முதுபெரும் நண்பர் குறிஞ்சிப்பாடி பசுநாதன் அவர்களுக்கு வீரவணக்கம்

குறிஞ்சிப்பாடியில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எங்களுடன் படித்த, மூத்த சம காலத்தவரான நண்பர் பசுநாதன் என்ற பண்பாளர் குறிஞ்சிப்பாடியில்  இன்று (28.1.2021) காலையில் தனது முதுமையான 95ஆம் வயதில் இயற்கையெய்தினார் என் பதைக் கேட்டு மிகவும் துன்பமும், துயரமும் அடைந்தோம்.

'விடுதலை'யின் தொடர் வாசகர் அவர். 'வாழ்வியல் சிந்தனைகளை', வரிக்கு வரி சுவைத்து மனப்பாடமாக   எவரிடத்திலும் கூறி மகிழும் பெரியார்- திராவிட இயக்கப் பற்றாளர். தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

எனது கெழுதகை நண்பர் சிறுநீரியல் துறை தேசிய மருத்துவர் பிரபல  டாக்டர் . ராஜசேகரன் அவர்களுடன் மிக நெருக்கமாக பழகியதுபோல நம்மிடமும் பழகியவர்.

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தகவல் தெரிவித்தவுடன் அவரது அன்பு மகன் திரு. மனோகரன் அவர்களிடம் தொலைபேசியில் பேசி ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தேன்.

கழக நிகழ்ச்சி கடந்த ஓராண்டுக்கு முன்பு குறிஞ்சிப் பாடியில் நடைபெற்றபோது அவர் அமர்ந்த நிலையில் 'பெரியார் விருது' பெற்றதை மகிழ்ந்து பாராட்டினோம்.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நட்பு உறவுகளுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் கூறுகிறோம்.

பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் அவர்களும், கழகப் பொறுப்பாளர்களும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவர்.

 

 

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை

28-1-2021

Comments