக் கழிக்காத நிலையில் என் பெயரில் அர்ச்சனை வேண்டாம்என்று சம்பந்தப் பட்டவரே - திலகரே கூறியும்கூட, அர்ச்சகப் பார்ப்பானோகடல் கடந்து தாங்கள் சென்றது தாய் நாட்டுக்காகத்தானே!’ என்று பளிச் சென்று பரிகாரம் - கூறுவதில் உள்ள சூட்சமம் புரியவில்லையா?

தோஷங்களும், பரிகாரங்களும் பார்ப் பனர்களைப் பொறுத்து எப்படியெல்லாம் பல்டி அடிக்கிறது பார்த்தீர்களா?

புறக்காரணங்களை அல்லது புறக்காரி யங்களை கோயில் அகக் காரியங்களில் திணிக்க எந்த சாஸ்திரம் சாட்சியம் கூறு கிறது? சங்கராச்சாரியார்கள் சாற்றட்டும், ஜீயர்கள்தான் கூறட்டுமே பார்க்கலாம்.

இந்த இடத்திலே இன்னொரு முக்கிய தகவல் உண்டு. பலருக்கு இந்தத் தகவல் ஆச்சரியமாகவும் இருக்கக் கூடும். ஏன் புதிதாகவும்கூட இருக்கக்கூடும். பல தகவல்கள் மறைக்கப்படுவதாலும், மறக் கப்படுவதாலும் மனுவாதிகள் கொட்டம் அடிக்கிறார்கள்.

இது காந்தியார் தொடர்பு உடையது. காந்தியார் கடல் கடந்து சென்றது எல்லாம் தாய் நாட்டுக்காகத்தான் என்பதை யாரும் மறுக்கப் போவதும் இல்லை.

இதோ காந்தியாரே எழுதுகிறார். 1925 மார்ச்சு 29ஆம் தேதிதர்சன் ஆஃப் கன்னியாகுமரிஎனும் தலைப்பிலான கட்டுரை அது. ‘நவஜீவனில்வெளிவந்த ஒன்று.

கடலைத் தாண்டிச் செல்லுவது இந்து மதத்தில் தீட்டு என்பதுகூறி என்னை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. நான் நுழைந்து விட்டால் கன்னியாகுமரி அம்மன் கோயில் அசுத்தமாகி விடும் என்று கூறுகிறார்கள். ஆனால், என்ன வியக்கத்தக்கது என்றால், அந்தத் திருவிதாங்கூர் நாட்டை ஆண்ட மன்னர் பலராமவர்மா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பயணம் செய்து வந்தார். ஆனால் அவருக்கு அனைத்து மரியாதைகளும் தவறாமல் கோயில் சார்பில் செய்தனர்என்கிறார் காந்தியார்.

திலகர் கடல் கடந்து சென்றால் அது தோஷமில்லை. காரணம், தாய்நாட்டுக் காகவே சென்றார். காந்தியார் கடல் கடந்து சென்றால், அது தோஷமாகி விடுகிறது - தாய்நாட்டுக்காக அவர் கடல் கடந்து பயணித்தாலும்கூட!

இதன் நிலை என்ன? பார்ப்பனர் அல்லாதார் என்ற பார்வையும், பட்டவர்த் தனமான ஜமக்காளத்தில் வடிகட்டிய துவேஷமும்தானே!

சம்பந்தப்பட்ட பாலகங்காதர திலகர்தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல் லர்என்று சொன்னவர்.

இப்பொழுது எல்லோரும் சட்ட சபைக்குப் போக வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். எதற்காக செருப்பு தைப்ப வனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டுபவ னும், சிறு கடைக்காரனும் (The gobblers, the oil mongers and petty - traders) சட்டசபைக்குச்செல்ல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டு மென்ற வரை முறை கிடையாதா?” என்று திலகர் கூறியதை டாக்டர் அம்பேத்கர்காந்தியும் காங்கிரசும் தாழ்த்தப்பட்டவர் களுக்குச் செய்தது என்ன?” (What Gandhi and Congress have done to untouch ables?)  எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

திலகர் மறைந்த போது, காந்தியார் அவரின் பாடையைச் சுமக்க தானும் விரும்பிச் சென்றபோதுபிராமணன் உடலினைத் தீண்டாதே!” என்று காந்தியார் அவமானப்படுத்தப்பட்டதும் உண்டே!

இந்த 2021லும் ஆர்.எஸ்.எஸ். இதழ்கம்பீரமாகதிலகர் பற்றிய பார்ப்பனப் பீதாம்பரக் கொடியைத் தூக்கிப் பிடிப் பதைப் பார்த்த பிறகும் பார்ப்பனர்கள் முன்புபோல் இல்லை - எவ்வளவோ மாறி விட்டனர் என்று துதிபாடும் நம்அடிமை கள்சிந்திப்பார்களா?

தேசத் தந்தை என்று காந்தியார் போற்றப்பட்டாலும், பார்ப்பன வெறியும், ஜாதி ஆணவ வெறியும் கொண்ட தில கருக்குக் கொடுக்கும் மரியாதையை காந் தியாருக்கு அளிக்காது ஆரியக் கூட்டம் - இது கல்லின்மேல் எழுத்து.

பெரியார் என்றும் தேவைப்படுகிறார்.

Comments