மனிதனுக்கு உள்ள பெருமை எது?

இல்வாழ்க்கையின் அடிப்படையே மனிதநேயமாக அமைந்து விடுவதால் அந்த வாழ்க்கையின் நடைமுறை ஒவ்வொன்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் மலர்ந்த கமழும் மணிநெறி யாகவே உயர்கிறது.

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்று; தன் செய்வினைப் பயனே;

சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்

புன் கண் அஞ்சும் பண்பின்

மென்கட் செல்வம் செல்வம் என்பதுவே (நற். 210)

என வரும் நற்றிணைப் பாடல் பகுதி மனிதனின் வாழ்க்கை நோக்குக்கே அரியதோர் அடிப்படை இலக்கணத்தை வகுத்துத் தருகிறது. இதுவும் மனிதநேய அடிப்படையிலேயே அமை கிறது என்பது கவனிக்கத்தக்கது.

உலகம் பல காட்சிகளை வழங்குகிறது. . ஆர்ப்பாட்டக் காட்சி அவைகளிலே முக்கியமானது. ஓசையாலும் ஒளியாலும் அவைகளை உண்டாக்குகிற ஆடம்பரப் பொருள்களாலும் நிகழ்த்தப்படுகிற ஆர்ப்பாட்டம் பெரும்பாலோரின் சிந்தனை யையே சிதறடித்து விடுகிறது. சாதாரண பொதுமக்கள் மட்டுமல்லாமல் படித்த பெருமக்களே கூட இந்த ஆர்ப் பாட்டத்தில் மயங்கித் திசை திரும் பிப் போகிறார்கள். புலவர் உலகத்தில் இருந்து வரும் ஆர்ப்பாட்டத் திசைமாற்றல் ஒன்றைப் பின் வருமாறு சொல்லோவியம் செய்கிறார் நமது அவ்வை .

விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்

விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்

பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் - அவர் கவிதை

நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

படித்தவர் உலகத்தையே இப்படி ஆட்டிப் படைக்கிற ஆடம்பர ஆர்ப்பாட்டம் சாதாரணமானவர்களை மிகவாகவே குழப்பிப் போடுகிறது. அவர்கள் வாழ்வு தொடர்பான எது ஒன்றைப் பற்றியும் தவறான கணிப்புகளுக்கே விரைந்து விடுகிறார்கள். அவர்களின் மயக்கத்தை ஒழித்து அவர்களுக்குத் தெளிவு ஊட்ட விரும்பிய புலவர், செல்வம் என்பதற்குக் கொள்ளப்படுகிற பொருளையே மனிதநேய அடிப்படையில் இங்கே மாற்றி அமைக்கிறார்.

இந்தப் பாடலில் வரும் செல்வம் என்ற சொல் பொருட் செல்வத்தையோ புகழ்ச் செல்வத்தையோ குறிக்கும் அளவாக ஒடுங்காமல் மனித வாழ்வின் ஒட்டுமொத்தமான பெரிய பெருமை என்னும் அளவுக்கு விரிகிறது. எல்லோருமே வாழ்வில் பெருமை பெற வேண்டும் என்று விரும்புவது இயல்பாகையால், உண்மையான பெருமை என்ன என்பதை வரைந்து காட்டு கிறார் புலவர். நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வ மன்று என்னும் ஒரே தொடருக்குள் மிக விரிவான வாழ்க்கை நிகழ்ச்சிகளின் ஒரு பெரிய பன்முகத் தொகுப்பே அடங்கியுள்ளது. பொருட் செல்வத்தைத் தேடிக் கொண்டவனை, அதனால் தன் வாகன வசதிகளைப் பெருக்கிக் கொண்டவனைப் பெரு மைக்கு உரியவனாக உலகம் கருதுகிறது. அதேபோல தன் னுடைய செல்வச் செருக்கால் எதையும் அடித்துப் பேசுகிற வனுக்கும் பெரியவன் என்ற மரியாதை இருக்கிறது. இந்த இரண்டின் மூலமும் ஒருவனுக்குப் பெருமை ஏற்படுவதில்லை என்று அடித்துச் சொல்லுவதன் மூலம் பெருமை என்பதைப் பற்றிய மக்களின் பார்வைக் கோணத்தையே முற்றிலும் புதிய திசைக்குத் திருப்புகிறது இந்தப் பாட்டு.

இலக்கணத்துக்கு விளக்கம்

பொருட் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டவன் வீட்டைப் பெரிதாகக் கட்டுகிறான். விரைவாகச் செல்லும் வண்டி வாகனங்களை வாங்கி வரிசையாக நிறுத்துகிறான். இவைகளால் பருமையான ஒரு பெரிய தோற்றம் அவனுக்கு உண்டாகிறது. ஆனால் இந்தப் பொருள்களால், அவனையும் அவன் குடும்பத்தாரையும் தவிர உலகத் திலே உள்ள வேறு ஒரே ஒருவருக்குக் கூடப் பயனோ மகிழ்ச்சியோ ஏற்படுவதில்லை. அதனாலே தான் இது செல்வம் ஆகாது என்கிறார் புலவர். அதே போல, மேற்படிச் செல்வங்களால் ஏற்பட்ட அகங்காரத்தின் காரணமான அவனுடைய தடித்தனமான பேச்சும் யாருக்கும் இன்பமோ வேறு பயனோ விளைவிப்பதே இல்லை. இப்படி,- தன் பெண்டு, தன் பிள்ளை , சோறு, வீடு, சம்பாத் தியம் என்னும் அளவாகச் சுருக்கி உலகத்து மற்றவர்களைப் புண்படுத்தும் பிழைத்தடத்தில் இறங்கிப் போகும் வாழ்க்கை மனித நேயத்துக்கே புறம்பானது; தமிழர்கள் (தொல்காப்பியம் முதலானவைகளில்) அமைத்துக் கொண்ட மனிதநேய மணி நெறிகளுடன் ஒத்துப் போகாதது. எனவே, பயனற்ற வாழ்வுக்கு மக்களைத் திசைதிருப்பி இழுத்துச் செல்பவை இந்தப் போக்குகள். இதை மாற்றித்திருத்தி இயல்பான மனித உணர்வோட்டத்தை மனிதர்களின் நெஞ்சிலே பாய்ச்சா விட்டால் அவர்கள் தாங்களும் கெட்டு மற்றவர்களையும் கெடுத்துப் போடுவார்கள். ஆகையினாலேதான் இந்தப் பாட்டு தவற்றைச் சுட்டிக் காட்டுவதோடு அமையாமல் சரியானது எது என்பதை யும் கொஞ்சம் அழுத்தமாகவே நினைவூட்டுகிறது.

'சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கட் செல்வம்' என்கின்ற வாசகம் மேலே குறித்த தவற்று நடைக்கு ஒரு சரியான திருத் தத்தைச் செய்கிறது. அப்படிச் செய்யும் போதே அரும் பெரும் மனிதநேய மணிநெறி ஒன்றையும் வகுத்துத் தரு கிறது. தம்மைச் சார்ந் தோருக்கு உண்டாகும் துன்பத்தைத் தவிர்ப்பதே ஒரு மனித னுக்கு உயர்ந்த பெருமையைத் தருகிறது என்னும் இந்த வாசகம் அடிப்படையில் மனித உறவுகளைப் பற்றியதாக இருப்பதால் அதுவே நாகரிக நடைமுறைக்கு இலக்கணமும் ஆகிவிடுகிறது. பெருமை எது என்பதைப் பற்றிய கோட்பாட்டில் நிலவிய குழப்பம் நீக்கப்படும் போதே மனிதப்பண்பின் ஒரு பெரும் கூறாகிய இதய நெகிழ்வே மனித வாழ்வின் அடிப்படை யாக அமைய வேண்டும் என்கிற தெளிவும் தெளிவாகப் பிறந்து விடுகிறது.

நன்றி: 'சங்கத் தமிழரின் மனிதநேய மணிநெறிகள்'

முனைவர் சாலினி இளந்திரையன்

Comments