மதுரை வீரா - காத்தவராயா!

ஜாதி உணர்வு நம் நாட்டில் செய்திருக்கிற கொடுமைகளுக்கு, உயிர்ப் பலிகளுக்கு அளவே இல்லை. அதில் இன்னும் என்ன வேடிக்கை என்றால், ஜாதி வெறிக்குப் பலியான வீரர்களை இன்றைக்கும் நாம் 'குலதெய்வமாக' ஆடு வெட்டி, கோழி வெட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர, அந்த மனித உயிர்ப்பலிகளால் நாம் பெறவேண்டிய பாடத்தைப் பெறத் தவறிவிட்டோம்.

அந்த வீரர்களைப் பலியிடுவதற்கு - கழுமரம் ஏற்றுவதற்குக் காரணமாக இருந்த ஜாதி உணர்வைப் பழிவாங்காமல் அந்த வீரர்கனை ஜாதிக் கடவுளாக்கி வழிபாடு செய்துவருகிறோம். அந்த வீரர்களைக் கடவுளாக்கிய நோக்கமே ஒருக்கால் அந்த உணர்வு நமக்கு வராமல் இருக்க வேண்டும் என்ற திட்டத்தாலேயே இருக்கும்.

காத்தான் என்ற ஆதித் திராவிடன் அப்பாபட்டர் மகள் ஆரியமாலாவைக் காதலித்தான். ஆரிய மாலாவும் அவனைக் காதலித்தாள். காத்தான் ஆரியமாலாவைச் சிறை எடுத்தான். (தாலி கட்டிக் கூட்டிக் கொண்டு போய் விட்டான்.)

ஜாதி கெட்டுப் போனதென்றும், ஆசாரங் குலைந்த தென்றும் ஆறாயிரம் வேதியர்கள், ஆரியப்பூ ராஜனிடம் முறை யிட்டார்கள். அரசன் காத்தானைப் பிடித்து இழுத்து வந்து கழுவேற்றிக் கொன்றான்.

வீரன் என்ற 'சக்கிலியர்' குலத்திலே. பிறந்தவன் மதுரை மன்னன் மகள் வெள் ளையம்மாளையும், பொம்மியம் மாளையும் நேசித்தான்.

அரசிளங் குமாரிகளும் காவல் காரனான வீரனை உயிராகக் காதலித் தார்கள்.

வீரன் இருவரையும் சிறை எடுத்துச் சென்றான்.

காலையில் செய்தி தெரிந்தது.

நாடே கிடுகிடுத்தது.

ஆட்கள் பறந்தனர்.

வீரனைக் கையும் களவுமாகப் பிடித்து இழுத்து வந்தனர்.

ஆணை பிறந்தது அரசனிடமிருந்து.

ஆம்! வீரன் துடிக்கத் துடிக்க மாறுகை மாறுகால் வாங்கப்பட்டான்.

கழுவேற்றிக் கொல்லப்பட்ட காத்தான் காத்தவராய சாமியாகி, மாறுகை, மாறு கால் வாங்கப்பட்ட வீரன் மதுரை வீரனாகி, அவர்கள் 'சாதியினரால்' இன் றைக்கும் குல தெய்வமாக வழிபாடு செய்யப்படுகிறார்கள்.

காத்தவராயன் சரித்திரமும் மதுரை வீரன் சரித்திரமும் இன்றைக்கும் சேரிகளிலேபாட்டாய்ப் படிக்கப்படுகிறது.

Comments