எது தவறானது? எது சரியானது?

திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் காணொலி வழி (2.1.2021) "தமிழ்நாடும் தேர்தல் அரசியலும்" எனும்  தலைப்பில் ஆற்றிய உரையில் இடம் பெற்ற விழுமியங்கள் மிகவும் முக்கியமானவை.

திராவிடர் கழகம் தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சியோ, கூட்டணிக் கட்சியோ இல்லை. அதே நேரத்தில்  தேர்தலில் நாட்டு மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய முக்கிய கடமை அதற்கு உண்டு. இப்பொழுது மட்டுமல்ல; தந்தை பெரியார் காலத்திலிருந்து அந்தக் கடமையைச் செய்து வந்துள்ளது என்பது மட்டுமல்ல; தேர்தல் களத்தில் அதன் பிரச்சாரமும் வெளியீடு களும் மிக முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளன என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள்.

இன்னும் சொல்லப் போனால் அகில இந்திய அரசியலில் சமூக நீதி அணி, சமூகநீதிக்கு எதிரான அணி என்ற உத்தியைக் கொடுத்ததும்கூட திராவிடர் கழகம்தான் - அதன் தலைவர்தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்து உண்மை நிலை என்ன?

இதனை நாம் தெரிவிப்பதை விட இன்றைய தினம் பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பூர்வமானது என்று அறிவிக்கப்படா விட்டாலும், அந்தக் காரியத்தைச் செய்யக் கூடிய 'துக்ளக்' ஏட்டில் வெளியான ஒரு கருத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

கேள்வி: தமிழக மக்கள் எந்த விஷயத்தில் தனித்துவம்?

பதில்: ஆன்மிகத்தில் முழுகிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிடக் கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களின் தனித்துவம்.

- 'துக்ளக்' 19.2.2020 பக்கம் 29

தங்களை அறியாமலேயே பார்ப்பனர்கள் அசைக்கவே முடியாத- ஆணித்தரமான உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார்கள் என்பது விளங்கவில்லையா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆன்மிகம் வேறு - அரசியல் வேறு என்று விளங்கி விட்டது அல்லவா!

ஆன்மிக அரசியல் நடத்தப் போவதாக அண்டம் குலுங்க அறிவித்த ஒரு சினிமா நடிகர் - இந்த ஆன்மிக அரசியல் தமிழ் மண்ணுக்கு ஒத்து வராது - செல்லுபடியாகாது  என்று தெளிந்த, தெரிந்த நிலையில் தானே "ஆளை விடுங்கள்!" என்று ஒதுங்கிக் கொண்டார்! அதுவரை "புத்திசாலி" தான்!

1971 தேர்தலை விடவா? இராமனை முன்னிலைப்படுத்தி இதே 'துக்ளக்'கும், ராஜாஜியும் கூட வரிந்துகட்டிக் கொண்டு தேர்தல் களத்தில் நின்ற போதும் இதுவரை காணாத மிகப் பெரிய வெற்றியை திமுக பெற்றது எதைக் காட்டுகிறது?

முருகனின் 'வேலைத் தூக்கி'க் கொண்டு ஒரு முருகன் காவி வேடம் தரித்து ஆன்மிக யாத்திரை என்று வேடம் கட்டிக் கொண்டு ஆடிப் பார்த்தாரே - அது என்னாயிற்று?

30.12.2020 நாளிட்ட 'டைம்ஸ் ஆஃப்' இந்தியா' ஆங்கில நாளேட்டில் வெளிவந்த ஒரு கட்டுரையை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தனது காணொலி உரையில் குறிப்பிட்டதும் முக்கியமான ஒன்றாகும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்னிந்திய செயல்பாடுகளுக் கான செயலாளர் எஸ். ராஜேந்திரன் தெரிவித்த கருத்துதான் அது.

"கேரளா, கருநாடகத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் குறைவான வளர்ச்சிதான் தமிழ்நாட்டில்; இங்கு இளைஞர்கள் மத்தியில் தவறான அரசியல் சிந்தனைகள் விதைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கட்சிகளும் இளைஞர்களைத் தவறாக வழி நடத்தி, அவர்களின் சிந்தனையைக் குழப்பியுள்ளன" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் பரப்பியது தவறான கருத்தா, சரியான கருத்தா என்பது அறிவுப் பூர்வமாக சிந்திக்க வேண்டியது.

எது தவறான கருத்து? பகுத்தறிவுப் பேசியதா? இனநலன் ஓம்பப்பட்டதா? சமூகநீதியைத் தூக்கிப் பிடித்ததா? பெண்ணுரி மைக்காகக் குரல் கொடுத்ததா - போராட்டங்கள் கண்டதா?, சமத்துவம், சுயமரியாதை, சமதர்ம விதைகளை ஊன்றியதா?

உண்மைதான் - இந்த முற்போக்கு மானுட வளர்ச்சிப் போக்குகள் சங்பரிவார்கள் பார்வையில் 'தவறான'வைதான்.

சங்பரிவார்க் கூறும் இந்தத் 'தவறான'வற்றைத் தவறாது பின்பற்றியதால்தான் தமிழ்நாடு இந்தியாவிலேயே கம்பீரமாக முதலிடத்தில் தலை தூக்கி நிற்கிறது.

பொருளாதார மேதை, நோபல் அறிஞர் அமர்த்தியா சென் கணிப்பை இங்கு எடுத்துக்காட்டுவது மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

"இந்தியாவில் தமிழ்நாடு பிற மாநிலங்களைவிட வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் வளர்ச்சி தனி சுதந்திர நாடுகளுக்கு இணையானது" என்று கூறியுள்ளார்.

தவறான கொள்கை பரப்பப்பட்டு இருந்தால் இந்த நிலையை எட்டியிருக்குமா? திராவிட இயக்கம் போட்ட அடித்தளமே இந்த மகத்தான நிலைக்குக் காரணம் - இது கல்லின்மேல் எழுதப்பட்ட எழுத்தாகும்.

இந்த உண்மைகளின் அடிப்படையில் அமைந்ததுதான் திராவிடர் கழகத் தலைவரின் காணொலி உரை

Comments