ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் அனைவரும் ஒழுக்கம் சார்ந்தவர்கள் என்பதெல்லாம் அசல் பித்தலாட்டம் என்பது அம்பலமானது!

தொழிலதிபர் மோகனைக் கடத்தி ரூ.5 கோடி பேரம்: கோவை இந்து மகா சபைப் பிரமுகர் பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த பெங்களூரு பா... பிரமுகர் யுவராஜ் சுவாமி

காவல்துறையின் கிடுக்கிப் பிடியில் சிக்கினர்!

நமது சிறப்புச் செய்தியாளர்

பா..., ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ‘‘உத்தமர்கள்'', ‘‘ஒழுக்க சீலர்கள்'', ‘‘யோக்கிய சிகாமணிகள்'' என்று தம்பட்டம் அடிப்பவர்கள் - எப்படிப்பட்டவர்கள் என்பது ஒரே நாளில் நடைபெற்ற நிகழ்வுகளில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. மோசடி சங் பரிவார்கள் காவல்துறையின் கிடுக்கிப் பிடியில் சிக்கினர்.

அதன் விவரம் வருமாறு:

ஆர்.எஸ்.எஸ்., பா... மிக ஒழுக்கமான அமைப்பு என்றும்,  சமுதாயத்தில் தேய்ந்துவரும் ஒழுங்கை, ஒழுக்கத்தை மீட்டெடுக்கவேஅவதரித்த' இயக்கம் என்றும், தொண்டு என்ற போர்வையில் ஆரியத்திற்குப் புதிதாக ஆலவட்டம் சுற்றி, அப்பாவி பாமர மக்களை - படித்த பாமரர் உள்பட, சகோதாரத்துவ ஒற்றுமைக்கு கேடு விளைவித்து, ஜாதி, மதங்கள் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, அவ்வப்போது சூழ்ச்சி களையும், தந்திரங்களையும் கையாண்டும் எப்படியாவது பொய்யான வாக்குறுதிகளை தேர்தலில் தந்து மக்களை மயக்கி வாக்கு பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், தங்களது பிரதான அஜெண்டாவாகிய சிறுபான்மையினரையும், சமூகநீதியையும், ஒழித்துக் கட்டும் பணிகளை முதன்மைப்படுத்தி அவை வேகமாக நடைபெறுகின்றன.

அதற்கு வசதியாக சுதந்திரமாக இயங்கவேண்டிய ஆட்சியின் பல அங்கங்கள் கூட அவற்றின் சுய தன்மையை இழந்துள்ள நிலை உள்ளது!

அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமான பகுதியை - ‘‘தோலிருக்க சுளை முழுங்கிய வித்தைபோல்'' - லாவகமாக உரிமைப் பறிப்பு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடைபெறுகிறது.

தமிழ்நாட்டிலும், மற்ற சில மாநிலங்களிலும் பல பழைய கிரிமினல் ரெக்கார்டு -வழக்குப் பதிவு உள்ளவர்கள் - ஆர்.எஸ்.எஸ். - பா...வை வளர்க் கிறோம் என்ற சாக்கில், அவற்றில் தங்களை இணைத்துக் கொண்டு,  தங்கள் பாதுகாப்பு நிலையமாக, இதைப் பயன்படுத்தி வருகின்றனர். காவல்துறையாலும், ஊடகங்களாலும் தொடர்ந்து இது சுட்டிக்காட்டப்பட்டு வருவது மறுக்க முடியாத சாட்சியங்களாகும்!

நேற்று (11.1.2021) ஒரே நாளேட்டில் வந்துள்ள இரண்டு செய்திகள் இதோ:

சென்னை தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய 9 பேர் கைது

ஈரோடு,ஜன.11- சென்னை தொழிலதிபர் உட்பட 3 பேரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டியது தொடர்பாக- கோவை இந்து மகா சபைப் பிரமுகர் உள்ளிட்ட 9 பேரை சத்தியமங்கலம் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 6 பேரையும் தேடி வருகின்றனர்.

சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் தொழி லதிபர் மோகன் (46). இவர் பழமை வாய்ந்த பொருட்களை வாங்கி சேமித்து வைப்பதில் ஆர்வம் கொண்டவர். இவரை ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் கோவை இந்து மகா சபைப் பிரமுகர் பிரேம் ஆகியோர் தங்களிடம் பழமை வாய்ந்த பொருட்கள் இருப்பதாகக் கூறி அழைத்துள்ளனர்.

இதன்பேரில் கடந்த 7-ம் தேதி பண்ணாரியம்மன் கோயில் பகுதிக்கு தொழிலதிபர் மோகன் மற்றும் அவரது நண்பர் ரகுமான் உட்பட 3 பேர் வந் துள்ளனர். அங்கு திடீரென 3 கார்களில் வந்த மர்ம கும்பல் போலீஸார் எனக் கூறி, சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டதற்காக கைது செய்வதாகக் கூறி மோகன் உள்ளிட்ட 3 பேரையும் காரில் ஏற்றி யுள்ளனர்.

பின்னர், சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகர் கிராமத்தில் அன்பு என்பவரது தோட்டத்தில் 3 பேரையும் அடைத்து வைத்துள்ளனர். மூவரையும் விடுவிக்க ரூ.5 கோடி கொடுக்க வேண்டும், இல்லையெனில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

மேலும், மோகனின் மனைவி வித்யாவை தொடர்பு கொண்ட கும்பல் ரூ.5 கோடி தர வில்லையென்றால் உங்கள் கணவரைக் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். இதில் அச்சமடைந்த வித்யா 3 தவணைகளாக ரூ.21 லட்சத்தை, மர்ம கும்பலைச் சேர்ந்த தருமபுரி ரமேஷ் என்பவரது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வித்யா புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் போலீஸார் எனக் கூறி மர்ம கும்பல் மோசடியில் ஈடு பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ரஞ்சித் () ரஞ்சித்குமார், கோவை இந்து மகா சபைப் பிரமுகர் பிரேம், தருமபுரி ரமேஷ், எரங்காட்டூர் ஜீவானந்தம், சபாபதி, கோபாலகிருஷ்ணன், சண்முகம், சேதுபதி, பாபு ராஜேஷ் குமார் ஆகிய 9 பேரை நேற்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 3 சொகுசு கார், ரூ.9 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் இருடியம் தயாரிப்பதற்காக வைத்திருந்த மூலப்பொருட்கள், ஏமாற்றுவதற்காக இவர்கள் ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த உபகரணங்கள், கெமிக்கல் உள்ளிட்டவற்றை பறி முதல் செய்தனர்.

விசாரணையில், கடத்தலில் 15 பேர் ஈடுபட்டதும், 6 பேர் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தக் கும்பல், தமிழகத்தில் பல்வேறு நபர்களிடம் விலை உயர்ந்த இருடியம் இருப்பதாகவும், அதனை விற்பனை செய்வதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

ஆர்எஸ்எஸ் நிர்வாகி எனக் கூறி பெண்ணிடம் ரூ.8.3 கோடி ஏமாற்றிய ஜோதிடர்குட்டி ராதிகாவுக்கு ரூ.1.25 கோடி கொடுத்தது பற்றி பெங்களூரு போலீஸார் விசாரணை

பெங்களூரு, ஜன.11- பெங்களூருவில் ஜோதிடர் ஒருவர் ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகி எனக் கூறி, மத்திய மாநில அரசுகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள நாகர்பாவியைச் சேர்ந்தவர் யுவராஜ் சுவாமி (52). பாஜக ஆதர வாளரான இவர் ஜோதிடம், ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார். விஜயநகரைச் சேர்ந்த ஒருவருக்கு மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.8 கோடி மோசடி செய்ததாக கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.

யுவராஜ் சுவாமி மீது மேலும் சிலர் இதே போன்ற புகாரை தெரிவித்ததால் இவ்வழக்கு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் யுவராஜ் சுவாமி, அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மல்லேஸ்வரத்தைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் யுவராஜ் தன்னிடம் ரூ.8.3 கோடி மோசடி செய்ததாக புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், ‘‘எனக்கு பழக்கமான ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் ஒருவர் மூலம் யுவராஜ் சுவாமி கடந்த 2018-ல்அறிமுகமானார். தன்னை மூத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி என அறிமுகம் செய்துகொண்ட அவர், தேசிய அளவிலான பாஜக மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் படத்தைக் காட்டினார். மேலும் கர்நாடக பாஜக மூத்த தலைவர்கள் பலரும் தனக்கு நண்பர்கள் என கூறினார்.

எனது ஜாதகத்தைப் பார்த்த யுவராஜ் சுவாமி, "அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மத்திய அரசில் முக்கிய பொறுப்புக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது" எனகூறினார். இதற்காக என்னிடம் ரூ.3.8 கோடி பணம் வாங்கினார். எனக்கு சொந்தமான நிலம், அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை விற்று அவருக்கு அந்தப் பணத்தை கொடுத்தேன்.

என்னை டில்லிக்கு அழைத்துச் சென்று பாஜக மூத்ததலைவர்களை சந்திக்க வைத்தார். ஆனால் எதிர்பார்த்ததை போல எனக்கு எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. யுவராஜ் சுவாமி என்னிடம்மேலும் ரூ.5 கோடி ணம் கேட்டார்.என்னிடம் பணம் இல்லாத நிலையில், என் பெயரைச் சொல்லி என் உறவினர்களிடம் ரூ.4.5 கோடி பணம் வாங்கினார்.

ஒருகட்டத்தில் எனக்கு எந்தப் பொறுப்பும் வேண்டாம் எனக்கூறி, என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டேன். அதற்குப் பிறகு என்னிடம் பேசுவதைத் தவிர்த்த அவர், கூலிப்படை மூலம் என்னைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். அவரோடு இருந்த ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளரும் புகார் அளிக்கக்கூடாது என எச்சரித்தார்'' என தெரிவித்துள்ளார்.

குவியும் புகார்கள்

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் யுவராஜ் சுவாமி மற்றும் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் யுவராஜ் வீட்டில் இருந்து ரூ.2.1 கோடி ரொக்கப்பணம், ரூ.1.7 கோடி மதிப்பிலான 3 சொகுசுகார்கள், ரூ.91 கோடி மதிப்பிலான 100 கசோலைகள், 26 இடங்களில் வாங்கப்பட்ட பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் ஆகிய வற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன் மகளுக்கு கர்நாடக அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக யுவராஜ் சுவாமி மீது புகார் அளித்துள்ளார். மேலும் ஓய்வுபெற்ற பொறியாளர் ஒருவர் தன் மகனுக்கு பெங்களூரு மாநகராட்சியில் உதவி நிர்வாக பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். யுவராஜ் சுவாமி மீது ரூ.10 கோடிக்கும் அதிகமாக மோசடி புகார்கள் குவிந்து வருவதால் பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குட்டி ராதிகாவிடம் விசாரணை

இதனிடையே யுவராஜ் சுவாமி கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவியும் நடிகையுமான குட்டி ராதிகாவுக்கு கடந்த மார்ச் மாதத்தில் ரூ.1.25 கோடி வழங்கியது தெரியவந்தது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸ் துணை ஆணையர் நாகராஜ் நேற்றுமுன்தினம் குட்டி ராதிகாவிடம் விசாரணை நடத்தினார். விசாரணை யின் போது அவருக்கும் யுவராஜ்சுவாமிக்கும் உள்ள தொடர்பு, பணப் பரிவர்த்தனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணைக்குப் பிறகு குட்டி ராதிகா, ‘‘யுவராஜ் சுவாமியை எனக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். அவர் என் குடும்ப ஜோதிடர். என் தந்தையின் இறப்பைமுன்கூட்டியே சரியாக கணித்ததால் அவர் சொல்வதை எல்லாம் நம்பி னேன். அவர் தயாரிக்கும் ஒரு வரலாற்று படத்தில் நடிப்பதற்காக என் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சமும், என் சகோதரர் ரவி ராஜ்கணக்கில் ரூ.75 லட்சமும் அனுப்பினார். இதில் எவ்வித முறைகேடும் இல்லை. இந்த விவகாரத்தில் நானும் என் சகோதரரும் போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என தெரிவித்தார்.

இதுபோல பல்வேறு செய்திகள்! இதற்குமுன் ஹிந்துத்துவா அமைப்புகளைச் சார்ந்த பலரும், தங்களுக்குக் கொலை மிரட்டல் (போலியாக) வந்ததாகக் கூறி, பழிபோட்டு, தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு, இவற்றை கோவை, திண்டுக்கல் காவல்துறையினர் கண்டறிந்து அம்பலப்படுத்திய செய்திகளும் முன்பு எல்லா நாளேடுகளிலும் வந்தது.

இந்தக் ‘‘காவிகளை'' ஏன் தமிழ்நாடு காலூன்ற அனுமதி மறுக்கிறது என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளட்டும் அகிலம்!

Comments