"சாமி நான் உங்கள் பக்கத்தில் உட்கார முடியாது" என்று சொல்லும் அளவிற்கு மூளைக்கு விலங்கு போட்டு விட்டார்கள்

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, ஜன. 16  சாமி நான் உங்கள் பக்கத்தில் உட்கார முடியாது'' என்று அவனே சொல்லும் அளவிற்கு, அவனுடைய மூளைக்கு விலங்கு போட்டு  விட்டார்கள் என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

 ‘‘ஹிந்துத்துவாவும், மதவெறி அபாயமும்!''

10.1.2021 அன்று சென்னை பெரியார் திடலில், சென்னை மண்டல கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில்  ‘‘ஹிந்துத்துவாவும், மதவெறி அபாய மும்!''  என்ற தலைப்பில் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  காணொலி வாயிலாக உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய  சென்னை மண் டலத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப்  பட்ட றையை  சிறப்போடு ஏற்பாடு செய்துள்ள மண்டல தலை வர் மானமிகு முதுபெரும் பெரியார் தொண்டர்  அய்யா தி.இரா.இரத்தினசாமி அவர்களே, மண்டல  செயலாளர் செயல்வீரர் தே.செ.கோபால் அவர்களே,

இந்நிகழ்விற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய மாநில அமைப்புச் செயலாளர் அருமை நண்பர் வி.பன்னீர் செல்வம் அவர்களே, முன்னிலை  ஏற்றிருக்கக்கூடிய துணைப் பொதுச்செயலாளர் தோழர் .இன்பக்கனி அவர் களே, பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்த பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களே, இந்நிகழ்வில் கலந்துகொண்டு ‘‘பெரியார் ஓர் அறிமுகம்'' என்ற தலைப் பில் உரையாற்றியுள்ள, இறுதியில் சான்றிதழ்கள் வழங்க வுள்ள கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே,

‘‘நீதிக்கட்சி- சுயமரியாதை இயக்கம் ‘‘திராவிடர் கழகம்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள பேராசிரியர் தோழர் ..மங்களமுருகேசன் அவர்களே,

‘‘கடவுள் மறுப்புத் தத்துவம்'' என்ற தலைப்பில் உரை யாற்றவுள்ள முதுபெரும் பெரியார் தொண்டரும், கழகத் தின் செயலவைத் தலைவருமான மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களே,

‘‘அறிவியலும் மூடநம்பிக்கையும்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள தோழர் வழக்குரைஞர் .அருள்மொழி அவர்களே,

‘‘ஜாதி ஒழிப்பும், திராவிட இயக்கமும்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள பிரபல வழக்குரைஞரும், வடசென்னை மாவட்டத் கழகத் தலைவருமான  தோழர் சு.குமாரதேவன் அவர்களே

‘‘சமூகநீதி போராட்ட வரலாறும் தத்துவமும்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள கழக வெளியுறவுச் செயலாளர் தோழர் கோ.கருணாநிதி அவர்களே,

‘‘மத்திய அரசின் பாசிச சட்டங்கள்'' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ள கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே,

தோழர்களுக்கு இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகள்!

இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற அருமை மாணவச் செல்வங்களாக இருக்கக்கூடிய தோழர் கள் 48 பேர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்; அதுபோல, மகளிர் தோழர்கள் 28 பேர்; சிறுவர்களாக இருக்கக்கூடிய அன்புத் தோழர்கள் 20 பேர்; கழகத் தோழர்கள் 35 பேர் ஆக மொத்தம் 131 பேர் பங்கேற்கக்கூடிய இந்த அருமை யான பயிற்சி வகுப்பு காலையில் தொடங்கி, சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்து, பங்கேற்று உரையாற்ற, கலந்துகொள்கின்ற அத்துணை தோழர்களுக்கும் இயக்கத் தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாண்டு, திராவிடர் திருநாளான தமிழர் திருநாள் வாழ்த்துகளையும் முதற்கண் உங்கள் தொண்டன், தோழன் என்ற முறையில் உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சியடை கிறேன். நேரிலே  கலந்துகொள்ளாவிட்டாலும், காணொலி மூலம் உங்களைச் சந்திப்பதில் ஒரு புத்துணர்ச்சியை நீங்கள் பெறுவதைப்போலவே, நானும் பெறுகிறேன்.

எனக்கு அளிக்கப்பட்டு இருக்கிற தலைப்பு ‘‘ஹிந்துத் துவாவும், மதவெறி அபாயமும்'' என்பதாகும்.

20 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்களுக்குள்ளாக என்னுரையை முடிக்கவேண்டும். ஏனென்றால், இது போன்ற பயிற்சி முகாம் குற்றாலத்தில் 5 நாள்கள் நடை பெறும். ஆனால், இன்று நடைபெறுவது ஒரு நாள் பயிற்சி  வகுப்பாக சுருக்கி வைத்திருக்கிறார்கள். ஆனாலும், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கவேண்டும் என்பதுதான் இதனுடைய பொருள்.

இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்கின்ற நம்முடைய தோழர்கள் அத்துணை பேரும் மனதில் நன்றாக உள்வாங் கக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள். எனவே, உங்களிடம் லேசாக சொன்னால்கூட, அதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டு பயன்படுத்துவீர்கள் என்பது நமது நம்பிக்கையாகும்.

அமெரிக்காவே இன்றைக்குத்

திணறிக் கொண்டிருக்கின்றது

"ஹிந்துத்துவா" என்பதுதான் இப்போது இந்த நாட்டை யும், உலகத்தையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது. உலகத் தையும் என்று சொல்கின்றபொழுது ஜனநாயகத்தில் மிகச் சிறப்பான நாடு என்கிற அமெரிக்காவே இன்றைக்குத் திண றிக் கொண்டிருக்கின்றது. அதற்குக் காரணம், வலதுசாரி தத்துவமும், காலித்தனமும், வன்முறையும் அண்மையில் அந்த நாட்டையே தலைகுனிய வைத்திருக்கிறது.

அதேபோலத்தான், மிகப்பெரிய அளவிற்கு வலதுசாரி தத்துவத்தைக் கொண்டதுதான் ஹிந்துத்துவா என்பது.

ஹிந்துத்துவா என்று எழுதும்பொழுதுகூட, உங்களுக்கு ஒரு வேண்டுகோள் - தயவு செய்து நீங்கள்ஹிந்துத்துவா' என்றே எழுதுங்கள்; இந்துத்துவா என்று எழுதாதீர்கள். ‘ஹி' என்ற எழுத்தையே போடுங்கள்; தமிழில்' என்று போடாதீர்கள். ஏனென்றால், ஹிந்துத்துவா என்ற வார்த்தை நம்முடையதல்ல. இந்துத்துவா என்று  எழுதினால், ஏதோ நமக்கு சொந்தம் போன்று, நம்மை நெருங்கி வருவதுபோன்று இருக்கும்.

திராவிடம்' என்ற தத்துவத்திற்குநேரிடை எதிரான ஒரு தத்துவம்ஹிந்துத்துவா' தத்துவமாகும்.

இதைப்பற்றி 20 நிமிடம் அல்லது 30 நிமிடங்களில் சொல்வது என்றால், உங்களையெல்லாம் ஒரு விமானத்தில் ஏற்றி, சென்னையைச் சுற்றிக் காண்பிப்பதுபோன்றதாகும்.

இதுதான் மெரீனா கடற்கரை; இதுதான் கலங்கரை விளக்கம்; இதுதான் தலைமைச் செயலகம்; இதுதான் அண்ணா சாலை; இதுதான் பெரியார் திடல்; இதுதான் பெரியார் நெடுஞ்சாலை; இதுதான் அண்ணா அறிவாலயம்; இதுதான் நினைவிடங்கள்; இதுதான் விமான நிலையம் என்று காட்டுவதைப்போல, வேக வேகமாகக் காட்டிவிட்டு, உங்களை இறக்கிவிடுகின்ற சூழல்தான் இந்த 20, 30 நிமிடங்களில் ஏற்படும். என்றாலும், சில நேரங்களில் அதுவும் தேவைப்படுகிறது, காலச் சூழ்நிலையைக் கருதி.

அந்த குறுகிய நேரத்தில், நான் சொல்கின்ற கருத்து களை நீங்கள் உள்வாங்கி, கேட்டும், குறித்தும், உள்ளத்தில் பதிவு செய்யக்கூடிய உங்களுக்கு, சில புத்தகங்களை நான் முதலில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன்.

"ஹிந்துத்துவா" என்ற தலைப்பில் முன்பு மூன்று சொற் பொழிவுகளை காணொலிமூலம் உரையாற்றிய கருத்துகள் விரைவில் நூலாக வெளிவரவிருக்கிறது. அந்த நூல் இன்னும் மிகத் தெளிவாக, ஆதாரப்பூர்வமாக பல்வேறு செய்திகளை, விரிவாக உங்களுக்கு விளங்கக்கூடிய வாய்ப் பைத் தரும்.

ஹிந்துத்துவா  என்ற சொல்லை

முதன்முதலாகப் பயன்படுத்தியது...

ஹிந்துத்துவா  என்ற சொல்லை முதன்முதலாகப் பயன் படுத்தியது வி.டி.சவார்க்கார் ஆவார்.

காந்தியார் கொலை வழக்கில் ஈடுபட்டு, சரியான சாட்சி யம் இல்லை என்பதற்காக விடுவிக்கப்பட்ட, பலமுறை மன்னிப்பு கேட்டுக்கொண்ட மிகப்"பெரிய தேசபக்தர் வீரசவார்க்கர்" என்று சொல்லப்படுகின்ற விநாயக் தாமோ தர் சவார்க்கர் என்ற மகாராஷ்டிரிய  சித்பவன் பார்ப்பனர்.

அவர்தான் ஹிந்துத்துவா என்ற சொல்லை உருவாக் கியது. ஹிந்து மதம் என்பது வேறு; ஹிந்துத்துவா என்பது வேறு என்று ஒரு ஏமாற்று யுக்தியை சொல்வார்கள். துவா என்றால், கொள்கை; ஹிந்து கொள்கை என்பதுதான் அதனுடைய அர்த்தம்.

பசுத்தோல் போர்த்திய ஓநாய்

ஹிந்து கொள்கையை  தேசியமயமாக்கவேண்டும் ; அதனை ஆட்சிக்குக் கொண்டு வரவேண்டும் என்று அவர்கள் நினைத்து, திட்டமிட்டு, பல்வேறு  அவதாரங் களை எடுத்து, பல வகையான ஒப்பனைகளை செய்து இன்றைக்கு எப்படியோ ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள். தேர்தல் பிரச்சாரத்தில்

முதலில் வளர்ச்சி, வளர்ச்சி என்றார்கள் -

வேலை கொடுப்போம் என்றார்கள் -

பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்றார்கள் -

நம்மவர்கள் ஏமாந்தார்கள்.

நாங்கள் அப்பொழுதே சொன்னோம் -  இது பசுத்தோல் போர்த்திய ஓநாய் என்று சொன்னோம். ஆனால், அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை.

சவால் விட்டவர்கள், வரலாற்றில் உலகத்தில் குப்பைத் தொட்டிக்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள்

ஆனால், பசுத்தோல் கொஞ்சம் கொஞ்சமாக இப் பொழுது கிழிந்துவிட்டது - நகர்ந்து கொண்டு இருக்கிறது. இரண்டாவது முறையாக அவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன், அந்தத் தோலையே அவர்கள் கழற்றி வைத்து விட்டு, ‘‘நாங்கள் இப்படித்தான் செய்வோம்; உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று சவால் விடக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள். மக்கள் அதிர்ந் திருக்கிறார்கள்.

ஆனால், ஏற்கெனவே சவால் விட்டவர்கள், இறுதியில் வரலாற்றில் குப்பைத் தொட்டிக்குள் போய்க் கொண்டிருக் கிறார்கள் என்பது இன்றைக்கு நடந்துகொண்டிருக்கின்ற காட்சி - அதைப்பற்றி பின்னால் பேசுவோம்.

எனவே, ஹிந்துத்துவா என்று சொல்லக்கூடிய, ஹிந்து மதம் என்று சொல்லக்கூடியவை நம்முடைய கொள் கைக்குநேர் எதிரான தத்துவமாகும்.

திராவிடம் என்பதற்குநேர் எதிரான தத்துவம் ஆரியம்.

ஆரியத்திற்கு மறுபெயர்தான் - அரசியல் பெயர்தான் -  ஹிந்துத்துவா என்பது!

அந்தஆரியம்' என்பதற்கு அவர்கள் எப்படி பெயர் வைத்திருக்கிறார்கள் என்றால், ‘மேன்மை'யானதாம்.

பெயரிலேயே கேவலத்தை உண்டாக்கி வைத்துவிட்டார்கள்

நம்மவர்களை எல்லாம் கீழாக்கி வைத்திருக்கிறார்கள். ‘சூத்திரன்' என்றால், அவன் அடிமை;  பஞ்சமன்'      என் றால், அவன் மிகக் கீழ்ஜாதிக்காரன். உழைக்கின்றவர்கள், பாடுபடுகிறவர்கள் தொடக்கூடாதவர்கள்; எட்டி நிற்க  வேண்டியவர்கள்; படிக்கக் கூடாதவர்கள்; சண்டாளர்கள்; தஸ்யூக்கள், தீயர்கள்; மிலேச்சர்கள்; இழிவானவர்கள்; கறுப்பர்கள் என்றெல்லாம் ஒதுக்கி, ஒதுக்கி   பெயரிலேயே கேவலத்தை உண்டாக்கி வைத்துவிட்டார்கள்.

மனதில் ஒருவனுக்கு உயர்ந்தவன், உயர்ந்தவன் என்று நினைப்பையும், இன்னொருவனுக்கு, தாழ்ந்தவன், தாழ்ந்த வன் என்று  சொல்லியே அவனுக்கு அந்த உணர்வை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்கள். அவனே, ‘‘சாமி நான் உங்கள் பக்கத்தில் உட்கார முடியாது'' என்று அவனே சொல்லும் அளவிற்கு, அவனுடைய மூளைக்கு விலங்கு போட்டு  விட்டார்கள்.

வி.டி.சவார்க்கார் ஹிந்துத்துவா தத்துவத்தை உருவாக்கியவர் அல்ல!

ஒப்பற்ற திராவிடர்களின் மூளைக்கு விலங்கு போட்ட ஒரு தத்துவம்தான் ஆரியம்.

திராவிடம் முந்தையது;

திராவிடம் நாகரிகமானது

திராவிடம் பண்புள்ளது

சிந்துவெளி நாகரிகம், இப்பொழுது கீழடி நாகரிகத்தை யெல்லாம் மறைப்பதற்குக்கூட காரணம் அதுதான்.

ஹிந்துத்துவா என்ற பெயரை உருவாக்கியவர்தான் வி.டி.சவார்க்காரே தவிர, ஹிந்துத்துவா தத்துவத்தை முதன் முதலில் உருவாக்கியவர் அல்ல. புரிந்து கொள்ளுங்கள்.

ஹிந்துத்துவா  தத்துவத்தை எப்பொழுது பார்ப்பனர்கள் ஆரம்பிக்கிறார்கள் தெரியுமா? வெள்ளைக்காரர்கள் வந்த 19 ஆம் நூற்றாண்டில் இருந்து பார்த்தீர்களேயானால், அந்த ஆண்டிலிருந்துதான் ஹிந்துத்துவா என்ற பெயரைக் கொடுக்கிறார்கள் பார்ப்பனர்கள்.

ராஜாராம் மோகன்ராய் ‘‘பிரம்ம சமாஜ்'' என்ற அமைப்பைத் தொடங்கினார். அவர் ஒரு பார்ப்பனர். பெரிய சீர்திருத்தக்காரர், விதவைகள் - உடன்கட்டை ஏறு வதை ஒழித்தார் என்பது மட்டுமல்ல, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்; சமஸ்கிருதத்தை ஏற்காதவர் அவர்.

இடத்திற்குத் தகுந்தவாறு பேசியவர் விவேகானந்தர்

ஆனால், அதற்கடுத்து வந்த தயானந்த சரசுவதி என்பவர். ‘ஆரிய சமாஜ்' என்பதில், ஆரியரை உயர்த்திக் காட்டவேண்டும் என்பதற்காகவும், ஆரிய கலாச்சாரம்தான் உயர்ந்தது; ஆரிய மொழிதான் உயர்ந்தது என்று சொன்னவர்தான் அவர். குஜராத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு பார்ப்பனர் அவர். அவர் உண்மையான பெயர் தயானந்த சரசுவதி அல்ல. மூல சங்கர் திவாரி என்பதாகும்.

அதற்கடுத்து இதனை உலகளாவிய அளவிற்குமார்க் கெட்டிங்' செய்து, அந்தந்த இடத்திற்குத் தகுந்தவாறு பேசி யவர் யார் என்றால், ‘விவேகானந்தர்'  என்ற நரேந்திரர்.

அதற்கடுத்து, வங்காளத்தில் படித்துவிட்டு, வெள்ளைக் காரர்களை எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, பாண்டிச்சேரியில் ஆசிரமத்தைத் தொடங்கிய அரவிந்த கோஷ் என்கிற அரவிந்தர். இவரும் பார்ப்பனர்தான். விவேகானந்தர் மட்டும் பார்ப்பனர் அல்ல- உயர்ஜாதிக் காரர். இவர் (காயஸ்தா) பார்ப்பனர்களால் பாதிக்கப்பட்ட பொழுது மட்டும், பார்ப்பனர்களைப்பற்றி கண்டித்துப் பேசியிருக்கிறார்.

இவர்களுக்கெல்லாம் என்ன தேவை? வெள்ளைக் காரர்கள் மத்தியில் தாங்கள் மிகவும் உயர்ந்தவர்கள்  என்று காட்டிக் கொள்வதற்காக, வேத நாடு என்று சொன்னார்கள்; லேண்ட் ஆஃப் வேதாஸ் (Land of Vedas) . 

ஆரிய வேதம் முக்கியம் என்று சொல்லி, அதை மொழி பெயர்த்தார்கள்; வேதம் என்றால் முன்பு, வாயால்தான் சொல்ல முடியுமே தவிர, அதனை அச்சிட முடியாது. வெள்ளைக்காரன் கண்டுபிடித்த அச்சு இயந்திரத்தில்தான் அது முதன்முதலாக அச்சாகி வந்தது!

அதற்கு முன்பு, பத்து அவதாரக் கதைகளைச் சொல் லும்பொழுது, அசுரன் வேதங்களைத் திருடிக் கொண்டு கடலுக்குள் புகுந்துவிட்டான்; அதனை மீட்பதற்காகத்தான் மகாவிஷ்ணு பத்து அவதாரம் எடுத்ததில், ஒரு அவதாரம் கூர்ம அவதாரம்; மச்ச அவதாரம் போன்ற 10 அவதாரங் களை எடுத்தார் என்று புராணம் எழுதினர்.

பெரியார் கேட்ட கேள்வி!

பெரியார் கேட்டார், ‘‘வேதம் என்பது வாயால் சொல்வதுதானே - அதனைத் திருட முடியுமா? திருடிக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைக்க முடியுமா? அது என்ன புத்தகமா? அல்லது பொருளா?'' என்று கேட்டார், அந்தக் கேள்விக்கு இதுவரையில் பதில் கிடையாது.

அதே கருத்தை, ஆரியர்கள் தரையின் மூலமாகவும், விமானம் மூலமாகவும், கடல் மூலமாகவும் வந்து திணித்து ஆக்கிரமித்தார்கள் என்பதைத்தான், அந்த வேதங்கள் என்பதை, 18 ஆம் நூற்றாண்டிலேயே மிகப்பெரிய அள விற்கு இந்தப் போராட்டத்தைத் தொடங்கிய, மகாராட்டி ராவில் இருந்த ஜோதிபாபூலே எடுத்துச் சொன்னார். அந்தத் தகவல்களையெல்லாம் புத்தகங்களில் நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

மிக எளிதாக உங்களுக்குச் சொல்லவேண்டுமானால், திராவிடம் நம்முடைய பண்பாடு. சில பேர் சொல்வார்கள், தமிழா? திராவிடமா? என்பார்கள். அதற்கான பதிலை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அருமையாக சொன்னார்.

திராவிடம் என்பதும், தமிழ் என்பதும் வேறொன்று மில்லை. மொழி என்பதைவிட, தத்துவம் என்பது மிக முக்கியமானதாகும்.

திராவிடம் என்பது ஒரு தத்துவம்.

இப்போது ஹிந்துத்துவா என்று சொல்லக்கூடியது அதற்கு நேர் எதிரான தத்துவம்.

திராவிடம் என்பது,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

ஆரியம் என்பது

பிறவியினால் பேதம்

மனிதர்கள் சமமில்லை

ஒருவன் உயர்ந்த ஜாதி - இன்னொருவன் தாழ்ந்த ஜாதி. இதை யார் உருவாக்கியது என்றால், மனிதன் உரு வாக்கினான் என்றால், அதனை மாற்றிக் கொள்ளலாம். கடவுள் உருவாக்கினார் என்று கெட்டிக்காரத்தனமாக சொன்னார்கள். பிரம்மாவின் முகத்தில், தோளில், காலில், தொடையில் பிறந்தான் என்று.

பகவத் கீதையில் கண்ணன் சொன்னான் என்பார்கள்!

இன்னொன்று, கடவுள்களுக்குள் போட்டி - மகாவிஷ்ணு  மும்மூர்த்திகளில் கிருஷ்ணன் அவதாரம் எடுத்தார்; அவர் எப்படி  உண்டாக்கினார் என்றால்,

‘‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்''

நான்கு ஜாதிகளை நானே உண்டாக்கினேன். ஆனால், நானே நினைத்தால்கூட அதனை மாற்ற முடியாது என்று பகவத் கீதையில் கண்ணன் சொன்னான் என்பார்கள்.

இந்த நாட்டில் உள்ள ஒருவன், மதம் மாற முடியும்; கட்சி மாற முடியும்; ஆனால், ஜாதியை மாற்ற முடியாது.

இன்னமும் சட்டத்தில், உச்ச, உயர்நீதிமன்றங்களில் ஆணி அடிக்கப்பட்டு இருக்கின்ற ஒரு செய்தி இது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

எனவே, நம்முடைய திராவிடம் என்று சொல்லக்கூடிய, தமிழர் பண்பாடு, திராவிடப் பண்பாடு என்று சொல்லக் கூடிய, நம்முடைய இனத்தினுடைய பண்பாடு, நாகரிகம் -  செம்மொழியினுடைய தத்துவத்தினுடைய அடிப்படை என்னவென்றால், சமத்துவம்.

யாதும் ஊரே' என்பது மட்டுமல்ல - உலகமே ஒரு குலம் - மனித நேயம் - மனிதப் பார்வை என்பதுதான் நமக்கு மிக முக்கியம்.

அவர்களுக்கு அப்படியில்லை,

உயர்ந்தவன் - தாழ்ந்தவன்

தொடக்கூடியவன் - தொடக்கூடாதவன்

படித்தவன் - படிக்கக் கூடாதவன் என்ற பிரிவினை தான் ஹிந்துத்துவா ஆகும்.

வேதத்தை நிலைநாட்டுவது ஹிந்துத்துவா -

பேதமற்ற பெருவாழ்வு வாழ்வது என்பது திராவிடம்.

- தொடரும்

Comments