குஜராத் முன்னாள் முதல்வர், சமூகநீதி போர்த் தளபதி மாதவசிங் சோலங்கிக்கு நமது வீர வணக்கம்

குஜராத் சமூகநீதிப் போராளியும் இடஒதுக்கீட்டினை சிறப்பாக குஜராத் ஆட்சியில் செயல்படுத்திய வருமான முதுபெரும் காங்கிரஸ் தலைவர் மாதவசிங் சோலங்கி அவர்கள் தனது 93 வயதில் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம்!

காலஞ்சென்ற மாதவசிங் சோலங்கி அவர்கள், வடபுல சமூக நீதிப் போராளிகளான சந்திரஜித் யாதவ், சவுத்ரிபிரம்பிரகாஷ் போன்றவர்களுடனும் நம்முடனும் மிகவும் நட்புறவோடு இருந்து குஜராத்தில் சமூகநீதிக் கொடி தலை தாழாது பறக்கக் காரணமானவர். தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர்மீது மிகவும் பற்றுள்ளவர்.

அவரது அன்பு மகன் முன்னாள் மத்திய அமைச்சர் பரத்சோலங்கி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், குஜராத் காங்கிரஸ் கட்சிக்கும் திராவிடர் கழகம் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது!

பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவரான மாதவ சிங் சோலங்கி அவர்கள் 4 முறை குஜராத் முதல்அமைச்சராக பதவி வகித்தவர். நரேந்திர மோடி முதல்வராகுமுன் குஜராத் முதல்வராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமைக்கும், மதிப்பிற்கும் உரியவர். சிறந்த பண்பாளர் - அவரது மறைவு குஜராத்திற்கும் அவரது குடும்பத்திற்கும் மட்டுமல்ல; இந்திய நாட்டிற்கே பெரும் இழப்பு - குறிப்பாக சமூகநீதி வரலாற்றில் அவருக்கென தனி இடம் என்றும் உண்டு. அவருக்கு நமது வீர வணக்கம்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்  

10-1-2021

சென்னை


Comments