மத்திய அரசின் முகவர்களாக அதிகார எல்லையை மீறலாமா ஆளுநர்கள்?

05.01.2021 நாளிட்டதி இந்து' ஆங்கில நாளேட்டின் தலையங்கம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு களை செயல்படவிடாமல் இருப்பதற்காக ஆளுநர் களின் பதவியை தவறாகப் பயன்படுத்துவது,  குறிப் பாக கூட்டாட்சி தத்துவத்தில் குறுக்கிடும் ஒரு குறும்புத் தனமான செயலே ஆகும். கேரள மாநில ஆளுநர் அரிப் முகமது கான், தனது ஆற்றல் மிகுந்த பேச்சுத் திறனால், உணர்ச்சி மிகுந்த விஷயங்களில் மத்திய அரசை ஆதரித்து, மாநில அரசை அடிக்கடி கேள்வி கேட்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதன் மூலம், ஒரு தலைசார்பான அவரது செயல் நாட்டின் ஜனநாயக நடைமுறையையே பெருமளவில் சீரழித் துக் கொண்டிருக்கிறது.

மாநில அரசு கேட்டுக் கொண்டபடி முதலில் டிசம் பர் 23 அன்று சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட் டுவதற்கு அவர் மறுத்ததே இதனை மெய்ப்பிக்கும்   ஒரு கூடுதல் சான்றாகும். இவ்வாறு சிறப்புக் கூட் டத்தை அவசரமாகக் கூட்டுவதற்கான காரணத்தைப் பற்றி கேள்வி எழுப்பிய ஆளுநர், விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி விவாதித்து அதற்கு ஒரு தீர்வு அளிக்கும் அதிகார எல்லை மாநில சட்டமன்றத்துக்கு இல்லையென்று நினைத்திருக்கிறார். ஆளுநரின் இந்த செயல் சட்டமன்றம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின்  அதிகாரத்தின் மீது மேற்கொள்ளப் பட்ட  ஓர் ஆக்கிரமிப்பு என்பதோடு, மாநில அமைச் சரவையின் அறிவுரைப்படி செயல்பட வேண்டியவர் என்ற அரசமைப்பு சட்டப்படி பெயரளவுக்கு பதவி வகிக்கும் ஆளுநர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் ஆகும்.

கேரள ஆளுநரின் இந்த நடவடிக்கை, முதல் அமைச்சர் கேட்டுக் கொண்டபடி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டு வதற்கு மறுத்த ராஜஸ்தான் மாநில ஆளுநரின் செயலுடன் ஒப்பிட்டுப் பார்க்க இயன்றதாக உள்ளது. சட்டமன்றத்தைக் கூட்டும் விஷயத்தில் ஆளுநருக்கு விசேட அதிகாரம் ஏதும் இல்லை என்றும், ஆளு நரின் செயல் அரசமைப்பு சட்ட விதிகளுக்கு எதிரா னது என்றும் கேரள மாநில முதலமைச்சர் பினாராய் விஜயன் ஆளுநர் கானுக்கு கடிதம் எழுதினார். அவ ரது இந்த நிலைப்பாட்டுக்கு  எதிர்க் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒரு மாற்று தேதியில் சட்டமன்றத்தைக் கூட்டுவ தற்கான கோரிக்கையை அரசு முன்வைத்தபோது, ஆளுநர் அதனை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி கூற வேண்டும். இதற்கு முன்னர் ஒரு முறை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஒரு தீர்மானம் கேரள மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதும் அது பற்றி ஆளுநர் கேள்வி எழுப்பியிருந்தார். அது மட்டுமல்லாமல், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்து அறிக்கை களையும் ஆளுநர் வெளியிட்டுள்ளார். நாடாளுமன் றத்தின் கருத்துடன் மாநில சட்டமன்றம் கருத்து மாறு படுவதே அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கருதுவது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. அது போன்ற சச்சரவுகளில் ஒரு தலைசார்பாக மத்திய அரசை ஆதரிப்பதற்கு தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம், நியாய உணர்வு கொண்ட தொரு பொதுவான அரசியல்வாதி என்ற தனது சொந்த நற்பெயரையும் ஆளுநர் கெடுத்துக் கொண் டுள்ளார். ஆளுநர்களின் இது போன்ற நடத்தை கூட்டாட்சி நடைமுறையையே பலவீனப்படுத்திவிடும்.

தற்போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டி ருக்கும் போராட்டத்தின் மய்யக் கோரிக்கையாக விளங்கும், மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெற வேண்டும் என்று  டிசம்பர் 31 அன்று கேரள சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றிய செய்தியை ஆளுநரின் இந்த முரண்பட்ட செயல்பாடு இருட்டடிப்பு செய்துவிட்டது. ஆளும் இடதுசாரிக் கூட்டணி, எதிர் கட்சியாக இருக்கும் அய்க்கிய முன்னேற்றக் கூட்டணி ஆகியவற்றின் ஆதரவுட னும், அவையில் இருந்த ஒரே ஒரு பா... உறுப் பினரின் எதிர்ப்பும் இன்றி  நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தில்,  இத்தகைய சட்டங்களைப் பற்றியும், நடைமுறையைப் பற்றியும்  முக்கியமான அடிப் படைக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

விவசாயம்  அரசமைப்பு சட்டப்படி மாநில பட்டியலில் மட்டுமே உள்ள ஒரு அதிகாரம் என்பதும், மாநிலங்களை மிகப் பெரிய அளவில் பாதிக்கும் ஒரு விஷயம் என்பதால், மாநிலக் கவுன்சில் கூட்டத்தில் இந்த சட்டங்கள் பற்றி முன்னதாக விவாதித்து இருக்க வேண்டும்  என்பதும் இந்தத் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. மாநிலங்கள் மற்றும் வட்டாரங் களின் நலன்களையும், கவலைகளையும் பற்றி மத் திய அரசு சற்றேனும் அக்கறை காட்டாமல் இருப்பது வாடிக்கையாகவே போய்விட்டது.  மாநிலங்களுடன் கலந்து பேசாமல் இந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது மத்திய அரசின் இத்தகைய அலட்சியப் போக்கினையே காட்டுகிறது. நிதி தொடர்பு அற்ற மசோதாக்களையும் நிதி மசோதாக்கள் என்ற முத்திரை குத்துவதன் மூலம் மாநிலங்கள் அவையின் நோக்கமும், செயல்பாடு களும், நற்பெயரும் பெருமளவில் சீரழிக்கப்பட்டு உள்ளது. எதிர்கட்சியினர் ஆளும் மாநில அரசுகளை அச்சுறுத்திப் பணியவைப்பதற்கு  மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன் படுத்துவது என்பது கூட்டாட்சித் தத்துவம் மற்றும் நடைமுறைக்கு எதிரான மற்றுமொரு தாக்குதலாகும்.

நன்றி: ‘தி இந்து', 5.1.2021

தமிழில்: ..பாலகிருட்டிணன்

 

 

Comments