ஆளுங்கட்சியினர் சாதனை என்று கூறுவது எது?

100 சதவிகிதத்தை விட்டுக் கொடுத்து - மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகிதத்தைப் பெற்றிருக்கிறார்களே, இது சாதனையா?

‘‘தமிழ்நாடும் - தேர்தல் அரசியலும்!'' காணொலி சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி!

சென்னை, ஜன. 8  மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவிகிதத்தை நாங்கள் கொடுத்திருக்கின்றோம் என்று தமிழக ஆளுங்கட்சி யினர் பெரிய சாதனையாக  அவர்கள் சொல்கிறார் களே, அதனுடைய இன்னொரு பக்கத்தைப் பார்த் தீர்களேயானால், நம்மிடமிருந்த 100 சதவிகிதம் பறிக்கப்பட்டு இருக்கிறது! அதில் 7.5 சதவிகிதத்தைப் பெறுவதற்கு இத்தனை பாடுபட்டிருக்கிறீர்கள்; இது தான் அவர்களுடைய சாதனையா? என்ற கேள்வி யெழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘தமிழ்நாடும் - தேர்தல் அரசியலும்''

சிறப்புக் கூட்டம்!

2.1.2021   அன்று மாலை  காணொலிமூலம்  நடைபெற்ற ‘‘தமிழ்நாடும் - தேர்தல் அரசியலும்!'' சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள்  உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

நாடாளுமன்றத்திலே

பெரியார் வாழ்க, பெரியார் ஜிந்தா பாத்!

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, நாடாளுமன்றத்திலே "பெரியார்" முழக்கம் - பெரியார் காலத்தில்கூட, பெரியார் வாழ்க, பெரியார் ஜிந்தா பாத் என்று நாடாளுமன்றத்தில் குரல் எழும்பவில்லை.   திரா விடம் வாழ்க, திராவிடம் வெல்க குரல் இன்றைக்கு நாடாளுமன்றத்தில் எழுந்தது. இன்னுங்கேட்டால், கட்சி வேறுபாடின்றி, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க என்று குரலெழுப் பினர்.

தி.மு.. கூட்டணியின் வெற்றி என்பது

எழுதப்பட்ட ஒன்று

திராவிட முன்னேற்றக் கழகம் வகுத்த வியூகம், அதனுடைய பாதுகாப்பு அரணாக திராவிடர் கழகம் நின்றது. எவ்வளவு பெரிய அற்புதமான ஒரு கூட்டணியை அமைத்தது. அந்தக் கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி யல்ல. தேர்தலுக்கான கூட்டணி என்றால், சில பல காலங்களில் அது கலைந்து போயிருக்கும். சீட்டுகள் கலைவதைப்போல. கொள்கைக்கானது அந்தக் கூட்டணி. போராட்டங்களில் இருந்து வடிவெடுத்தது. காவிரிப் பிரச்சினையா? புதிய கல்விக் கொள்கை எதிர்ப்புப் பிரச்சினையா? சமூகநீதிப் பிரச்சினையா? இட ஒதுக்கீடு பிரச்சினையா? ஒவ்வொன்றுக்கும் போராட்டங்களை நடத்தி, நடத்தி தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இணைந்த கட்சிகள் - இந்தக் கூட்டணி ஒரு பலமான கொள்கைக் கூட்டணியாகும். இதனுடைய வெற்றி என்பது எழுதப்பட்ட ஒன்று.

அந்தக் கூட்டணியை நேரடியாக சந்திக்க முடியாமல், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காவிகள் - இன்றைக்குத் தங்கள் வசம் ஆட்சியில்லாமலேயே  தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தும் - காரணம், மடியில் கனம் வழியில் பயம் என்று இருக்கும் அடிமை ஆட்சியாளர்களை இழுத்துக் கொண் டிருக்கிறார்கள் - அவர்களிடம் சில ஆட்சிக் கருவிகள் இருக்கின்றன - அந்தக் கருவிகளை வைத்துக்கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கலாம். ஆகவே, அவர்களும் அடிபணியலாம் என்று நினைத்த காரணத்தினால், அதற்கு நேர் எதிரான ஒரு சூழல் இன்றைக்கு வந்து, இவர்களை எதிர்க்கக் கூடிய தெம்பும், திராணியும் உள்ள ஓரணி இந்தப் பக்கத்தில் உறுதியாக நிற்கிறது வலிமையுடன்!

இன்னொரு பக்கத்தில் தேர்தல் நிலவரத்தில் என்ன  சூழல் இருக்கிறது? நடுநிலையாளர்கள் சிந்திக்கவேண்டும்.  ஏனென்றால், நாம்தான் உண்மையை அப்பட்டமாகப் பேசுவோம். அய்யா சொன்னதைத்தான் நான் சொன் னேன்.

மரண வாக்குமூலம் கொடுப்பவன்

பொய் சொல்லமாட்டான்!

அய்யா ஒருமுறை மிக அழகாக சொன்னார், திராவிடர் கழகம் மேடைகளில் பேசுவது மரண வாக்குமூலம் கொடுப்பதைப்போல என்றார்!

மரண வாக்குமூலம் கொடுப்பவன் பொய் சொல்ல மாட்டான். பொய் சொல்லவேண்டிய அவசியம், மரண வாக்குமூலக் காரனுக்குக் கிடையாது. எனவே எங்களு டையது மரண வாக்குமூலம் போல அப்பட்டமான உண்மை. உண்மையைத் தவிர பொய் கலப்பில்லாத சுத்தமான உண்மையாகும்.

அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, கொள்கை அடிப்படையில் வந்த கூட்டணி பலமாக இருக்கிறது. திராவிடம் வெல்லும் என்பதற்கு முதல் கட்டம் அதுதான்.

இந்தக் கூட்டணியினுடைய தலைவராக இருக்கின்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவராக, செயல் வீரராக, உழைப்பின் உருவமாக இருக்கின்ற சகோதரர் மு..ஸ்டாலின் அவர்கள், இன்றைய எதிர்க் கட்சித் தலைவர், நாளைக்கு ஆளும் கட்சியினுடைய முதல்வர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு- அந்த உரிமையைக் கோரக் கூடிய அளவிற்கு அவருடைய உழைப்பும், ஆற்றலும், திட்டங்களும் மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன நாளும்!

அதேநேரத்தில், மற்றவர்களுடைய நிலை என்ன? என்பதை தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.

தமிழ்நாடு அரசியல் களம் எப்படி இருக்கிறது என் பதை தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.

எதிரணியில் இருப்பது ஒரு கூட்டணியா? அந்தக் கூட்டணியில் இன்னும் பிரச்சினை தீரவில்லை.

எங்களுக்கு இடங்கள் முக்கியமல்ல - இலட்சியங்கள்தான் முக்கியம்!

தி.மு.. கூட்டணியில், இருப்பவர்களைத் தாண்டி, புதிதாக இங்கே இணைகிறவர்கள் ஏராளம் வரிசையாக இருக்கிறார்கள் - அதுவும் கொள்கை ரீதியாக - பதவிக்காக அல்ல. இன்னுங்கேட்டால், எங்களுக்கு இடங்கள் முக்கிய மல்ல - இலட்சியங்கள்தான் முக்கியம் என்று சொல் கிறார்கள்!

அந்த லட்சியத்தைக் காப்பதற்கு, திராவிடர் கழகம் போன்ற அமைப்பு இருக்கிறது என்று கூட்டணியில்  இடம்பெற்ற தோழர்கள், தலைவர்கள் பிரகடனப்படுத்தக் கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.

இந்தக் கூட்டணியில் முதல்வர் யார்? என்று திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டம் கூட்டி, தீர்மானம் போடு வதற்கு முன்பே, மிகத் தெளிவாகவே, கூட்டணியில் இருக்கின்ற பிரதான கட்சிகள் அத்தனையும் முதல்வர் வேட்பாளர் தளபதி மு..ஸ்டாலின்தான் என்று அவர்களே சொல்கிறார்கள்.

இப்படி ஒரு தெளிவான, கொள்கை ரீதியான, வலுவான ஒரு கூட்டணி ஒரு பக்கத்தில்  - திராவிடம் வெல்லும் என்பதற்கு முதல் சாட்சியம் - முதல் சான்று -முதல் காரணம் இது.

இரண்டாவது, அடுத்தபடியாக இந்தக் கூட்டணியை எதிர்க்கின்ற எதிரியினுடைய நிலைமை என்ன? எதிரி என்ற வார்த்தையை நான் தவறாகப் பயன்படுத்தவில்லை. அரசியல் எதிரி என்ற கருத்தில் சொல்கிறேன். அரசியலில் எதிர்தரப்பில் இருக்கின்றவர்களின் நிலை என்ன?

திராவிட இயக்கங்களை - கொள்கைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு

.தி.மு.. என்ற கட்சி - அதற்குப் பெயர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கியபொழுது "அண்ணா தி.மு.." ஆனால் இப்பொழுது உண்மை நிலவரத்தை சொல்ல வேண்டுமானால், வெட்கத்தோடு சொல்கிறேன், நான் எப்பொழுதும் யாரையும் கடுமையாக விமர்சித்துப் பழக்கப்பட்டவன் அல்ல. வேதனையோடு சொல்கிறேன். இன்னுங்கேட்டால், திராவிட இயக்கங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, திராவிடக் கொள்கைகளைப் பாதுகாக்க பாடுபடக் கூடிய ஓர் இயக்கம் திராவிடர் கழகம் என்ற முறையில் துயரத்தோடு சொல்லுகிறேன்.

கடுகு சிறுத்தாலும் காரம் முக்கியம்' என்று சொல்வதுபோல, அதனுடைய உருவம் முக்கியமல்ல - அளவு முக்கியமல்ல - அதனுடைய தன்மை மிகமுக்கியம். இதுதான் அடிப்படை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மூச்சுக்காற்று போல இருக்கக்கூடியது இந்த இயக்கம்!

டில்லியிடம் அடகு வைக்கப்பட்ட .தி.மு..

"அண்ணா" இன்றைக்கு அங்கே இல்லை அங்கே!

"திராவிடம்" அங்கே இல்லை!

எந்த முன்னேற்றமும் அங்கே இல்லை!

அதற்குப் பதிலாக என்ன சூழல்

அங்கே இருக்கிறது?

டில்லியிடம் அடகு வைக்கப்பட்ட .தி.மு..வாக அவர்கள் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.

தமிழகத்தை மீட்போம்' என்ற ஒரு குரல் கொடுத்து, தளபதி ஸ்டாலின் அவர்கள் ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பிரச்சினைகளை எடுத்துச் சொல் கிறார்கள். இந்தக் கொள்கைகளோடு நாங்கள் இருக்கி றோம். சமூகநீதியா? அதைக் காப்பாற்ற வேண்டுமானால், தி.மு.. ஆட்சி அமைந்தால்தான், எங்களால் முடியும் என்கிறார்; செயல்படுகிறார்!

பச்சைத் தமிழர் காமராசர்

காலங்காலமாக இந்த நாட்டில், காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த பச்சைத் தமிழர் காமராசர் கேட்டார்,

‘‘எத்தனை ஆண்டுகாலம் வகுப்புரிமைக்காகப் போராடி - மருத்துவர்களாக எங்களுடைய தோழர்களான, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள்  ஏன் வரக்கூடாது; தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டால், எவன் செத்துப் போய்விடுவான்?'' என்று.

உன்னுடைய "தகுதி - திறமை" என்னவென்று எனக் குத் தெரியாதா என்று காமராசர் கேட்டார். காங்கிரசில் இருந்த காமராசர் கேட்டார்!

ஆனால் கஷ்டப்பட்டு, கலைஞர் காலத்தில்,  எங்குமே இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பை, ஒரு அற்புதமான சூழலை உருவாக்கி, நிறைய அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் வந்தன. அந்த இடங்கள் எல்லாம் இன்றைக்குப் பறிபோய்விட்டன -  நீட் தேர்வு என்பதின்மூலமாக.

கொடுமையிலும் கொடுமை!  நம்முடைய பிள்ளை களுடைய வாழ்வாதாரம் - கிராமப் பிள்ளைகளுடைய வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி  உள்ளது.  ஒரு பக்கத்தில் கார்ப்பரேட் கொள்ளை - இன்னொரு பக்கத்தில் உயர் ஜாதியினரின் பகற்கொள்கை.

இவற்றை எதிர்ப்பது எந்த இயக்கம்? எந்த அணி? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஒப்பனைக்கும், உண்மைக்கும்

இருக்கின்ற வேறுபாடு

இவற்றை மற்றவர்கள் எதிர்க்கவில்லை  - வேஷம் போடுகிறார்கள். தமிழ்நாட்டில் அதனை சொல்லாவிட்டால், வேறு வழியில்லை என்பதற்காக, வேஷம் போடுகிறார்கள். ஒப்பனைக்கும், உண்மைக்கும் இருக்கின்ற வேறுபாடு அதுதான். நாங்களும் எதிர்க்கிறோம்  -ஆனால், அதே நேரத்தில், அதற்காக நாங்கள் எதையும் செய்வோம் என்றெல்லாம் அவர்கள் சொல்லக் கூடும்.

100 சதவிகிதத்தை விட்டுக் கொடுத்து -

7.5 சதவிகிதத்தைப் பெற்றிருக்கிறார்கள்

7.5 சதவிகிதத்தை நாங்கள் அரசு பள்ளிகளுக்கு மட்டும் கொடுத்திருக்கின்றோம் என்று பெரிய சாதனை யாக  அவர்கள் சொல்கிறார்களே, அதனுடைய இன் னொரு பக்கத்தைப் பார்த்தீர்களேயானால், நம்மிடமிருந்த 100 சதவிகிதம் பறிக்கப்பட்டு இருக்கிறது! அதில் 7.5 சதவிகிதத்தைப் பெறுவதற்கு இத்தனை பாடுபட்டிருக் கிறீர்கள். நாங்களும் ஒத்துழைத்திருக்கின்றோம்,  அந்த மசோதாவில் ஆளுநர் கையெழுத்துப் போடுவதற்காக.

இது என்ன நியாயம்?

அது என்ன அவ்வளவு பெரிய சட்டம்?

மருத்துவத் துறை நம்முடைய மாநில அரசின் துறை அல்லவா!

நம்முடைய பிள்ளைகள் படிக்க முடிகிறதா? மருத்துவப் படிப்பிற்காக எத்தனை லட்சம் ரூபாயை செலவழிக்க முடியும்? எத்தனை அனிதாக்கள், எத்தனை சுபசிறீக்கள், எத்தனை பிள்ளைகள் பலியாகியிருக்கிறார்கள், இதுவரையில்.

நீட்' தேர்வை வலிமையாக எதிர்க்கின்ற நேரத்தில், அதனை கடுமையாக எடுத்துச் சொல்லக்கூடிய சக்தி - தமிழகத்தை ஆளும் கட்சிக்கு இருந்திருக்கிறதா?

கிராமத்தில் வேடிக்கையாக ஒரு பழமொழி சொல் வார்கள், ‘‘எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார்'' என்று. அதுமாதிரி, நாங்களும் எதிர்த்தோம் என்பதற்காக நீங்கள் சொல்கிறீர்களே தவிர, உங்களுக்கு வாய்ப்பு இருந்தபொழுது அதனை வலியுறுத்தி நீங்கள் செய் தீர்களா?

நீட்டிலிருந்து விலக்கு வாங்கியவர்

 முதலமைச்சர் ஜெயலலிதா - மறந்துவிட்டதா?

இன்னுங்கேட்டால், நீங்கள் அடிக்கடி ‘‘அம்மா ஆட்சி'' ‘‘அம்மா ஆட்சி'' என்று சொல்கிறீர்களே, அந்த அம்மையா ரின் ஆட்சியில், ஓராண்டு விதிவிலக்கு வாங்கியிருந்தாரே நீட் தேர்விலிருந்து -  அது ஏன் உங்களால் முடியவில்லை? அதே ஆட்சிதானே தொடர்கிறது. அதன் உண்மையைக் கூட நீங்கள் சொல்லவில்லை, மறைத்துவிட்டீர்கள். நீதி மன்றத்தின் வாயிலாகத்தான் அது வெளியில் தெரிந்தது.

ஒவ்வொரு முறையும் சமூகநீதிக்கு ஆபத்து ஏற்படும் பொழுது, அதனை திராவிடர் கழகம் தொடங்கும் - திராவிட முன்னேற்றக் கழகம் அதனை தொடரும் - அனைத்துக் கட்சிகளும் வீதிமன்றத்தில் மட்டும் போராடினால் போதாது - நீதிமன்றத்திலும் போராட வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வேகமாகப் போகும். அதன்பின் பழிக்கஞ்சி வருவீர்கள்.

நீதிமன்றங்களைக்கூட பா...வினர் மதிப்பதற்குத் தயாராக இல்லை - காரணம், அங்கே இருக்கக் கூடிய காவி ஆட்சி, மனுதர்மத்தினுடைய ஆட்சி. அந்த மனுதர் மத்தின் முன், மண்டியிடக் கூடியவர்களாக இருக்கக்கூடிய அணிதான், இன்னொரு அணி.

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வில்,

வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாமாம்!

ஊழல், லஞ்சம், நிர்வாகக் கோளாறு எல்லாம் ஒரு பக்கத்தில் இருக்கட்டும் - திராவிட இயக்கத்தினுடைய அடிப்படை லட்சியம் கல்வி. தமிழ்நாட்டிற்கென்று இருக் கக்கூடிய தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வில், வெளி மாநிலத்தில் உள்ளவர்களும் பங்கேற்கலாம் என்று இன்றைக்குக் கதவு திறந்துவிடப்பட்டு இருக்கிறது. தமிழ் நாட்டில், தமிழர்களுக்கு இடமில்லை - தமிழுக்கு இடமில்லை.

தமிழ் படித்த மாணவர்களுக்குத் தொல்பொருள் சர்வே துறையில் (ஆர்க்கியாலஜி ) வாய்ப்பில்லை. இதைத் தட்டிக் கேட்பதற்கு, இந்த அணியைத் தவிர, தளபதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் அமைந்திருக் கின்ற மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி யைத் தவிர, திராவிடம் தவிர  - தேசியம் என்று சொல்லிக் கொண்டு, காவியம் பாடிக்கொண்டு, காவிகளாக இருக்கக் கூடியவர்களுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றீர்களே, அதனை உங்களால் தடுத்து நிறுத்த முடிந்ததா?

இதுபோன்று வரிசையாகப் பட்டியல் போட்டுக் காட் டலாம் - அதற்காக தனியே ஒரு கூட்டம் போட்டு பேசலாம் என்ற அளவிற்கு இருக்கிறது.

அந்தக் கூட்டணியில் யார் இருக்கிறார்கள்? கூட்டணி கூட்டம் போடுகிறீர்கள் - சென்ற நாடாளுமன்றத் தேர் தலில் உங்கள் கூட்டணியில் இருந்தவர்களே, உங்களி டத்தில் வரவில்லை. இனிமேல் தேடி, ஒவ்வொருவராகப் பிடிக்கவேண்டும் என்ற அளவிற்கு இருக்கிறது.

ஏனென்றால், அவர்களெல்லாம் வேறொரு காட்சிக் காக எதிர்பார்த்திருந்தார்கள். அதிலும் குறிப்பாக பார்ப் பனர்களைப் பொறுத்தவரையில், இங்கே தி.மு.. ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நிலையில் உறுதியாக இருக்கிறார்கள்.

நாங்கள் தனிப்பட்ட முறையில்,

எந்தப் பார்ப்பனர்களுக்கும் விரோதிகள் அல்ல

திராவிட முன்னேற்றக் கழகம் அப்படி ஒன்றும் அவர்களுக்கு பெரிய எதிரியல்ல. நாங்கள் கூட தனிப்பட்ட முறையில், எந்தப் பார்ப்பனர்களுக்கும் விரோதிகள் அல்ல. இன்னுங்கேட்டால், தந்தை பெரியார் அவர்கள் லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் பேசும்போது முன்பு சொன்னார், ‘‘உங்கள் பங்கு என்னவோ அதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். எங்களையும் வாழ விடுங்கள். எங்கள் மக்கள்  உழைக்கின்ற மக்கள். அவர்கள் காலங் காலமாக பசியேப்பக்காரர்கள். அவர்களுக்கு, புளியேப்பக் காரர்களாக இருக்கக்கூடிய நீங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டாமா? எங்கள் பிள்ளைகள் ஓட்டாண்டி களாக இருக்கிறார்களே, அவர்களுக்குக் கொஞ்சம் வாய்ப்பு வரவேண்டாமா?'' என்று கேட்டார்.

"அனைவருக்கும் அனைத்தும்" என்ற சொல்லுக்கு என்ன பொருள்? உயர்ஜாதிக்காரர்களை ஒதுக்கி விடு வோம் என்றா அதற்குப் பொருள். அவர்களுக்கு என்ன பங்கோ, அதனை அவர்கள் அனுபவிக்கலாம். ஏக போகம்தான் கூடாது!

அப்படி ஒரு சூழலில் இருக்கக்கூடிய ஒரு பொது மையான ஒரு தன்மை - இதுதானே நாகரிகத்தின் அடிப் படை. இதுதானே சமூகநீதி!

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

இதுதான் திராவிடம்.

சம வாய்ப்பு - இதுதான் திராவிடம்

திராவிடம் வெல்லும், வெல்லவேண்டும் என்று நாம் ஏன் சொல்கிறோம்? இது வெறும் அரசியல் பார்வை அல்ல நண்பர்களே, நம்முடைய  எதிர்கால சந்ததியினர், நம்முடைய இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை இதில் அமைந்திருக்கிறது. அதனைத் தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அந்த அடிப்படையில், தி.மு. தலைமையில் அமைந் துள்ள கூட்டணி கொள்கைக் கூட்டணியாகும்.

- தொடரும்

Comments