செய்தியும், சிந்தனையும்....!

மரித்தது தமிழர்கள் என்பதாலா?

இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டு உயிர் இழந்த நான்கு மீனவக் குடும்பங்களுக்குத் தமிழக முதலமைச்சர் நிதி உதவி.

இப்படி ஒரு கொடூரம் நிகழ்ந்தது குறித்து மத்திய அரசின் உதடுகள் அசையாதது ஏன்? , மரித்தது தமிழர்கள் ஆயிற்றே!

இருவகை விடுதலை!

இன்று கூடும் .தி.மு.. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சசிகலா விடுதலை குறித்து ஆலோசனை.

ஏழு தமிழர்கள்விடுதலை' குறித்தும் முக்கிய தீர்மானம் நிறைவேற்றினால் வரவேற்கத்தக்கது.

இட ஒதுக்கீடு என்றாலே பதற்றமோ!

மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கினால் (புதுவையில்) கல்வித் தரம் பாதிக்கும்: - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்குரைஞர்.

தமிழக அரசின் உள்ஒதுக்கீடு உத்தரவு சரி, அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதே என்று அப்பொழுது சொலிசிட்டர் ஜெனரல் கூறியது என்னாயிற்று? இட ஒதுக்கீடு என்றாலே பார்ப்பனீய மத்திய அரசுக்கு ஒரு வகைப் பதற்றமோ!

ஜோபைடனும் - மோடியும்!

இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: - அமெரிக்கப் புதிய அதிபர் ஜோபைடன் சூளுரை

இந்தியாவில் மதவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

தூக்குக்கு மேல் தண்டனை இல்லையா?

இரண்டரை வயது பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வெறியனுக்கு .பி.யில் மரண தண்டனை!

மரண தண்டனையை நாம் ஆதரிக்காவிடினும் இரண்டரை வயது பச்சிளம் சிசுவைச் சூறையாடிய கயவனுக்கு இதற்கு மேலும் ஏதாவது தண்டனை அளிக்கப்பட்டாலும் வரவேற்கத்தக்கதே!

அரசுக் கல்லூரியா? கந்துவட்டிக் கடையா?

சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - காலவரையின்றி கல்லூரி மூடல்!

அரசுக் கல்லூரியாக இருந்தும் தனியார்க் கல்லூரிகளைவிட 30 விழுக்காடு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் கந்து வட்டிக் கொள்ளையராக தமிழக அரசு நடந்து கொள்ளலாமா? மாணவர்கள் போராடாமல் என்ன செய்வார்கள்?

எச்சரிக்கை, எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் ஓய்ந்திருந்த கரோனா தொற்று மேலும் உயர்ந்துள்ளது: - தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத் துறை

அலட்சியம் வேண்டாம் - பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமே!

கர்மப் பலனா?

சென்னையில் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்பட்ட 11 குழந்தைகள் மீட்பு!

கர்மப் பலனால் பிச்சை எடுக்கும் நிலை என்று ஆன்மிகவாதிகள் சொல்லாமல் இருந்தால் சரி!

நடு வீதிக்குக் கொண்டு வரட்டும்!

தாயின் நகையை அடகு வைத்து ஆன்லைனில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்ட பிளஸ் 1 மாணவர்.

என்ன கொடுமையடா இது! முற்றிலும் தடை செய்யப்பட்டு, ஆன்லைன் சூது வியாபார கொள்ளையர்களை நடு வீதிக்குக் கொண்டு வர வேண்டாமா?

Comments