அழகப்பா - சுவீடன் பல்கலை. சார்பில் கரோனா வைரசை அழிக்கும் மருந்து சேர்மங்கள் கண்டுபிடிப்பு

காரைக்குடி,ஜன.6- கரோனா வைரசின் முக்கிய மூலக்கூறுகளை அழிக்கும் மருந்துகள் மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் கணினி முறையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிர் தகவலியல் பேராசிரியர் ஜெயகாந்தன் கூறியதாவது:

சுவீடன் ஸ்டாக்ஹோம் கே.டி.எச். ராயல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி வேதியியல் மற்றும் உயிரியியல் துறையின் மருத்துவர் அருள்முருகனுடன் இணைந்து, மருந்து சேர்மங்கள் கணினி முறையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வைரஸ் புரத மூலக்கூறுகளை பொறுத்தவரை அதிகளவில் பல மூலக்கூறுகள் இருக்கும்.

இதற்கு ஒரு மருந்து அளிக்கும்பட்சத்தில் அனைத்தையும் சரி செய்யாது. மீதம் உள்ள வைரஸ் மூலக்கூறுகளை கண்டுபிடித்து, உருமாறும் வைரஸ்களின் பல புரதங்களை குறி வைத்து அழிப்பதற்கு தேவையான மருந்துகள் கணினி முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்மருந்து வைரசின் உருமாற்றங்களை சுற்றி செயல்பட உதவும். கரோனா வைரஸ் அதன் புரதங்களை மாற்றிய மைத்து விரைவாக உருமாறுகிறது. பல புரதங்களை குறி வைத்து தாக்கக்கூடிய மருந்து இருந்தால், ஒன்று உருமாறினாலும் மற்றவைகளுக்கும் அது பயனுள்ளதாக செயல்படும்.

பாலோக்சாவீர் மார்பாக்சில், நடமைசின், ஆர்யூ 85053  ஆகிய மருந்துகள் மூன்று வைரஸ் புரதங்களை குறிவைத்து தாக்குவதுடன், வைரஸ் மூலம் பரவும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் திறம்பட செயல்படுகிறது. தவிர திவாண்டினிப், ஓலாபரிப், சோலிப்ளோடசின், கோல்வா டினிப், சோனிடேகிப், ரெகோராபெனிப் மற்றும் பி.சி.. 371 ஆகியவைகளும் சோதனைக்குப் பரிந்துரைக்கப்பட் டுள்ளன. தவிர பைதாலோசையனின், டாடாலாப்பில் போன்ற மருந்துகள் விரைவாக உருமாறும் கரோனா வைரஸை எதிர்ப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை,ஜன.6- மத்தியப்பிரதேசம், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கேரளாவிலும் பறவை காய்ச்சல் பரவி வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடாமல் இருப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கிறோம். வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பொருட்கள் கண்காணிக்கப்படுகின்றன.பறவைக் காய்ச்சல் கிருமி பறவைகள் மூலமாக மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது. இதனால் மனிதர்களுக்கும் இது பரவலாம். எனவே அவ்வாறு நிகழ்ந்து விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று ஏற்படாமல் இருக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

புதிய கரோனா தொற்று பரவலை தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிண்டி அய்.டி.சி. கிராண்ட் சோழா விடுதியில் கரோனா பரவியதை யடுத்து அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டது. மற்ற இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இராதா கிருஷ்ணன் கூறினார்.

 

வர்த்தகப் பற்றாக்குறை 26 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்றுமதி 15விழுக்காடு குறைவு

புதுடில்லி,ஜன.6  2019 ஏப்ரல் முதல் டிசம்பர்வரையிலான 9 மாத ஏற்றுமதியைக் காட்டிலும், 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதகால ஏற்றுமதி 15.8 சதவிகிதம் குறைந்துள்ளது.

2019 ஏப்ரல் முதல் டிசம்பர்வரை 238.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இந்தியாவின் ஏற்றுமதி இருந்தது. இது தற் போது 200.55 புள்ளிகளாக சரிந்துள்ளது.அதேபோல, 2019 டிசம்பரில் மட்டும் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 27.11 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில்,அதுவும் 2020 டிசம்பரில் 26.89பில்லியன் டாலர்களாக குறைந்து, 0.8 சதவிகித சரிவைச் சந்தித் துள்ளது.ஆனால், இதே காலத்தில் நாட்டின் இறக்குமதி அதிகரித்துள்ளது. 2020 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் இறக்குமதி 29.08 சதவிகிதம் குறைந்து 258.29 பில்லியன் டாலராக உள்ளது. இதுவே 2019-20 ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில் 364.18 பில்லியன் டாலர்களாக இருந்தது.  ஒப்பீட்டளவில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் இறக்குமதி குறைந்திருந்தாலும், ஏற்றுமதி அதிகரிக்க வில்லை.2019 டிசம்பர் மாதத்தை விட 2020 டிசம்பரில் தானியங்கள் (262.62 சதவிகிதம்), எண்ணெய்உணவுகள் (192.60 சதவிகிதம்), இரும்புத் தாது (69.26 சதவிகிதம்), தானியங்கள் தயாரிப்பு மற்றும் இதர பதப்படுத்துதல் பொருட்கள் (45.41 சதவிகிதம்), தரைவிரிப்பு உள்ளிட்ட சணல் உற்பத்தி (21.93 சதவிகிதம்) என ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளது. இவ்வாறு ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்ததால், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையும் 2020 டிசம்பரில் 25.78 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 12.49 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வர்த்தக பற்றாக்குறை, 2020 டிசம்பரில் 15.71 பில்லியன் டாலராகஉள்ளது. 2020 ஜூலை மாதத்துக்குப் பிறகு இந்தியா மிகப் பெரிய வர்த்தகப் பற்றாக்குறையை இப்போதுதான் சந்தித்துள்ளது.

 

 

Comments