எனது பொங்கல் பரிசு

 தந்தை பெரியார்

தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திராவிடர் இழி வுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக் குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களி டையே செய்துவந்த வேண்டுகோ ளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர்,

தீபாவளியைக் கொண்டாடு வது மானமற்றதும், அறிவற்றது மான செய்கைதான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது? என்று கேட்ட காலத்தில் பொங்கல் பண்டிகையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டு கொண் டாடலாம் என்று சுயமரி யாதை இயக்கம் விடை கூறிற்று. அக்கூற் றுக்கு ஏற்ப இந்த 10 ஆண்டில் பொங் கல் பண்டிகை தமிழர்கள் இடையில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து இன்று தீபாவளிப் பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாட ஆளாகிவிட்டார் கள். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் திராவிடர் கழகத் தவர்களும் பெரிதும் தீபாவளிப் பண்டிகையைக் கைவிட்டு விட்டார்கள் என்றும், பொங்கல் பண்டிகையைப் போற்றிக் கொண்டாடி வருகிறார்கள் என்றும் வலிமையாகக் கூறலாம்.

பொங்கல் வாழ்த்துகள்

இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு வேண்டுமானால் கூறுவோம். இந்த ஆண்டில் எனக்கு வந்த பொங்கல் வாழ்த்துக் கடிதங்கள் என் கைக்குக் கிடைத்தது மாத்திரம் 450க்கு மேற் பட்டவை களாகும். (இவைகளுக்கு நன்றி செலுத்தி, பதில் எழுத எனக்கு கார்டு, கவர் உட்பட 20 ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டு இருக்கிறது.)

இவைகளை அனுப்பினவர்கள் திராவிடர் கழகத்தையும் சுயமரி யாதை இயக்கத்தையும் சேர்ந்தவர் கள் மாத்திரமல்லாமல் பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா வகுப்பு மக்கள் களைச் சேர்ந்தவர்களாகும். இந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் பொங் கலை மக்கள் உணர்ந்து கொண்டா டியதைப் பற்றி மாத்திரமல்லாமல் இதைக் கொண்டாடிய மக்கள் 100க்கு 90க்கு மேற்பட்டவர்கள் தீபாவளியையும் மற்றும் பல ஆரியப் பண்டிகைகளை வெறுத்து விலக்கி இருப்பது மகிழத்தக்கதாகும்.

தமிழ் மக்கள் இந்தப் பொங்கல் விழாவைக் கொண்டாடி இருப்பது பற்றியும் அவர்கள் எனக்கு வாழ்த் துக்கூறி இருப்பது பற்றியும் நான் மகிழக்கூடியதும் எனக்கு அவர்கள் வாழ்த்தில் நம்பிக்கை இல்லாவிட் டாலும் உண்மையாகவே அவர்க ளது வாழ்த்துதலால் எனக்கு நல் வாழ்வு ஏற்பட்டது என்று கருதி மகிழ்வதும் நன்றியறிவித்துக் கொள் ளக்கூடியதும் ஒரு காரியத்திற்கு ஆகவே அவசியம் என்றும், கடமை என்றும் கருதுகிறேன். அது என்ன காரியம் என்றால் அதுதான் தீபா வளி கொண்டாடுவதை விட்டுவிட்டு பொங்கலைக் கொண்டாட முன்வந் ததின் மூலம் ஆரியத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டு தன்மானத் தன்மை அடைந்ததேயாகும். இந்த மகிழ்ச்சிக்கு ஈடாக என் வாழ்வில் எனக்கு வேறு எந்தப் பெரிய நிலை ஏற்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படாது.  பொங்கல் பண்டிகையி னால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத் துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆகப் பொங்கலைப் பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன்.

ஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர் களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர்களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடை வதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக்குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை; கலை, பண்பு காரியங் களும் உணர்ச்சிகளும் அடியோடு ஒழிந்து சுத்தத் தமிழனாக, தன்மானத் தனித் தமிழனாக விளங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப்படியே நீங்கள் அனேகமாய் விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை கொள்ளுகிறேன் என்பது ஆகும்.

மற்றொரு வாழ்த்து

இந்தப் பொங்கல் வாழ்த்து நான் பெற்றதுபோலவே கூடிய சீக்கிரம் குறள் வாழ்த்துப் பெற்று மகிழும் காலமும் எனக்கு வெகு அண்மையில் இருக்கிறது என்றே இவ்வாண்டுத் துவக்கத்தில் கருதி எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சி அடை கிறேன்.

ஏன் எனில் தீபாவளி முதலாய ஆரியர்க்கு உயர்வும் திராவிடர்க ளுக்கு -- தமிழர்களுக்கு இழிவும் ஏற் படுவதற்கு ஆக எப்படி ஆரியப் பண்டிகைகள் இருந்து வருகின்ற னவோ, அதேபோல்தான் ஆரியர்க ளுக்கு உயர்வும் திராவிடர்களுக்கு இழிவும் கீழ்மையும் மானமற்ற தன்மையும் நிரந்தரமாய் இருந்து வருவதற்கு ஆகவே கற்பிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டு வருவனவை தான் வேதம், (மனுதர்ம) சாஸ்திரம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலியவைகள் கொண்ட கலை, காவியம், இலக்கியம், தர்ம நூல், நெறி நூல் என்று சொல்லப்படு பவைகளாகும்.

இந்த ஆதாரங்களை நிலைநிறுத்த வும் பரப்பவும் ஆரியர்கள் தன்மான மற்ற தமிழர்களையும் அறிவற்ற தமிழ் மடையர்களையும் பல தந் திரங்களால் மானம், ஈனம் அற்ற சூழ்ச்சிகளால் தங்கள் வயப்படுத்தி சமயம், சட்டம், கல்வி, கலை முதலி யவைகள் சார்பாகத் தமிழ் மக்கள் எல்லோருடைய இரத்தத்திலும் கலக்கும்படிச் செய்துவிட்டார்கள்.

இராமாயணத்தை, கீதையை ஏற்றுக் கொள்ளாதவனுக்கு ஜட்ஜ் பதவி இல்லை, மந்திரி பதவி இல்லை என்பது மாத்திரமல்லாமல் இராமா யணம், கீதை முதலியவைகளை ஏற் றுக்கொண்டு பிரச்சாரம் செய்பவன், பிரச்சாரம் செய்ய உதவுபவன் எவ் வளவு அயோக்கியனாக இழிதன்மை உடைய மகனாக இருந்தாலும் அவனே மேல்மகனாக, மகானாக, சிறந்த அறிவாளியாக, பண்டிதனாக, சிரோன்மணியாகக் கருதப்படுவான் - கருதப்படுகிறான் என்கின்ற தன் மைக்கு அவை வந்துவிட்டபடியால், ஒரு சுயமரியாதைக்காரன் என்ற நிலையில் விழுந்துபட்டு நிலை குலைந்து கீழ்முகப்பட்டுத் தலை யெடுக்க முடியாமல் செய்யப்பட்டு விட்ட திராவிட சமுதாயத்தை - தமி ழர் சமுதாயத்தை இழிவிலிருந்தும் பிறவி அடிமைத்தன்மையிலிருந்தும், முன்னேற்றத் தடையிலிருந்தும் எந்த விலை கொடுத்தாவது விடுதலை செய்து நல்வாழ்வு வாழ்விக்க வேண் டுவது, அதற்கு ஆகத் தொண்டாற்றி மடிவது என் வாழ்நாளினுடையவும் நான் விடும் மூச்சினுடையவும் உள்ளே வாங்கும் மூச்சினுடையவும் லட்சியம் என்று கருதி இருக்கும் நான் அவைகளை அதாவது அந்த ஆரிய நூல்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம், இராமாயணம், கீதை, பாரதம் ஆகியவைகளைத் தமிழர்களுடைய உள்ளத்திலிருந்து, சித்திரத்திலிருந்து, கலையில் இருந்து வேரோடு களைந்து எறிய வேண் டியது முக்கிய முதலாய, இன்றிய மையாத கடமை. ஆனதால் தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளுக்குப் பதிலாக பொங்கலைக் காட்டியது போல் வேதம், சாஸ்திர, புராணம், இராமாயணம், பாரதம், கீதை முதலியவைகளுக்குப்   பதிலாக ஒரு நெறி, கலை, வழிகாட்டுவதற்கு என்று குறளைக் காட்டவேண்டிய அவசியத்திற்கு ஆளானேன்.

குறள் இல்லாவிட்டால் மனிதன் வாழ மாட்டானா? வாழ முடியாதா? என்ற கேள்வி பிறக்கலாம். குறளில்லா விட்டால் மனிதன் வாழலாம். ஆனால், அறிவும் மானமும் வேண் டும். இவை உள்ளவர்கள் வேறு எது இல்லாவிட்டாலும் மனிதனாக வாழ முடியும். ஆனால், ஆரியமானது நம் நாட்டில் உள்ள தமிழர்களில் 100க்கு 99 பேர்களும் அறிவை அடி மைப்படுத்தி மானத்தை அழித்து இழிமகனாக - கடை மனிதனாக ஆக்கப்பட்டுவிட்டதால் - ஆக்கப் பட்டது மாத்திரமல்லாமல் அந்தப் படி ஆக்கப்பட்டிருப்பதை ஆசீர்வா தமாகக் கொள்ளும்படி செய்யப் பட்டிருப்பதால், அறிவையும் மான உணர்ச்சியையும் காட்டுவற்கு ஒரு சாதனம், விளக்கு ஒளி தேவைப் பட்டுவிட்டது. ஆகவே, தமிழனுக்கு இருக்கும் இழிவை -- கடைத் தன் மையைக் காட்டவும், மான உணர்ச் சியைத் தூண்டவும் அறிவு வருவதற் குக் குறளைத் தூண்டு கோலாகக் கொள்ளும்படி செய்ய வேண்டியவனானேன்.

மாற்றுப் பண்டம்

நான் கூறுகிறேன் குறள் படிப்பவனுக்கு வேதம் ஏன்? எதற்காக வேண்டும்? மனுதர்மம் ஏன்? எதற்காக வேண்டும்? பாரதம், கீதை, இராமாயணம் ஏன்? எதற்காக வேண்டும் என்பதை மனிதன் மானமுள்ள அறிவுள்ள மனிதன் சிந்திக்கட்டும். எல்லா மனிதனும் சிந்திக்காவிட்டாலும் தமிழன் - திராவிடன் சிந்திக்கட்டும் என்பதுதான் எனது வேண்டு கோளும், ஆசையுமாகும். ஆகவே குறள், மனித தர்மத்துக்கு என்று ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட எல்லா சாதனங்களுக்கும் மாற்றுப் பண்டமாகும்.

ஆகவே, இந்த ஆண்டு பொங்கல் ஆண்டு துவக்கத்தில் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்தா கவும் பொங்கல் பரிசாகவும் குறளைக் கொடுக் கிறேன். இக்குறள் ஆயிரக்கணக்கான ஆண்டு களாகத் தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்து வரப்பட்டதேயாகும். அதுபோல்தான் பொங்கல் விழாவும் பல்லாண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பெரியோர்களால் கொடுத்து வரப்பட் டாலும் நான் கொடுப்பதற்கும் அவர்கள் கொடுத்து வந்ததற்கும் பேதம் உண்டு. அதாவது அவர்கள் தீபாவளி, அஷ்டமி, நவமி களுடன் அவைகள்போல் பொங்கலையும் கருதிக் கொடுத்து வந்தார்கள். அப்படியே பாரதம், கீதை, இரா மாயண புராணம், மனுதர்மம்போல் குறளையும் ஒன்றாகக் கருதிக் கொடுத்து வந்தார்கள். இதன் பயனாய் பன்றியுடன் சேர்ந்த பசுவின் பண்புபோல் பொங்கலும் குறளும் அதனால் ஏற்பட வேண்டிய நலம் கெட்டு கேடு ஏற்படும்படி ஆயிற்று. ஆனால், நான் கொடுப்பது ஆரியப் பண்டிகைகளை ஒழித்து விட்டுவிட்டு அந்த இடத்தில் அதற்குப் பதிலாகப் பொங் கலையும், ஆரியக் கலை, தர்ம சாஸ்திரம் ஆகிய வைகளான வேத சாஸ்திர புராண இதிகாசங் களை - கீதை இராமாயண பாரதம் ஆகியவை அடியோடு நீக்கிவிட்டு மக்கள் உள்ளத்தில் இருந்து ஒழியச் செய்து விட்டு அதற்குப் பதிலாக அவைகள் இருந்த இடத்தில் குறளை - குறள் ஒன்றையே கொடுக்கிறேன். ஆதலால், தமிழர்க ளுக்கு இப்பொங்கலாண்டில் எனது பொங்கல் பரிசாகக் குறளைக் கொடுக்கிறேன். இதை எப்படிக் கொடுக்கிறேன் என்றால், தமிழ் மக்க ளுக்கு எனது காணிக்கையாக அவர்கள் என்பால் கொண்டுள்ள அருளுக்கு -- அன்புக்கு -- நம்பிக் கைக்கு தட்சிணையாகக் கொடுக்கிறேன்.

பதில் பரிசு தருவீர்களா?

இந்த எனது தட்சிணையை, காணிக்கையைத் தமிழ் மக்கள் ஏற்று எனக்கு அருள்கூர்ந்தார்கள் என்பதை அவர்கள் காட்டிக்கொள்ள வேண்டு மானால், குறைந்த அளவு என்பால் அருளும், அன்பும் நம்பிக் கையும் கொண்ட தமிழர் ஒரே ஒரு சிறு கருணை காட்டவேண்டும். அந்தக் கருணை காட்டுவது என்பது அருள் கூர்ந்து கருணை கூர்ந்து இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு உண்மைத் தமிழனும் பார்ப்பனர்களால் வெளி யிடும் பத்திரிகைகளையும், அவர்களால் வெளி யாகும் நூல்களையும் கண்டிப்பாக வாங்கக் கூடாது; ஆதரிக்கக் கூடாது என்பது தான்.

உண்மையும், மானமும் இன உணர்ச்சியும் உள்ள தமிழனையும் காணவேண்டுமானால் அவன் பார்ப்பனப்  பத்திரிகையை வாங்காத வன், ஆதரிக்காதவனாக இருக்க வேண்டும். இது தமிழர்களுக்கு, அவர்களது மானத்திற்கும் முன் னேற்றத்திற்கும் மீட்சியின் உயிர்நாடி ஆகும்.

தமிழர்களாகிய நாம் இந்த ஈன நிலையில் இருப்பதற்கு பாரதம், இராமாயணம், கீதை, மனு நீதியைவிட இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளே இன்று முக்கியக் காரணமாகும். தமிழர்கள் பலர் இன்று பார்ப்பனர்களுக்கு உண்மையான சூத்தி ரர்களாய், சூத்திரச்சிகளாய் இருப்பதற்குக் கார ணமும் இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளேயாகும்.

ஆதலால் தமிழ் மக்களுக்கு பொங்கலுக்கு எனது வாழ்த்தும் காணிக்கையும் விண்ணப்பமும் இந்த மூன்றும்தான். அதாவது,

1. ஆரியப் பண்டிகைகளை ஒழித்து, விலக்கி, பொங்கல் விழாக் கொண்டாடுவது.

2. பாரதம், இராமாயணம், கீதை, புராணம் முதலிய ஆரிய இலக்கியம், இதிகாசம், தர்ம சாஸ்திரம் முதலியவைகளை ஒழித்து, விலக்கி, குறளை ஏற்றுப் படித்து உணர்ந்து அதன்படி நடப்பது.

3. இந்து, சுதேசமித்திரன், தினமணி, பாரத தேவி, இந்தியன் எக்ஸ்பிரஸ், கல்கி, ஆனந்த விகடன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளை அடியோடு விலக்கி தமிழர்கள் திராவிடர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளை வாங்கிப் படித்து ஆதரிப்பது.

பத்திரிகைக்கு ஆக என்று ஒரு தனித் தலை யங்கம் பின்னால் எழுத இருக்கிறேன். அதைப் பார்ப்பனர்களும் அதாவது பத்திரிகைக்காரப் பார்ப்பனர்கள் தவிர்த்து மற்ற பார்ப்பனர்கள் யாவரும் பெரிதும் ஏற்கும் வண்ணம் இருக்கும்.

பொங்குக பொங்கல்!

பொங்குக தமிழ் மக்கள் மானமும் அறிவும்!!,

(விடுதலை -19.01.1969)

Comments