‘இராவண காவிய ஆய்வுரை' - ஓர் அறிவுப் போர் கருவி!
கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
இருபதாம்
நூற்றாண்டின் ஈடு இணையற்ற இலக்கியம் - பேரிலக்கியம் புலவர் குழந்தை என்ற பெம்மான் தந்த பண்பாட்டுப் பெட்டகம்.
கவிச்சக்ரவர்த்தி
கம்பனைப்போல் கவி புனைய முடியுமா? என்ற கேள்விக்கு - பல காலம் கிடைக்காத
விடை புலவர் குழந்தையின் இராவண காவியம்மூலம் கிடைத்தது!
இலக்கியங்களை
இலக்கியங்களாக மட்டும் பார்க்காமல், பக்தி இலக்கியமாக, ‘புனிதம்' போர்த்தப் பட்டதால் ஆய்வுக்கு இடமின்றி, அறிவுக்கு வேலை கொடுக்காமல், நம்பிக்கையையே மூலதனமாக்கிப் புகழ் மாலை சூட்டப்பட்டதால், இலக்கிய உலகத்தில் நிலவும் ஒரு பெரும் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்தால் மட்டும் போதாது; ஆக்கபூர்வமாக அதற்கு இணையாகவோ, மேலாகவோ ஒரு காப்பியத்தை உருவாக்கவேண்டும் என்ற பற்றுறுதியோடு, கடும் உழைப்பினாலும், ஒப்பற்ற சீரிய சிந்தனையாலும் இராவண காவியத்தை, பெரும்புலவர் குழந்தை இயற்றினார்.
முந்தைய
அரசு தடை செய்தது - திராவிடர் அரசு நீக்கி, அனைவருக்கும், அடுத்த தலைமுறைகளுக்கும் பயன்தரும் வகையில் அந்த அறிவு நீரோடையை நாடெல்லாம் பாய விட்டது.
ஆனால்,
கம்பனின் பாட்டுத் திறனுக்கு ஈடாக, இணையாக இருக்க அதனை கம்ப ராமாயணம் போலவே பாட்டுகளாக்க ஆக்கியதை எளிய மக்கள் படித்துச் சுவைப்பதற்கு மிகவும் எளிதானதாக இருக்கவில்லை.
அக்குறையைப்
போக்கிடும் வகையில் புதுவையில் தமிழாய்ந்த தகைமைசால் தமிழறிஞர், திராவிடர் இயக்கம் பெற்ற அரிய சிந்தனையாளர் என்று பெருமை மேம்படப் பலரும் புகழும் முனைவர் க.தமிழ்மல்லன் அவர்கள்
இராவண காவியத்தை உரைநடையில், சொற்பொழிவுகளாக நிகழ்த்திட, மறைந்தும் மறையாத மாமனிதர், சீரிய பகுத்தறிவுச் செல்வர் புதுவை மானமிகு மு.ந.நடராசன்
அவர்களின் சிறந்த ஆர்வத்தால், புதுவையில் தொடர் உரைகளாக நிகழ்ந்தன.
புதுவை
பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும் அப்பணி இலக்கியத் தொண்டு மட்டுமன்றி, இன உணர்வின் - பண்பாட்டின்
மீட்டுருவாக்கம் என்பதை உணர்ந்து அத்தொண்டுப் பணியை நடத்தினர்.
அறிஞர்
முனைவர் க.தமிழ்மல்லன் அவர்கள்
முள் உள்ள பலாப்பழத்தை உரித்து சுவையான சுளை களாகவும் மட்டுமல்லாமல், அவரது தமிழாற்றல் என்ற தேனில் நனைத்து தெள்ளமுதுபோல் உரை நூலாகத் தந்து, குழந்தைகளும்கூட குழந்தையின் இராவண காவியப் புலமையை அறிந்து மகிழும் வாய்ப்பினை தனி ஒரு நூலாக அவ்வுரைத் தொகுப்பின்மூலம் தந்துள்ளார்.
தமிழ்கூறும்
நல்லுலகம் அவருக்கு வெகுவாக, இத்தொண்டுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
இராவண
காவிய ஆய்வுரை நூலை 'வெல்லும் தூய தமிழ்' வெளியீடாக 348 பக்கங்களில் அச்சிட் டுள்ளார்.
அழகிய
பதிப்பாக மிளிருகிறது - விலை 300 ரூபாய்.
யார்
யார் வீட்டில் ‘இராவண காவியம்' - புலவர் குழந்தையின் ஒப்பற்ற காவியம் உள்ளதோ அதற்கு அருகில் வைத்து, இதில் உள்ள சுவையை எவரும் எளிதில் சுவைத்து மகிழ ஓர் அறிவு விளக்க நூலாக அது அமைந்துள்ளது.
தமிழ்
இலக்கியத்தில் ஆய்வுக் கண்ணோட்டம் இருந்தால்தான் இலக்கியம் வளரும். வரலாறு படைக்கும்.
இல்லையேல்,
அரைத்த மாவையே அரைத்து அதுவும் புளித்துப்போய் விடக் கூடும்.
காய்தல்,
உவத்தல் இன்றி ஆய்வுரை மிகவும் சிறப்புடன் மூல நூல் கவிதைகளுக்கு மெருகேற்றிடும் ஒரு புதிய படைக்கலனை முனைவர் அறிஞர் க.தமிழ்மல்லன் தமிழ்கூறும்
நல்லுலகத்திற்கு இதன்மூலம் அளித்துள்ளார்.
அவர்
எழுதியுள்ள முன்னுரையில் மிகவும் அழகாகவும், ஆணித்தரமாகவும் கூறுகிறார்:
‘‘தமிழியல்
கருத்துகள் ஆரியம் அளவுக்குக் கொண்டு (படையெடுப்புபோல்) செல்லப்படவில்லை. தமிழினக் கருத்துகளை நம் மக்கள் அறிந்துகொள்வதும், அதற்காக தாங்கிப் பிடிப்பதும் இல்லை. ஆரியர்கள் தம் இயக்க வெளியீடுகளை காசு கொடுத்து வாங்கு வதும், அதைப் பெரிதுபடுத்துவதுமாக இயங்கு கிறார்கள். நம் மக்கள் அவர்கள் காலடியில் கிடக் கிறார்கள்.''
‘‘‘இராவண
காவிய ஆய்வுரை' என்னும் இந் நூலைப் படிப்பவர் ஆரிய அடிமைத் தன்மையிலிருந்து விடுதலை பெறலாம். நண்பர்களே, விடுதலை பெற விரும்புங்கள். வீட்டில் நுழையும் பாம்பை அடித்து அழிப்பதுபோல அல்லது காட்டுத் துறையிடம் ஒப்படைப்பதைப்போல ஆரியத்தை அடித்து அழிக்க அல்லது திருப்பி அனுப்பிவிட ஒவ்வொரு தமிழனும் முயலவேண்டும்'' என்கிறார்.
இந்நூல்
வெறும் நூலல்ல. ஓர் அறிவுப் போர்க் கருவி ஏந்தி, புதிய தலைமுறைகளையும் பாதுகாக்கும் பண்பாட்டு மீட்டுருவாக்கப் போரை தளர்வின்றி நடத்திட தடம் போட்டுத் தந்துள்ளார் தமிழ்மல்லன்.
அவருக்கு
இன, மொழி, மானுட உரிமைப்பற்றாளர் சார்பில் ஆயிரம் நன்றிகளைக் கூறிடவேண்டும் - இந்த ஆய்வு மலைத்தேனுக்காக!
ஒவ்வொருவரும்
வாங்கிப் படித்துப் பயன்பெற்று, கருத்துகளைப் பரப்பி அறிவு விடுதலையும், புத்தெ ழுச்சியும் பெற அது சிறந்த வாய்ப்பாக அமையும்.
கடும்
உழைப்பினால் பெருஞ்செல்வத்தை இலக் கிய உலகத்திற்குத் தந்த தமிழ் அறிஞர் மானமிகு முனைவர்
க.தமிழ்மல்லன் ஆற்றலும், அறிவுத் தொண்டும் வளர்பிறையாக வளரட்டும்; இருட்காட்டை அழிக்கட் டும் அந்தப் புத்தொளி!