ஆசிரியருக்குக் கடிதம்

வறண்டு கிடக்கும் வயிறு ...!

நவம்பர் 2, 2020 நாளிட்ட இந்து தமிழ் திசை நாளேட்டை எதிர்பாராமல் நேற்று (26.01.2021) கண்ணுற்றேன். அவற்றில் பக்கம் - 6இல் இப்படிக்கு இவர்கள் பகுதியில் வெ.சண்முகம், துணை ஆட்சியர் (ஒய்வு), திருப்பூர் வாசகர்;  இருண்டு கிடக்கும் கோயில்களுக்கு விளக்கேற்றி வைக்குமா அரசு? எனும் தலைப்பில் வாசகர் கடிதம் ஒன்று வெளியிடப் பட்டுள்ளது.

அக்கடிதத்தில் ஒருசில வரிகள்; ஒவ்வொரு கோயிலுக்கும் குறைந்த பட்சம் ரூ 2 கோடி வரையிலும் மிக எளிதாக நிதி திரட்ட முடியும். நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு கோயில் பூஜைகளின்போது முன்னுரிமை கொடுக்கலாம். கும்பாபிஷேகத்தின் போது அவர்களை கவுரவப்படுத்தலாம். அவரது குடும்பத்தினருக்கும் வழிவழியாக இந்த மரியாதை யைத் தொடரலாம் என்று அவரது நீண்ட கருத்தை வாசகர் கடிதம் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார்.

   'பக்தி என்பது தனிச்சொத்து - ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து' என்று தந்தை பெரியார் குறிப்பிட் டதைப் போன்று அவரவர் இல்லங்களில் பூஜைகள் செய்வதையும், வழிபடுவதையும் யாரும் விமர்சிக்க வில்லை. அது அவரவர் தனிப்பட்ட உரிமையாகும். ஆனால், அரசு நிலத்தை ஏக்கர் கணக்கில் ஆக்கிர மித்து அவற்றில் கோயில்கள் கட்டி சிறப்பு வழிபாடு என்ற பெயரில் பக்தர்களிடம் வசூல்வேட்டை நடத்து வதும், கும்பாபிஷேகம் எனும் பெயரில் கோடிக் கணக்கான பணத்தை வீணடிப்பதும் வளர்ந்து வரும் நாடான இந்திய நாட்டிற்குத் தேவைதானா? என்பதை நடுநிலையோடு சற்றே சிந்திக்க வேண்டியது அவசிய மாகும். 

கடும் கரோனாவால் (கோவிட் - 19) எட்டு மாதத்திற்கும் மேலாக  உலகமே அச்சத்தில் உறைந்து கிடந்த அவலநிலையில், வேலைவாய்ப்பு என்பது அறவே அற்றுப்போன வேதனை மிகுந்த  சூழலில் தனிநபர் வருமானம் இன்றியும், ஒருவேளை உண வுக்கே வழியின்றியும் சொல்லொண்ணாத் துயரத்தில் கோடிக்கணக்கான குடும்பங்கள் செய்வதறியாது வீட்டிலேயே முடங்கிக் கிடந்தது வேதனையிலும் வேதனை!  மேலும் தாய்மார்கள் பச்சிளங்  குழந்தை களின் பசியினைப் போக்கிட, பால் வாங்குவதற்குக்கூட வாய்ப்பின்றி - வழியின்றி அல்லல்பட்ட அவல நிலையைப் பற்றிக்  கவலைப்படாமல் கோயில்கள் இருண்டு கிடப்பதைக் காணச் சகிக்கவில்லை என்று மேற்கண்ட வாசகர் கவலைப்படுவது வேடிக்கை! வினோதம்!

இந்திய நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகள் சத்தான உணவு இன்றியும், போதிய ஊட்டச்சத்து இல்லாமலும் பசி - பட்டினி காரணமாகவும் நோய் வாய்ப்பட்டு இறப்பது என்பது நாள்தோறும் நிகழும் அவலமாகும். நாட்டில் நிலவும் இத்தகைய அவல நிலையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் - அக்கறை செலுத்தாமல் கோயில்கள் இருண்டு கிடப்பதைப் பற்றியும், இரண்டு கால பூஜை நடவாதது பற்றியும் மிகுந்த கவலை அடைந்துள்ள வாசகர், வறுமையில் உழலும் தினக்கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறு - குறு வியாபாரிகள் ஆகியோரின் வீடுகளில் விளக்கேற்ற வாய்ப்பில்லாமல் அவர்களது இல்லங்கள் இருண்டு கிடப்பதைப் பற்றியும், அவர்களின் வயிறு உணவின்றி பசியால் வறண்டு கிடப்பதைப் பற்றியும் சிறிதுகூட கவலைப்படாதது மனிதநேய மாண்பாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஏழை - எளிய மக்கள் பசி - பட்டினி, வறுமையால் வேதனைப்படும் சூழலில், கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி 'கடவுள்' எனும் கற்சிலைகளுக்கு தங்கக் கிரீடம் சூட்டுவதும், தங்கத் தேரில் பவனி வருவதும் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் விபரீதப் போக்காகும். மனிதனின் கற்பனையில் உருவான கோயில் சிலைகளுக்கு ஆறுகால பூஜை, நான்கு கால பூஜை, இரண்டு கால பூஜை மற்றும் அவ்வப்போது பால் அபிஷேகம், பன்னீர் அபி ஷேகம், தேன் அபிஷேகம், தயிர் அபிஷேகம், மலர் அபிஷேகம், இளநீர் அபிஷேகம், பலவகை பழ அபிஷேகம் மட்டுமல்லாது கோயில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் மக்கள் பணத்தில் ஆடம்பர விழாக் களை நடத்தி பொன்னையும் பொருளையும் மட்டு மன்றி மக்களின் பொன்னான நேரத்தையும் - காலத்தையும் வீணடிப்பது என்பது நாட்டு மக்களை மேலும் மேலும் வறிய நிலைக்கு இட்டுச் செல்லும் விபரீதச் செயல் என்பதே சமூகநல ஆர்வலர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோரின் ஒத்த கருத்தாகும். 

ஆகவே மக்களிடையே மூடநம்பிக்கைகள் ஒழிந்து, மனிதநேயம் மலர்ந்து சமத்துவம் - சகோத ரத்துவம் வளர்ந்து மக்கள் ஒற்றுமையுடன் திகழ  வேண்டும் என்பதே மனிதநேயப் பண்பாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

 - சீ. இலட்சுமிபதி,  தாம்பரம்.


Comments