தமிழர் புத்தாண்டுப் பொங்கலே வருக!

தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு என்பது தை முதல் நாளே தான் என்பது தமிழ்ப் புலவர்களால் அறுதியிட்டு உறுதி செய்யப்பட்ட ஒன்று!

மாறாக ஆரியத்தின் ஊடுருவல் - பண்பாட்டுப் படை யெடுப்பின் காரணமாக தமிழ் வருடங்கள் 60 என்றும், அவை 'பிரபவ' முதல் 'அட்சய' முடிய உள்ளவை என்றும் புராணப் புளுகைத் திணித்துள்ளனர். இந்த 60 ஆண்டுகளின் பெயர்களுள் ஒன்றுகூட தமிழ்ச் சொல் கிடையாது என்பதிலிருந்தே தமிழ் ஆண்டுக்கும், இவற்றிற்கும் எந்தவித ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பது வெளிப்படை.

இந்த அவலத்தோடு முடிந்து விட்டதா? தமிழ் ஆண்டுகள் பிறந்தது எனும் பெயரில் புராண ஆபாசத்தைத் திணித்துள்ளனர்.

ஆரியம் என்பது அருவருப்பானதும் - அறிவுக்குப் பொருத்தம் அற்றதும் - ஆபாசமானதுமாகும் என்பதற்கு இந்த ஆண்டுகளின் பிறப்பைப் பற்றி எழுதி வைக்கப் பட்டுள்ளவைகளே போதுமானதாகும்.

"ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து, "நீர் அறுபதனாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கும் ஒரு கன்னியை தரலாகாதா என்ன?" என, அதற்குக் கண்ணன் "நான் இல்லா பெண்ணை வரிக்க" என, அதற்கு உடன்பட்டு  எல்லா வீடுகளிலும் பார்த்து வர, இவர் இல்லாத வீடு கிடைக்காததனால், கண்ணனிடம் வந்து, அவர் திருமேனியில் மய்யல் கொண்டு, "நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து வரிக்க எண்ணங் கொண்டேன்" என்றான்.

கண்ணன் யமுனையில் நாரதனை ஸ்நானம் செய்ய ஏவ, முனிவர் அவ்வாறே செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து, அறுபது குமாரர்களைப் பெற, அவர்கள் பெயரே, பிரபவ முதல் அட்சய முடிய இறுதியானவைகளாம். இவர்கள் யாவரும் வருடங் களாகப் பதம் பெற்றனர்" என்கிற அசிங்கமான - ஆரியத் தனமானவற்றை ஏற்று சித்திரை முதல் தொடங்கி பங்குனி வரை உள்ளவற்றை எப்படி ஏற்க முடியும்?

தமிழர் பண்பாட்டு விழா என்னும் பாலில் ஆரியப் பண்பாடு என்னும் நஞ்சைக் கலப்பதை எப்படி ஏற்க முடியும்?

சிவபெருமான் தனது காளை வாகனமாகிய பாசவரிடம் 'நீ பூமிக்குச் செல்வாயாக! அங்கு வாழும் மனிதர்களிடம் நாள்தோறும் மக்கள் எண்ணெய்த் தேய்த்து நீராட வேண்டும்; மாதத்தில் ஒரு நாள் மட்டுமே உணவு உண்ண வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் எனது அருள்கிட்டும் என்றும் சொல்லிவிட்டு வா' என்று சிவன் ஆணையிட்டானாம்.

ஆனால் பாசவர் (காளை) பூமிக்குச் சென்று 'நாள்தோறும் உணவு உண்ண வேண்டும்', மாதத்திற்கு ஒரு முறை எண்ணெய்த் தேய்த்து நீராட வேண்டும்' என்று தவறாகக் கூறியதால் சினமுற்ற சிவன், 'நீ இனி பூமியில் கிடந்து உழவுக்குப் பயனடைவாயாக' என்று காளைக்கு சாபம் விட்டானாம்.

விவசாயம் என்பதே மனுதர்மப்படி பாவ தொழிலாகும். அந்த எண்ணத்தில் இது போன்ற புழுதிகளை எழுதி வைத்துள்ளனர்.

தமிழர்தம் அறுவடைத் திருநாளான தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கலை சங்கராந்தி என்று கூறி இதிலும் மூடப் புராணக் கதையைப் புகுத்தி விட்டனர்.

திராவிட இயக்கம் தான் தமிழர் தம் பண்பாட்டுத் திருநாளான பொங்கலுக்குப் புத்துயிர் ஊட்டி நாடெங்கும் திருப்பத்தை ஏற்படுத்தியது. திராவிட இயக்கம் நடத்திய இதழ்கள், ஏடுகள் எல்லாம் பொங்கல் மலரை வெளியிட்டன.

கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், வீர விளையாட்டுகள் என்று புது மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் தைமுதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்ற தமிழ் அறிஞர்களின் கனவை நனவாக்கி, அரசு சார்பில்  சமத்துவப் பொங்கலை நாடெங்கும் கொண்டாடச் செய்தார். அடுத்து வந்த ஆட்சி பார்ப்பனத்தனத்துடன் ரத்து செய்ததுவெட்கக்கேடு!

கழகத்தின் சார்பில் சென்னையில் கழகத் தலைமையகத்தில் பெரியார் திடலில் தமிழர் விழாவாம் பொங்கல் விழா பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கலுக்கு மட்டுமே வாழ்த்துகள் கூறுவதும், வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும் என்ற புதிய முறை மேற் கொள்ளப்பட்டது.

அறிவியல் சாதனங்களின் வளர்ச்சியால் எல்லா வாழ்த் துகளும் கைப்பேசி மூலம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மத்தியில் உள்ள பா... ஆட்சி பொங்கலுக்கு அளிக்கப் பட்ட விடுமுறையைக்கூட ரத்து செய்ததுண்டு. கடும் எதிர்ப்பின் காரணமாக மாற்றி ஆணை பிறப்பித்தனர்.

கரோனா காலம் என்றாலும் முடிந்தவரை திராவிடர் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவோம்!

அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளில் திராவிடர் புத்தாட்சி ஏற்படும் - திமுக தலைமையில் ஆட்சி அமையும். முன் கூட்டியே வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

பொங்கலோ! பொங்கல்!!

Comments