இலங்கை உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்: இரவோடு இரவாக ராஜபக்சே அரசு இடித்துத் தள்ளுவதா?

இலங்கை உள்நாட்டுப் போரின்போது தமிழின மக்கள் கொல்லப்பட்டதை நினைவு கூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்தில் நிறு வப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இரவோடு இரவாக இடித்துத் தள்ளியுள்ள இனவெறி ராஜபக்சே தலைமையிலான ஈழத் தமிழர் விரோத அரசிற்குக் கண்டனம் தெரிவித்தும், நினைவுச் சின்னத்தை இடித்ததைக் கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கைத் துணை தூதரகத்தின் முன்பு 11 ஆம் தேதி .தி.மு.. சார் பில் நடைபெறுகின்ற கண்டன அறப் போராட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் அறவழி ஆதரவைத் தெரிவித்தும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இரவோடு இரவாக மின் விளக்குகளை அணைத்துவிட்டு இடித்துத் தள்ளியுள்ளது ராஜபக்சே தலைமையில் அமைந்துள்ள ஈழத் தமிழர் விரோத கொடுங்கோல் அரசு என்ற செய்தி கேட்டு, உலகத் தமிழர் உள்ளங்கள் எல்லாம் கொதியாய் கொதிக்கின்றன. வேதனைத் தீ உள்ளத்தை வெந்து கருக்குகிறது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி

இலங்கை உள்நாட்டுப் போரின்போது பல்லாயிரக்கணக்கில் தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகை யில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி 2019 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

திடீரென  முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை புல்டோசர் மூலம் அதிகாரிகள் இடித்த நிலையில், அதுபற்றி கேள்விப் பட்டவுடன் மாணவர்கள் பல்கலைக்கழக வளாக பகுதிக்கு வந்தனர். ஆனால், அதில் பலரையும் உள்ளே நுழைய பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப் படுகிறது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் பெருமளவிலான காவல்துறையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.நீதிமன்ற உத்தரவை பெற்று, யாழ்ப்பாணம் பல்கலை வளாகத்தில் இருந்த நினைவுத் தூபி இடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அந்த பல்கலை கழகத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி வெளிவாயில் பூட்டப்பட்டுள்ளது. அந்த மாகாண மக்கள், மாணவர்கள், வெளியூர் மக்கள், அரசியல் தரப்பினர் அங்கு குவிந்து வருகிறார்கள்.

உலக வரலாறு  கண்டறியாத கொடூரம்

பல்லாயிரக்கணக்கானோரை சுற்றி வளைத்து முள்ளிவாய்க்கால் அருகே ஆண்கள், பெண்கள், முதியோர், குழந் தைகள் உள்பட பல மனித உயிர்களைக் கொன்று குவித்த சிங்கள அதிபர் இராஜபக்சேவின் இராணுவம் நடந்து கொண்ட கொடூரம் உலக வரலாறு  கண்டறியாத ஒன்று.

அய்.நா. குழுவின் அறிக்கைப்படி, அதைப்பற்றிய விசாரணையெல்லாம் வெறும் கண்துடைப்பாகவும், கபட நாடக மாகவும் பிசுபிசுத்துப் போன போலித் தனமுமாக ஆகிவிட்ட நிலையில், மீண்டும் சிங்கள இராஜபக்சே குடும்பமே இலங்கை அரசின் எல்லா முக்கிய பொறுப்பிற்கும் வந்து அமர்ந்துவிட்டதால், இதுபோன்ற தமிழர் உரிமை ஒழிப்பும், தமிழின அழிப்பும் வேகமாக நடைபெறுவது எதிர்பார்த்த ஒன்றே!

இதைத் தட்டிக் கேட்க வேண்டிய அளவுக்கு, தொப்புள் கொடி உறவும், கலாச்சார உறவும் உள்ள அடிப்படையில், மலையளவு உதவியும் செய்ய வேண்டியது இந்திய மத்திய அரசின் கடமையாகும். மோடி தலைமையிலான பா... ஆட் சியோ, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஈழத் தமிழர்களுக்கு  புதுவாழ்வும், புது உரி மைகளையும் பெற்றுத் தருவோம் என்று பொய்யுரைத்தார்கள். இன்று விரிந்துவரும் சோகக் கதையை உலகமும், அவர்களை நம்பிய, உலகம் எங்கும் உள்ள ஈழத் தமிழர்களும்,  தெளிவாக உணர்ந்து, புரிந்து வருகின்றனர்!

11 ஆம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவு

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு  (8.1.2021) முற்றிலும் இடித்துத் தள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் கோரத்தாண்டவத்தைக் கண்டு .தி.மு..வின் ஆற்றல்மிகு பொதுச் செயலாளர், திராவிட இனத்தின் போர்வாள் மானமிகு சகோதரர் வைகோ இன்று (9.1.2021) என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இதற்கென ஒரு முற்றுகைப் போராட்டத்தினை  சென் னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின்முன்பு வருகின்ற 11 ஆம் தேதி காலை 11 மணிக்கு  அறவழியில் நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்!

அது காலத்தால் அவர் எடுக்கும் சரியான நடவடிக்கை. அந்த அறப் போராட்டத்திற்கு அறவழிப்பட்ட ஆதர வினை திராவிடர் கழகம் நல்குவதோடு, இந்த இடிப்புச் சம்பவத்தை - ஈழத்துக் கொடுங்கோன்மையை, கோணல் புத்தியை திராவிடர் கழகம் வன்மையாகக் கண் டிக்கிறது!

ஈழத் தமிழர் நலன் இப்படி பலி பீடத்தில் நிறுத்தப்படுவதை மத்திய அரசு - மோடி அரசு தலைமையிலான அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது; கண்டித்துத் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.

 

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

9.1.2021

Comments