ஈத்துவக்கும் ஈரோட்டு இன்பம்!

இன்பங்களில் எல்லாம் சிறந்த இன்பம் எது தெரியுமா? தம்மிடம் உள்ள செல்வத்தின் ஒரு பகுதியைப் பிறருக்குத் தந்து அதன்மூலம் கிடைக்கும் ஈத்துவக்கும் இன்பம்தான். அந்த மகிழ்ச்சிக்கு ஈடும் இல்லை; இணையும் இல்லை!

கொடுப்பதற்கு முதலில் தேவை - பணம் அல்ல நண்பர்களே!

மனம் தேவை. நம் தேவைகளை ஓரளவுக்கு நிறைவு செய்த பிறகு மற்றவர்களுக்கு, குறிப்பாக பொதுப் பணிக்குப் பயன்படும் வண்ணம் அளிப்பது காலத்தாற் செய்யும் காலமறிந்த கடப்பாடு மட்டுமல்ல; ஞாலம் துய்த்துப் பயன் பெறும் பாராட்டத்தக்க செயற்பாடு!

மிக எளியவர் பூவிருந்தவல்லி பகுதியில் வாழும் பெரியார் பெருந்தொண்டர் பெரியார் மாணாக்கன்; அவரும், அவர் குடும்பத்தவரும் மாதந்தோறும் தவறாது தங்கள் வருவாயில் ஒரு பகுதியை  'விடுதலை'க்கும், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும் என வாரிவாரி வழங்கி மகிழ்ந்து வருவதுகண்டு வியப்பின் எல்லைக்கே செல்ல வேண்டும்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்  ஒற்றைப் பத்தி பகுதியில் எழுதியுள்ள மெய் சிலிர்க்கும் பகுதியை 3ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்.

எப்படிப் பாராட்டுவது? உரிய வார்த்தைகளே கிடைக்கவில்லை. இவை கைமாறு கருதாது அளிக்கும் நன்கொடைகள்!

அதுபோல எனது அண்ணாமலைப் பல்கலைக் கழக சமகால மாணவப் பருவத்தோழர் - இன்று முதியவர் - பாரம்பரிய திராவிடர் இயக்கத்தின் வழித்தோன்றல் அருமைத் தோழர் மானமிகு நா.லட்சுமி நாராயணன் அவர்கள். காஞ்சிபுரம் அருகே கீழப்பெருமாநல்லூரின் நந்தவனத்தில் இருந்து வருகிறார்.

அவரது கடிதமும், அலைபேசி குறுஞ்செய்தியும் எங்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கின.

திருச்சியில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரால் துவக்கப்பட்டு சுமார் 60 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் படித்து சிறப்புடன் சாதனை செய்யும் குழந்தைகளில் இருவருக்கு ஆண்டுதோறும் தான் அளித்துள்ள  5 லட்ச ரூபாய் நன்கொடையின்படி தனது தந்தையார் - தாயார் - வாழ்விணையர் மூவர் பெயரில் சீர்காழி நாகலிங்கம் - மரகதம் & சுவேதா நினைவு அறக்கட்டளை மூலம் (நிறுவனர் - சீர்காழி நா.லட்சுமிநாராயணன்) ஆண்டு வட்டியைப் பயன்படுத்தி அக்குழந்தைகளது வளர்ச்சிக்கு உரிய வகையில் ஆகும் செலவிற்கு   ஏற்பாடு செய்யுங்கள் என்று தனது கட்டளைபோல் குறிப்பிட்டு என்னுடைய அலைபேசியில் பேசி மகிழ்ந்தார்.

அவர் இணைத்த கடிதம் இதோ:

இதற்கு முன் சென்னைப் பெரியார் திடலில் 'விடுதலை' 85ஆம் ஆண்டு விழா நடைபெற்றபோது (1.6.2019) தாடியுடன் வந்து காட்சியளித்து, 'விடுதலை'க்கு நன்கொடை தந்து என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அதற்குமுன்புகூட எந்தவித முன் அறிவிப்புமின்றி காசோலையை (30 ஆயிரம் ரூபாய் என்று நினைவு)  அளித்துள்ளார். யார் இவர் என்று நான் நினைவுபடுத்திக் கொள்ளவே சிறிது சிரமப்பட்டேன். அப்படி விளம்பரம் விரும்பாது கொடை அளித்த தொண்டறச் செம்மல்.

தந்தை பெரியார் சிக்கனமாக வாழ்ந்து தாம் சேர்த்த அத்துணைச் செல்வத்தையும் மக்களுடைய தொண்டறத்திற்குத் தந்தார் என்னும்போது ஈத்துவக்கும் இன்பத்தின் எல்லையைக் கண்டவர் ஈரோட்டு வள்ளல் என்பதன் தொடர்ச்சியே இவையெல்லாம்!

தொண்டறம் தொடரட்டும்!

தூயஉள்ளங்கள் பெருகட்டும்!!

 

Comments