பொங்குக பொங்கல்!

'நடிகமணி' டி.வி.நாராயணசாமி

திராவிடர் திருநாள் தமிழரின் பொன்னாள். உழவரின் பெருநாள்- பொங்கல் புதுநாள்.

ஆண்டு தோறும் வருவது போல வந்து விட்டது, பொங்கலோ ! பொங்கல்!

இன்றைய தினம் தமிழர்தம் இல்லங்களிலே மகிழ்ச்சி தவழும், இன்பம் பொங்கும் - பால் பொங்குவது போல!

உழவர் உள்ளங்களில் உற்சாகம் துள்ளி விளையாடும். ஆடவர், பெண்டிர், குழந்தைகள், முதியோர், மாடு, மனை எங்கும் யாவற்றிலும் உவகையின் பிரதிபலிப்பு.

என்றெல்லாம் பழமை விரும்பிகளும் பகுத்தறிவா ளரும் புதுமையிலே நாட்டம் கொண்டோரும் புரட்சிவாதிகளும் இலட் சிய எழுத்தாளரும் அரசியல்வாதிகளும் வியாபார உலகிலே சஞ்சரிப்போரும், உத்தியோகத் துறையிலே உலவிடுவோரும் வாழ் விலீடுபட்டோரும் கவிஞர்களாய் இருப்போரும் அவரது கற்ப னைக்கும் நிலைக்கும் ஏற்ற விதத்திலே பொங்கற் புது நாளைக் குறித்துக் கருத்துகள் வழங்குவதும் கட்டுரைகள் தீட்டுவதும் கவிபாடி மகிழ்வதும் பொங்கிய பொங்கலை உண்டு களிப்பதும் வழக்கமாக நடந்து வருகிறது.

மனிதனுடைய குறிக்கோள்: இன்பமாக வாழ்வதென்றால், அந்த இன்பம் உண்பது, உடுப்பது, உறங்குவது என்ற மூன்றில் மட்டும் இல்லை. பெரியோரின் நினைவு நாள்களைக் கொண்டாடி அவர்தம் பொன்மொழிகளைப் போற்றுதல், திருவிழாக்களில் சுற்றஞ் சூழ வீற்றிருந்து உல்லாசமாகப் பொழுது போக்குதல், நாடகம், சினிமா போன்ற கலைக் காட்சிகளைக் கண்டு களித்தல், நாடு சுற்றி நல்லோர் பலரோடு பழகி, அறிவு விருந்துண்டு கலைகள் பல கற்று, கற்றவற்றை மக்கள் கூட்டத்திற்குப் பயன்படும் வகையில் பணியாற்றி மகிழ்தல் ஆகியவற்றில் அடங்கிக் கிடக்கிறது அந்த இன்பம். இன்று மட்டுமல்ல; பண்டைய காலம் தொட்டு மனித னுடைய நாகரிக வளர்ச்சி பண்பாடு விஞ்ஞானப் புதுமைகளுடன் வளர்ந்து வரும் இந்நாள் வரைக்கும் காலத்திற்கேற்றவாறு அத்தகைய இன்பத்தை மக்கள் விரும்பி வந்திருக்கின்றனர். படித்தோர், பாமரர், பழமை மோகம் கொண்டவர், பகுத்தறிவாளர் ஆக எல்லோர்க்கும் இன்பம் வேண்டும். திருநாள்கள் வேண்டும். மறுக்க முடியாது.

அறிவுக்கொவ்வாத மூடக் கருத்துகளும் பகுத்தறிவுக்கு மாறான பல நிகழ்ச்சிகளும் கொண்ட எத்தனையோ புராணக் கதைகள் திருநாளாக உலவி வரும் நாளில் பொங்கற் புது நாள் புராணங்களில் மூழ்கியிருப்போருக்கும் புதுமை எண்ணத்தவ ருக்கும் பகுத்தறிவாளருக்கும் புலவர்கட்கும் உழவர் பெருமக் களுக்கும் பொதுவான நாளாக இயற்கையை ஒட்டிய திருநாளாக இருந்து வருகிறது.

எங்கும் இன்பத்தின் சங்க நாதம்! ஆனால், எத்தனை பேருக்கு? சிந்தனைக்குரியது. மாந்தர் அனைவருக்குமா? சிந்தனைக்குப் பின் முடிவு காண வேண்டியது, அதோ! வெட்ட வெளியிலே ஓட்டைக் குடிசையிலே வாழ வழியற்று ஏக்கத்தைப் பெற்று விழிகளிலே நீர் பெருக்கிக் குமுறிச் சாகும் கோடிக்கணக்கான பேருக்கு அந்த இன்பம் உண்டா? குடிசை கூட இல்லை. கட்டாந்தரையிலே, நடமாடும் பாதையிலே, மரத்தடியிலே, நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்திலே மிதிபடும் நிலையிலே, "அய்யா! அய்யா வயிறு பசிக்குதையா, ஒரு காலணா கொடுங்க சாமி" என்று குடும்பங் குடும்பமாக ஆதரவற்ற நிலையிலே பேசும் பிணங்களாக சன்னஞ் சன்னமாக அழிந்துகொண்டிருக்கும் மனிதக் கூட்டத்தின் பெரும் பகுதியாக, கோரக் காட்சியாக விளங்குகின்ற அந்த வறண்ட தலைகளுக்கு இன்பம் உண்டா? காய்ந்த வயிறுகளுக்கு ஏங்கித் தவிக்கும் ஏழைத்தாயின் செல்லப் பிள்ளைகளுக்கு இன்பம் உண்டா?

இல்லை! இல்லை! இல்லை!

என்று துன்ப கீதம் பாடுவதைத் தவிர, வேறு       என்ன இருக்கிறது?

ஒரு பக்கத்திலே வானமுட்டும் மாளிகைகள் - அதிலே உலவிடும் ஒய்யாரிகள் - அவர்கள் விழி செல்லுகின்ற திக்கில் செல்வதற்கும் சித்தமாயிருக்கும் சிங்காரச் சீமான்கள் - கண்ணுக் கெட்டிய தூரம் பச்சைப் பசேலென்ற வயல்கள் - கருமேகங்களை உருவாக்கிக் காட்டும் புகைக்கும் பெரிய பெரிய ஆலைகள், தொழிற்சாலைகள்! இன்னும் எத்தனையோ போகப் பொருள்கள். இவை அத்தனையும் வாட்ட வருத்தமில்லாத தொந்தி பெருத்த ஒரு சிறிய மக்கள் பகுதிக்கு என்ற நிலைமை.

வேறு பக்கத்திலே ஒட்டிய வயிறும் உலர்ந்த உதடுகளும், "கட்டக் கந்தை கூட இல்லையே அப்பா" என்று கதறும் ஓட்டாண்டிகளின் ஊர்வலம் நித்தம் நித்தம் வளர்ந்து வரும் புதிய புதிய பிச்சைக்காரப் பரம்பரை. இந்த நிலையிலே எல்லோர்க்கும் இன்பம் ஏது? மகிழ்ச்சி ஏது? திருநாள் ஏது?

உண்மையிலேயே மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் நாள்தானே திருநாள்.

வாழ்க்கைப் பாதையிலே இருக்கின்ற மேடு பள்ளங்கள் சரி செய்யப்பட்டு, இன்னல்கள் நீக்கப்பட்டு, அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, அடிமை வாழ்வு நீக்கப்பட்டு, தேய்ந்த திராவிடம் நிமிர்ந்து நின்று இன்பத் திராவிடமாக விளங்குகின்ற அந்த நாளன்றோ திருநாள்! ஆகவே, கற்றறிந்தோரே! கவி தீட்டுவோரே! கலைஞர் திருக்கூட்டமே! கண் உள்ள என் அருமைத் தோழர்களே! சிந்தனைச் சிற்பிகளே! செயல் வீரர்களே! வாழ் விழந்த திராவிடத்தைப் பாருங்கள். வறுமைத்தாய் கோரத் தாண்ட வமாடுவதைப் பாருங்கள்! கலையிலே, மதத்திலே, கலாச்சாரத்திலே, அரசியலிலே, பொருளாதாரத்திலே ஆதிக்கம் இழந்து வாடித் தவிக்கும் திராவிடப் பெருங்குடி மக்களைக் காணுங்கள்! இன்பம் பொங்கும் இந்நாளிலே வீர உறுதி கொள்ளுங்கள்! எல்லோருக்கும் இன்பம் ஏற்படச் செய்ய உலகத்தில் நாமும் நமது இனத்தாரும் நாடும் வீறு கொண்டு விளங்க புதுமைக் கருத்துகளை அள்ளி அள்ளிக் கொட்டுங்கள். எழுதவல்லோர் எழுதுங்கள். சொற்பொழி வில் வல்லோர் நாடெங்கும் பிற்போக்கை ஒழிக்கப் போர் முரசு கொட்டுங்கள். நடிகப் புலவர்களே! நாட்டின் நிலையை, மக்கள் வாழ்வை நடித்துக் காட்டி வாழ்வு வளம்பெற, மக்கள் வளம் பெற, பகுத்தறிவுப் போர் வீரர்களாகக் காட்சியளியுங்கள்! பிரச்சாரப்  பீரங்கிகளாக மாறி, நமது வாழ்நாளிலே புதுமைத் திராவிடம் மலர, கலை கலைக்காகவே; அதிலே பிரச்சாரம் கூடாதென்று சொல்லும் கபோதிகளைக் கண்ட கண்ட இடங்களிலே அறிவுக் கலை வீசிச் சொல்லாக்காசுகளாக ஆக்குவீர்! இலட்சியவாதிகளாக வாழ்வீர்! எங்கும் இன்ப கீதம் இசைப்பீர்!

திராவிடத் திருநாள் உண்மையிலேயே திராவிடத் திருநாளாக இன்பத் திருநாளாகப் பொங்குக பொங்கல்!

வாழ்க திராவிடம்! வணக்கம்.

Comments