ஆந்திராவில் கடவுள் சிலைகள் உடைபடுகின்றன பின்னணி என்ன?
                               அமராவதி, ஜன.5- ஆந்திராவில் ராம தீர்த்தம் பகுதியில் கடவுள் சிலைகள் உடைக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடவுள் சிலைகள்  உடைக்கப்பட்டுவரும் விவகாரத்தில் குற்ற நடவடிக்கைகள் எடுக்கும் வழமைக்கு மாறாக அரசியல் விவகாரமாக்கப்பட்டு வருகிறது.

அயோத்தியில் மய்யம் கொண்டிருந்த ராமன் கோயில் பிரச்சினை தீர்க்கப்பட்ட தாக கூறப்படும் நிலையில், தற்போது அது ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்துள்ளது. அம்மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள ராமதீர்த்தம் பகுதியைச் சுற்றி தற்போது அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன.

ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டத் தில் ராமதீர்த்தம் பகுதியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அழகிய கோதண்டராமன் கோயில் உள்ளது. அங்குள்ள கோதண்டராமன் சிலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைத்தவர்கள், தலை, உடல் பாகத்தை சிறிது தூரத்தில் உள்ள ஒரு குளத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த செயல்தான் தற்போதைய ஆந்திர அரசியலை நகர்த்திக்கொண்டிருக்கிறது.

கடவுள் சிலையிலிருந்து தலையை வெட்டி குளத்தில் வீசி சென்றவர்கள் யார்? இதன் பின்னணியில் எந்த இயக் கம் எந்த அமைப்பு அல்லது எந்தக் கட்சி உள்ளது? என விசாரிக்க மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

கடந்த ஒரு மாதமாகவே ஆந்திரா வில் கடவுள் சிலைகள், தேர்கள் தாக்கப் படுகின்றன. இதுவரை ஒருவரைக் கூட இது தொடர்பாக காவல்துறையினர் கைது செய்யவில்லை. அதுவே மக்களுக்கு சந் தேகத்தை வலுப்பெறச் செய்கிறது.

கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதி பகுதியில் பழங்கால தேர் இரவோடு இரவாக கொளுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கு கோதாவரி, கர்னூல், அனந்தபூர், கடப்பா, குண்டூர், விஜயவாடா என பல்வேறு இடங்களில் உள்ள கடவுள் சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. கோபுரங்களில் உள்ள சிலைகள் உடைக்கப்படுகின்றன. சில இடங்களில் ஊருக்கு வெளியே உள்ள கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளின் கை, கால்கள் உடைக்கப்படுகின்றன. நேற்று கூட சிறீகாகுளம் மாவட்டம், டெக் கலியில் உள்ள புத்தர் சிலையின் வலது கை உடைக்கப்பட்டது.

அரசியல் கட்சித் தலைவர்களிடையே போட்டி மத அரசியல்

கடவுள்சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநில அரசைக் கண்டித்தும் பாஜகவினர் முதலில் ராமதீர்த்தத்தில் தொடர் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினர். இதைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் உட்பட பலர் ஜெகன் தலைமையிலான அரசை கண்டித்தனர். சந்திரபாபு நாயுடு ராமதீர்த்தம் கோயிலுக்கு நேரில் சென்று பார்வையிடப்போவதாக அறிவித்தார்.

இந்தப் பிரச்சினை பெரிதாகி வருவதை உணர்ந்த ஆந்திர முதல்வர் ஜெகன், “சாமி சிலைகளை நாசம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என ஓர் அறிக்கை விட்டார்.

இதனிடையே, சந்திரபாபு நாயுடு ராம தீர்த்தம் செல்ல அமராவதியில் இருந்து விமானம்மூலம் விசாகப்பட்டினம் வருவ தற்குள், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப் பினர் விஜய்சாய் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் அப்பகுதியை பார் வையிடச் சென்றார். இத்தனை நாட்கள் வரை கண்டுகொள்ளாத அரசு தற்போது எம்.பி.யை அனுப்பி வைக்கிறதா? என்ற ஆத்திரத்தில் அவரது கார் மீது கற்களையும் காலணிகளையும் சிலர் வீசினர்.

அதனைத் தொடர்ந்து விஜய் சாய் ரெட்டி எம்.பி  கூறுகையில்,

இது எல்லாம் சந்திரபாபு நாயுடு செய்யும் சதிச்செயல்தான். அவர் ஆட் களை வைத்து இந்து கோயில் சிலைகளை உடைத்துவிட்டு பழியை ஜெகன் அரசு மீது போடுகிறார்என்றார்.

அவர் போன பிறகு சந்திரபாபு நாயுடு நேரில் சென்று ராமதீர்த்தத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் "கடவுள் விவகாரத்தில் ஆடுபவனை கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார். கண் டிப்பாக இதற்கு அவன் பதில் சொல்லியே ஆக வேண்டும்" எனக் கூறிவிட்டுச் சென்றார்.

அவரைத் தொடர்ந்து, மறுநாள் ராம தீர்த்தத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சம்பவம் நடைபெற்ற குளத்தை பார்வையிட்டு, "விரைவில் குற்றவாளி யார் என்பது தெரியவரும். ஒருவேளை இது தெலுங்கு தேசத்தின் செயலாக இருந்தால் கடுமையாக தண் டிக்கப்படுவர்’’ என பேசிவிட்டு சென்றனர்.

இன்று (ஜன.5) பாஜக மாநில தலை வர் சோம்ராஜு மற்றும் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் மற்றும் அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள் ராமதீர்த்தம் செல்ல உள்ளனராம்.

ராமனை வைத்து அரசியல் நடத்த விரும்புகின்றவர்கள் இதன் பின்னணியில் உள்ளனரா? என்ற கேள்வியும் எழுந் துள்ளது.

Comments