கைபேசி கண்டுபிடித்தவரை கண்டுபிடித்த அறிவியல் கடமையாளர் "இதோ!"

இந்த கரோனா கொடுந்தொற்று - கோவிட்-19 உலக மக்களின் வாழ்வையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது!

முன்பு எப்போதாவது ‘ஊரடங்கு' (Curfew) என்பது மிக மிக மிக அரிதாக, பெரிய கலவரங்கள் கட்டுக்கடங்காமல் சில ஊர்களில் வெடித்துக் கிளம்பும்போது மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு வழியாகும்.

ஆனா,ல் இந்தக் கரோனா கொடுந்தொற்று உயிர்ப்பலி கொண்டுள்ள பல லட்சம் உலக மக்களின் அவதி, மிகப்பெரிய பயங்கரம்.

இது யாரைத் தாக்கும், எப்போது தாக்கும், எப்படி தாக்கும் என்பது புதிராக மிகப்பெரிய கேள்விக்குறி யாக இருந்த நிலையில் முகக்கவசம் (Face Mask), அடிக்கடி சோப் போட்டு கைகளைக் கழுவுதல், தனி நபர் இடைவெளி, தேவையின்றி தொட்டுப் பழகுதல் - கை கொடுப்பதைத் தவிர்த்தல் முதலியவைகள் மூலம் தற்காத்துக் கொண்டு - வீட்டுக்குள் முடங்கி கிடப்பது மக்களுக்கு எளிதல்ல. காரணம், மனிதன் ஒரு சமூகப் பிராணி - கலந்து உறவோடும், உரையாடு வோரிடம் காலத்தை செலவிட்டுப் பழகியவன்.

என்றாலும் உயிரும், உடல் நலமும் முக்கிய மல்லவா? எனவேதான், அரசுகளின் கட்டுப்பாடுகள் மதிக்கப்பட வேண்டியவை ஆகின்றன. 

இதிலிருந்து நமக்கு சற்று மாறுதல் - மன அழுத் தத்திலிருந்து விடுதலை அளிப்பவை - அறிவியல் கண்டுபிடிப்பான கைத்தொலைபேசி என்ற செல் போன்கள்தான்!

இதனைப் பயன்படுத்தியே நாடெங்கும் காணொ லிக் காட்சிகளும், கலகலப்பான உரையாடல்களும் ஓரளவு நிலைமையை மாற்றி வருகின்றன.

கைப்பேசியைக் கண்டுபிடித்த அந்த விஞ்ஞானியைப் பற்றி பலரும் சிந்திக்காத வேளையில், சரியாகச் சிந்தித்து அவரை நினைத்துப் பெருமைப் படுத்துதல் நன்றி காட்டும் நற்பண்புகளில் ஒன்றாகச் சேரவேண்டும்!

சென்னை கோட்டூர்புரத்தில் வாழும் ஓய்வுபெற்ற டி.ஜி.பி. (Director General of Police) நண்பர் 

அ.ராஜ்மோகன் அய்.பி.எஸ். அவர்கள் அதை சரியாக செய்து, அறிவியல் மனப்பான்மையை ஒவ்வொரு குடிமகனும் சரியாக வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்ட அடிப்படை கடமை 

(Fundamental Duties of a Citizen) பகுதி 51Ah  பகுதியில் உள்ளதை நடைமுறைப்படுத்தியதோடு காட்சிப் படுத்தியுள்ளார். அது அவர் எனக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிய வருகிறது, பாராட்டுகள்!

இதோ அந்த அரிய தகவல் - பலருக்கும் பகிர்ந்தளித்து அறிவை விரிவு செய்து, அறிவியல் வரலாற்றை பாடமாகச் சொல்ல பயன்படுத்திக் கொள்ளலாமே!

கைபேசி (CELL PHONE) குறித்து ஓர் ஆய்வு 

''நான் கோவிட்-19 காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடந்தபோது கைபேசியைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தேன். இதைக் கண்டுபிடித்தவர் யார், எப்போது இந்த வியப்புக்குரிய நிகழ்ச்சி நிகழ்ந்தது என்று பல நண்பர்களிடம் கேட்டேன். யாருக்கும் தெரியவில்லை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களிடம் கேட்டேன். அவர்களுக்கும் தெரியவில்லை. பிறகு நானே இணையத்தில் (Internet) அலசிப் பார்த்தேன். எனக்கு வியப்பு காத்திருந்தது.

இதைக் கண்டுபிடித்தவர் மார்ட்டின் கூப்பர் என்னும் அமெரிக்க விஞ்ஞானி ஆவார். அவர் 26.12.1928 இல் பிறந்தார். கைபேசியை 3.3.1973 ஆம் நாள் கண்டுபிடித்தார். அப்போது மோட்டரோலா என்னும் அமைப்பில் பணியாற்றி வந்தார். அவர் 90 வயதைக் கடந்த போதும் இன்றும் தன் இல்லத்தரசி யுடன் அமெரிக்காவில் நலமாக உள்ளார். அவரு டைய புகைப்படமும், அவர் முதல் முதலில் கண்டு பிடித்த கைபேசியும், இணையத்தில் உள்ளன. அந்தப் படத்தில் கைபேசி முழம் அளவுக்கு நீளமாக இருந் தாலும், காலப் போக்கில், கையடக்கமான கருவியாக உருப்பெற்றுவிட்டது! 

இத்தகைய அற்புதமான மனிதருக்கு நம் வீட்டில் ஒரு சிலை வைத்தால் என்ன என்று சிந்தித்துப்பார்த்து, சிலை செய்பவர் ஒருவரிடம் கேட்டேன். கருங்கல்லில் சிலை செய்தால், கறுப்பாக இருக்கும். ஆனால், இவர் அமெரிக்கர் என்பதால் வெள்ளையாக இருப்பாரே என்று சற்று தயங்கினேன். சிலைக்குப் பதிலாக, ஒரு பெரிய படம் - 2 அடி நீளம், ஒன்றரை அடி அகலம் - அளவுக்குத் தயார் செய்தேன். அதற்கு கண்ணாடி போட்டு வீட்டு வாசலில் வைத்தேன். வருவோர் போவோர் எல்லாம் வியப்புடன் படித்துப் பார்த்து மகிழ்கின்றனர். அடுத்த கட்டமாக, 26.12.2020 இல் அவருடைய பிறந்த நாளை நினைவு கூர, நிரந்தரமாக ஒரு கல்வெட்டு தயார் செய்து அதனை எங்கள் வீட்டு மதில் சுவரில் பதித்தேன். 

அதில் கீழ்க்கண்டவாறு பொறிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 காலத்தில், நாம் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடந்தபோது, உலகெங்கும் உள்ள மக்களிடம் தொடர்பு கொள்வதற்கு உதவிய, கைபேசியை (Cell Phone) 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி அன்று கண்டுபிடித்த விஞ்ஞானி, திரு. மார்ட்டின் கூப்பர் அவர்களுக்கு நன்றி சொல்வோம். 26.12.1928 இல் பிறந்த இந்த மாமேதை, அமெரிக்காவில் நலமாக உள்ளார். அவர் நீடூழி வாழ்க!

26.12.2020 அ.ராஜ்மோகன் 

இடம்பெயர்ந்து இங்கங்கும் நடக்கின்ற போதும் 

தடையின்றி ஒருவரோ டொருவர் உரையாட 

விடையொன்று கண்டார்  விஞ்ஞானி கூப்பர்.

நெடுநாட்கள் அவர்வாழ வாழ்த்துக்கள் சொல்வோம்!

என்னுடைய வருத்தம் என்ன என்றால் இத் தகைய புரட்சிகரமான கண்டுபிடிப்பு 1973 இல் நடந் தது என்றாலும், இதைப்பற்றி எவருக்கும் தெரிய வில்லை. அதுமட்டுமல்ல. இந்த கண்டுபிடிப்பைப்பற்றி எந்த பள்ளி பாட நூலிலும் ஏன் இடம் பெறவில்லை என்று புரியவில்லை!

மற்றுமொரு வியப்புக்குரிய செய்தி என்ன வென்றால், இந்த விஞ்ஞானி தற்போது மருத்துவ சிகிச்சைக்காகச் செய்யும் மருத்துவ சோதனை குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். அப்படி என்ன செய்கிறார் என்று பார்ப்போம். 

தற்போது உள்ள நடைமுறையில், நாம் ஒரு மருத்துவரிடம் சென்றால் நமக்கு என்னென்ன மருத்துவ பரிசோதனைகள் (Medical Tests) செய்ய வேண்டும் என்று எழுதிக் கொடுப்பார். அதன்பிறகு நாம் பல்வேறு நிபுணர்களிடம் சென்று சோதனைகள் செய்து அவற்றின்மீது மருத்துவர்கள் குறிப்பு எழுதிய பிறகு, நமக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், என்னென்ன மருந்துகள் உட்கொள்ள வேண்டும் என்று எழுதித் தருவார். இந்த நடைமுறையில் ஒரு அடிப்படைத் தவறு என்னவென்றால், ஒரு நோயாளியை சோதனை செய்யும்போது, அன்றைய உடல்நிலை மட்டுமே தெரியும். சென்ற வாரம், சென்ற மாதம் எப்படி இருந்தது என்று தெரியாது. 

மார்ட்டின் கூப்பர் தன்னுடைய ஆராய்ச்சியின் பலனாக, உடலில் ஒரு சிறு கருவியைப் பொருத்தி விட்டால், அது தொடர்ந்து இதயம், கல்லீரல், குடல் போன்ற பகுதிகளில் அன்றாடம் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று வெளியே இருக்கும் பதிவு செய்யும் கருவியில் (Tape Recorder) பதிவு செய்யும். இந்தக் கருவியை நோயாளி தன்னுடனோ அல்லது ஒரு மருத்துவமனையிலோ வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது, மருத்துவர் அந்த நோயாளியை சோதனை செய்யும்போது, இந்தப் பதிவு செய்யும் கருவியில் ஏற்கெனவே பதிவான விவரங்களைப் போட்டுப் பார்த்த பிறகு, தன்னுடைய சிகிச்சையைத் தொடரலாம். 

இத்தகைய புரட்சிகரமான ஆராய்ச்சி வெற்றி பெற்றால், இது மக்களுக்கு ஒரு மாபெரும் உதவியாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. 

இணையத்தில் கூகுள் மட்டுமின்றி, அடியில் கொடுத்துள்ள வலைப் பக்கங்களைப் பார்க்கவும். 

http://simplyknowledge.com/popular/biography/martin-cooper 

Martin Cooper (inventor) - Wikipedia 

Facebook - The father of the cell phone: Martin Cooper at TEDxU Hasselt Salon 

Facebook - TEDxDelMar - Martin Cooper - June 2nd 2010 www.brittanica.com

அ.ராஜ்மோகன் 

2.1 2021

மின் அஞ்சல் - rajmohandgp@gmail.com 

கைபேசி - 9380 63 22 44

தமிழ்கூறும் நல்லுலகத்தின் நன்றி, திரு.

ராஜ்மோகன் அவர்களுக்கு என்றும் உரித்தாகுக!

Comments