"போராடிப் பெற்ற உரிமைகள் இன்றைக்குப் பறிபோகின்றன" அ.தி.மு.க. ஆட்சிக்கு விடை கொடுப்பீர்!

பெரியார் விருது பெற்றவர்கள் - எங்களுக்குப் பெரிய அறிவாயுதங்கள்!

திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, ஜன.30  பெரியார் விருது பெற்றவர்கள் - எங்களுக்குப் பெரிய அறிவாயுதங்கள்!  நம்முடைய தலைவர்கள் "போராடி பெற்ற உரிமைகள் இன்றைக்குப் பறிபோகின்றன"  - .தி.மு.. ஆட்சிக்கு விடை கொடுப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 27ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் விழா 16.1.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.  பல்துறை சாதனையாளர்களுக்கு பெரியார் விருது வழங்கி விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

தமிழ்நாட்டினுடைய மீட்சி இருக்கவேண்டும் - திராவிடருடைய மீட்சி இருக்கவேண்டும்!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.. கூட்டணி வெற்றி பெறும். திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறவேண்டும் என்று சொல்வது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக அல்ல நண்பர்களே - தமிழ்நாட்டினுடைய மீட்சி இருக்கவேண்டும் - திராவிடருடைய மீட்சி இருக்க வேண்டும் - சுயமரியாதை உருகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.

நம்முடைய பிள்ளைகளின் மருத்துவக் கனவு என்னாயிற்று?

மாநில உரிமைகள் என்னாயிற்று?

இன்றைக்கு நாம் பொங்கலோ பொங்கல் என்று சொல்கிறோமே, உள்ளபடியே என்ன சூழல்?

இன்றைக்குவிடுதலை'யில்கூட ஒரு அறிக்கையை எழுதியிருக்கிறோம். அதனை ஊன்றிப் படித்துப் பாருங்கள். நாம் இன்றைக்கு இங்கே பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்ற இதே நேரத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கண்ணீரோடு இருக்கிறார்கள். அதனை நினைத்தால், நமக்கு வேதனையாக இருக்கிறது.

விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்

‘‘வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன்'' என்று பாடினார் வள்ளலார் அவர்கள். வாடிய பயிரைக் கண்டபொழுது - வாடிய மனிதனைக்கூட அல்ல - அப்படிப்பட்ட ஒரு மனிதநேயம் - உணர்ச்சிபூர்வமான வாழ்க்கை உள்ளவர்கள் தமிழர்கள் - தமிழ்மண் - திராவிட மண்.

ஆனால், இன்றைக்கு அங்கே என்ன நிலை என்று பார்த்தால், அழுகிய பயிரைப் பார்த்து, நாங்கள் அழுத வண்ணம் இருக்கிறோமே -எங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரவில்லையே என்று  விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

டில்லி தலைநகரில் என்ன சூழல்?

ஒரு திரைப்படம் ஓடினால் போடுவது போன்று, ‘‘52 ஆவது நாள் விவசாயிகள் போராட்டம் தொடருகிறது'' என்று செய்தி வெளியிடுகிறார்கள்.

 உலகமே கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

ஆனால், அதேநேரத்தில், உலகமே கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை, அரசியல் கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடத்தை, அந்த விவசாயப் பெருமக்கள் பஞ்சாபிலிருந்தும், அரியானாவிலிருந்தும், உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்தும் காட்டியிருக்கிறார்கள்.

70 பேர் இறந்திருக்கிறார்கள்; நண்பர்களே, நன்றாக நினைத்துப் பாருங்கள் - உழவர் திருநாள் - விவசாயத் திருநாள் - இந்த நேரத்தில் 70 பேர் இறந்திருக்கிறார்கள்.

எத்தனை முறை பேச்சுவார்த்தை  நடைபெறுகிறது? 10 ஆம் முறை பேசுகிறோம், 11 ஆம் முறை பேசுகிறோம் என்கிறார்கள்; என்ன பேசி, என்ன பயன்?

எனவேதான், விவசாயத்திற்கு ஏன்  இவ்வளவு அலட்சியம்?

இப்பொழுது மத்தியில் நடைபெறுவது மனுதர்ம ஆட்சி - பல பேருக்குத் தெரியாது.

ஏன் அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது?

உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் என்று பாட்டு பாடுகிறீர்களே, அந்த உழவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

இன்றைக்கு விவசாயிகளுடைய நிலை என்ன?

அவர்களுடைய குடும்பத்தின் நிலை என்ன?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு இரட்டிப்பு மடங்கு உதவி செய்வோம் என்று சொன்னீர்களே, அதைச் செய்தீர்களா?

மூல காரணம் உண்டு நண்பர்களே! பெரியார் சிந்தனை என்பது நோய் நாடி, நோய் முதல் நாடுவது என்பதுதான்.

ஏன் விவசாயிகளை அலட்சியப்படுத்துகிறார்கள் -

ஏன் விவசாயிகளைப்பற்றி மத்திய அரசு கவலைப் படவில்லை - ஏன் விவசாயிகள்மீது இரக்கப்படவில்லை-

விவசாயிகள் உங்களுடைய தந்திரங்களைக் கண்டு ஏமாறப் போவதில்லை.

நோய் நாடி, நோய் முதல் நாடவேண்டும்!

நண்பர்களே, சமூக விஞ்ஞானியான தந்தை பெரியார், நோய் நாடி, நோய் முதல் நாடக்கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார். அதற்கு அடையாளம் என்ன தெரியுமா?

‘‘உழுதவன் கணக்குப் பார்த்தால், உழக்குக்கூட மிஞ்சாது'' என்று சொல்லக்கூடிய அளவிற்கு வேதனை.

மழை அதிகமாகப் பெய்யும் - இல்லையென்றால், வறட்சி.

வறட்சி நிவாரணத்திலும் கொள்ளையடிக்கிறார்கள் - வெள்ள நிவாரணத்திலும் கொள்ளையடிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் மனுதர்மம் -  விவசாயப் போராட்டத்திற்கும், மனுதர்மத்திற்கும் என்ன சம்மபந்தம்? என்று நீங்கள் நினைக்கலாம்.

மீண்டும் மனுதர்ம ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் திட்டமிட்டுக் கொண் டிருக்கிறார்கள். நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.

விவசாயிகள் போராட்டத்தில் நடைபெறும் பிரச்சினை களை உங்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.

மனுதர்மம் அத்தியாயம் 10 - சுலோகம் 84.

நாங்கள் ஆதாரமில்லாமல் எதையும் பேசமாட்டோம் என்று இங்கே தோழர்கள் சொன்னார்கள். அய்யா அவர்களும் ஆதாரத்தோடுதான் பேசுவார்.

அந்த அடிப்படையில்,

அசல் மனுதர்மம் என்ன சொல்கிறது?

அசல் மனுதர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

‘‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக் கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது; ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப் பையையும், மண்வெட்டியையும், பூமியையும், பூமியில் உண்டான பல ஜந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?’’

 - (மனு அத்தியாயம் 10; சுலோகம் 84).

இதற்கு முந்தைய சுலோகம் கூறுவதென்ன?

‘‘பிராமணனும், க்ஷத்திரியனும் வைசியன் தொழிலினால் ஜீவித்த போதிலும், அதிக ஹிம்சையுள்ளதாயும், பராதீனமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்கவேண்டியது.’’ (‘‘அதைச் செய்யாவிட்டால், ஜீவனம் நடக்காத காலத்தில் அதையும் அந்நியனைக் கொண்டு செய்விக்க வேண்டும்‘’ என்பது முன் சுலோகத்தின் கருத்து)

 - (மனு அத்தியாயம் 10; சுலோகம் 83).

இதற்கு முன் சுலோகம் கூறுவதென்ன? அதையும் பார்ப்போம்!

‘‘தன் ஜாதித் தொழில், க்ஷத்திரிய ஜாதித் தொழில் இரண்டினாலும் ஜீவிக்கக் கூடாவிடில் வைசியன் தொழிலான பயிரிடுதல், பசுவைக் காப்பாற்றல், வியாபாரஞ் செய்தல் இவைகளாலும் ஜீவிக்கலாம்.’’

 - (மனு அத்தியாயம் 10; சுலோகம் 82).

இந்த சுலோகத்திற்குமுன் உள்ள சுலோகம் (அத்தியாயம் 10, சுலோகம் 81) கூறுவது என்ன?

‘‘பிராமணனுக்கு மேற்சொல்லிய பிரகாரமாக தன் தொழிலினால் ஜீவிக்கக் கூடாத சமயத்தில் கிராமாதிகாரந் தேசாதிகாரந் முதலிய க்ஷத்திரியன் தொழிலினால் ஜீவிக்க வேண்டியது. ஏனென்றால், அது அவனுக்கு அடுத்த ஜாதியின் தொழில் அல்லவா?"

(ஆதாரம்: ‘‘அசல் மனுதர்மம்‘’, பதிப்பு 1919, திருவைந்திரபுரம் - கோமாண்டூர் - இராமாநுஜாசாரியார் - வடமொழி, சமஸ்கிருத பாஷையில் உள்ளது).

உழவர்களின் சிறப்பை சொல்லும் திருக்குறள்!

நண்பர்களே, இப்பொழுது திருவள்ளுவர் எழுதிய திருக்குறளைப் பார்ப்போம்.

10 குறளை உழவரைப்பற்றி எழுதி வைத்திருக்கிறார்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்.

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்.

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.

இரண்டு வேறு கலாச்சாரங்கள் - இரண்டு பண்பாடுகள் - இதற்குப் பெயர் திராவிடம் - அதற்குப் பெயர் ஆரியம் என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆரியத்திற்கும், விவசாயத்திற்கும் சம்மந்தமில்லை. ஆனால், அவனுக்குப் பச்சரிசியை  நம்மாள் கொடுப்பான். அவனுக்காகவே பச்சரிசி. நம்மால் புழுங்கலரிசியை சாப்பிடுவான்.

இதைக் கண்டித்து, இதனை வெளிப்படுத்திய ஒரே தலைவர் அறிவு சிந்தனையாளர் தந்தை பெரியார் அல்லவா!

பெரியாருடைய சிந்தனை ஏன் தேவை?

விவசாயிகளை இன்றைக்கு அலட்சியமாக நினைக் கிறார்கள். எந்தக் காலகட்டத்திலும் விவசாயிகள் நன்றாக வாழவில்லை. ஆனால், இந்த நாட்டிற்குப் பெயர் என்ன? விவசாயிகள் நாடு - பெரும்பாலும் விவசாயிகள் இருக்கின்ற நாடு - உழவர்கள் இருக்கின்ற நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

‘‘தமிழிலும் எழுதலாம்'' என்ற அறிவிப்பு!

நம்முடைய இளைஞர்கள் படித்துவிட்டு, இன்றைக்கு வேலையில்லாமல் இருக்கிறார்கள். அஞ்சத் துறையில்  பணி வாய்ப்புக்காக நடத்தப்படும் தேர்வு தமிழில் கிடையாது. தமிழ்நாட்டுக்காரனுக்கு கேள்வித்தாள் தமிழில் கிடையாது; அதற்காக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடிப் பற்றி தலைவர்கள் அறிக்கை விட்டவுடன், ஊடகங்கள் அதனைப் பெரிதாக செய்தி வெளியிட்டவுடன், ‘‘தமிழிலும் எழுதலாம்'' என்று அறிவிப்பு வெளியிடுகிறார்கள்.

இதற்கு என்ன அர்த்தம்? நீங்கள் என்ன எங்களுக்குப் பிச்சை போடுகிறார்களா?

நண்பர்களே, நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்வியில் கை வைத்தார்கள் -

சமூகநீதியை நம்முடைய தலைவர்கள் போராடிப் பெற்றதினால்தான், இன்றைக்கு நாம், நம்முடைய பிள்ளைகளும் படித்திருக்கின்றோம்.

ஒரு மூன்று தலைமுறைக்கு முன்பு பார்ப்போமே யானால்,  நம்முடைய தாத்தா படித்தவரா? உங்களுடைய தாத்தா படித்தவரா? என்னுடைய குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி. உங்களுடைய குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - எஸ்.எஸ்.எல்.சி. படித்திருப்போமா? பெண்கள் படித்திருப்பார்களா?

பெரியார் என்ற மாமனிதர் இல்லையானால்,

திராவிடர் இயக்கம் இல்லையானால்,

கம்யூனல் ஜி.. என்கிற வகுப்புரிமை இல்லையானால் நாமெல்லாம் படித்திருக்க முடியுமா?

"போராடிப் பெற்ற உரிமைகள் 

இன்றைக்குப் பறிபோகின்றன"

தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் எல்லாம் போராடிப் பெற்ற உரிமைகள்  இன்றைக்குப் பறிபோகின் றனவே, இதற்கெல்லாம் என்ன வழி என்பதை நினைத்துப் பாருங்கள்.

எனவேதான், இளைஞர்களே, இன்றைக்கு உங்கள் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன. வெளிமாநிலத்துக் காரர்கள் இங்கே வந்து அமர்ந்திருக்கிறார்கள். வேலை வாய்ப்புகளில் நம்முடைய இளைஞர்களுக்கு இடமில்லை. பக்கத்து மாநிலங்கள் என்ன சொல்லுகின்றன தெரியுமா? 80 சதவிகித வேலை வாய்ப்புகள் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் என்று. அவனுக்கு வகுப்பு வாதம் கிடையாதா? நாம் பயப்படவேண்டுமா?

இதற்கெல்லாம் ஒரே தீர்வு நண்பர்களே, வருகின்ற தேர்தலில், தி.மு.. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

.தி.மு.. ஆட்சிக்கு விடை கொடுப்பீர்!

.தி.மு.. ஆட்சிக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தப் பொங்கல் நாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சூளுரை என்னவென்றால், தி.மு.. கூட் டணியை வெற்றி பெறச் செய்வதுதான். அது தி.மு..விற்காக அல்ல.

பெரியார் அவருடைய அனுபவத்தில் சொன்னார். கடைசியாக தியாகராயர் நகரில் உரையாற்றும்பொழுது சொன்னார்.  நான் சொல்கிறேன், நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் - ‘‘பார்ப்பான் வெளிப்படையாகப் பேசுவ தற்குத் தயங்கிய விஷயங்களை, இனிமேல் வெளிப் படையாக, தாராளமாகப் பேசுவான்'' என்று சொன்னார்.

அது எந்த அளவிற்கு உண்மை என்பதை இன்றைய காலகட்டம் உங்களுக்குத் தெளிவாக  தெரிவிக்கும்.

ஆகவேதான் நண்பர்களே, உங்களுடைய பெற்றோ ருக்குச் சொல்லுங்கள்; உங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். இளைஞர்களே, ஏமாந்து விடாதீர்கள்!

பெரியார் விருது பெற்றவர்கள் -

எங்களுக்குப் பெரிய அறிவாயுதங்கள்

இன்றைக்குப் பெரியார் விருது பெற்றவர்கள் - எங்களுக்குப் பெரிய அறிவாயுதங்கள். இவர்களை நாங்கள் பாராட்டுகிறோம், உற்சாகப்படுத்துகின்றோம்.  எங்களுக்கு இவர்கள்தான் துருப்புகள் - இவர்கள்தான் ஆயுதங்கள். இப்பொழுது நடப்பது என்பது இனப்போராட்டம் - அரசியல் அல்ல. அதில் இவர் முக்கியமா? அவர் முக்கியமா? என்பதல்ல.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது தி.மு..வுக்காக அல்ல. உங்களுடைய பிள்ளைகளுக்காக - உங்களுடைய பேரப் பிள்ளை களுக்காக - உங்களுடைய பெண்கள் படிக்கவேண்டும் என்பதற்காக -உங்களுடைய பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

விவசாயிகளின் கண்ணீரை எப்படித் துடைக்க முடியும் -

தாய்மார்களின் கண்ணீரை எப்படித் துடைக்க முடியும் -

உள்ளூர் இளைஞர்களுக்கு எப்படி வேலை வாய்ப் பைக் கொடுக்க முடியும்?

பா...வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பதால், அவர்கள் பகிரங்கமாக என்ன சொல்கிறார்கள் என்றால், தி.மு.. ஆட்சிக்கு வரக்கூடாதாம்.

அதற்காக விபீஷ்ண ஆழ்வார்களையெல்லாம் பிடிக்கிறார்கள்; அந்தக் குதிரையை தயார் செய்கிறோம்; இந்தக் குதிரையைத் தயார் செய்கிறோம் என்று சொன்னார்கள். அப்பொழுதே நாங்கள் சொன்னோம்,

தி.மு.. என்கிற ரேஸ் குதிரை என்பது

மக்களால் தயாரிக்கப்பட்டது

‘‘மாயக் குதிரை, நொண்டிக் குதிரை, சண்டிக் குதிரை, வண்டிக் குதிரை, ஜட்கா குதிரை இவையெல்லாம் ரேஸ் குதிரை என்ற தி.மு..வின் முன் நிற்காது" என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். தி.மு.. என்கிற ரேஸ் குதிரை என்பது மக்களால் தயாரிக்கப்பட்டது.

எனவேதான் நண்பர்களே, நான் ஏதோ தேர்தல் பிரச்சாரம் செய்கிறேன் என்று நினைக்காதீர்கள். எங்களுக்கும், தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை.

எங்களுடைய பிள்ளைகளுக்காக கேட்கிறோமா? அல்லது நாங்கள் பதவிக்குப் போகவேண்டும் என்பதற் காகக் கேட்கிறோமா?

உங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால மான வாழ்விற்காகத்தான்.

மானமும், அறிவும் மனிதருக்கு அழகு. இன்றைக்கு மானத்தை விட்டுக் கொண்டிருக்கிறோமே -

விவசாயம் என்பது ஒரு மாநிலத்தினுடைய உரிமை- 

மத்திய அரசு, வேளாண் சட்டங்களைக் கொண்டு வருவதற்கு முன்பு, மாநிலங்களைக் கலந்தாலோசித் தார்களா?

அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறதே, இண்டர் ஸ்டேட் கவுன்சில் - அதனைக் கூட்டியிருக்கிறார்களா?

இதை அத்தனையும் கேட்கவேண்டுமானால்,  உண்மையான திராவிடர் இயக்கத்தால்தான் முடியும். அதைச் செய்யவேண்டும்.

ஆகவேதான் நண்பர்களே, இங்கே இருந்து நீங்கள் செல்லும்பொழுது, ஒரு திட சித்தத்தோடு செல்லவேண்டும்.

ஒரே ஜாதி என்று சொல்வதற்குத்

தயாராக இருக்கிறீர்களா?

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேசன் கார்டு என்கிறார்களே, ஒரே ஜாதி என்று சொல்வதற்குத் தயாராக இருக்கிறீர்களா?

ஒரே ஜாதி என்று சொல்லுங்களேன்.

செட்டியார், முதலியார் போன்ற நம்மாட்களில் பெரிய மணியை, கொடுத்து ஆட்டச் சொல்கிறார்கள்.

கோவில் கருவறைக்குள் சின்ன மணியைத் தூக்கிக் கொண்டு வியர்க்காத அளவிற்கு ஆட்டுகின்றவன் ஒருவன். அவனை காலை தொட்டு நக்குகிறானே, அது மானங்கெட்ட பிழைப்பல்லவா? தந்தை பெரியார் என்ற மாமனிதர் இல்லாவிட்டால், நமக்கு முதுகெலும்பு இருக்குமா? ஏன் நிமிர்ந்து நில்லுங்கள் என்று சொல்கிறோம்.

காலில் விழுகின்ற கலாச்சாரம் பெரியாரிடம் உண்டா? ஆனால், வடநாட்டில் பாருங்கள், யாரையாவது பார்த்தால், காலில் விழுந்து தொட்டுக் கும்பிடுவார்கள்; ‘ராம் ராம்' என்பார்கள்.

ஆனால், இங்கே ராமன் கதையும் நடக்கவில்லை; சென்ற தேர்தலில் கிருஷ்ணன் கதையும் நடக்கவில்லை.

எனவே இனிமேல் நமக்கு இவையெல்லாம்  பயன்படாது - திருக்குறள் ரொம்ப நல்ல குறள். திருவள்ளுவர் மகா பங்களித்து இருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். இதைச் சொன்னால், எங்கள் ஆட்கள் வாக்களித்துவிடுவார்களா?

உத்தரகாண்டில், திருவள்ளுவர் சிலையை  நீங்கள் எங்கே போட்டீர்கள் என்பதை மறந்துவிட்டோமா?

அவர்களுடைய முகமூடியைக் கிழிப்பதற்கு நாங்கள் தேவையில்லை!

அடிக்கடி முகமூடியை மாற்றுவார்கள்; அடிக்கடி அவதாரம் எடுக்கிறார்கள் - இப்பொழுது தமிழ் அவதாரம் எடுக்கிறார்கள். அவர்கள் தமிழ் அவதாரம் எடுத்தால், அவர்களுடைய முகமூடியைக் கிழிப்பதற்கு நாங்கள் தேவையில்லை. கரு.பழனியப்பன்கள் போதும்; போஸ் வெங்கட்டுகள் போதும் - இதோ எதிரில் அமர்ந்திருக்கின்ற அறிஞர் பெருமக்கள் போதும் -  இந்த அறிவாயுதங்கள் போதும்.

எனவேதான், புதியதோர் எழுச்சியை உருவாக்கவேண்டும்.

பொங்கல் நாளில், புதுப் பொங்கலில் நாம் சூளுரைப்போம். மிக முக்கியமாக தெளிவாக சூளுரைப்போம் என்று கூறி,

உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறி, இந்த விழாவிற்கு வந்த உங்களுக்கும், விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இப்பொழுது ஏமாந்தால், எப்போதும் விடியல் இல்லை

ஒவ்வொருவரும், பத்து பேரிடம் பிரச்சாரம் செய்யுங்கள் - ஏமாந்துவிடாதீர்கள்!

இப்பொழுது ஏமாந்தால், எப்போதும் இல்லை.

"இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லை" என்று சொன்னவர், எங்கே போய்விட்டார்!

இப்பொழுது ஏமாந்தால், எப்போதும் விடியல் இல்லை - எப்போதும் விடியல் இல்லை.

மறவாதீர் நண்பர்களே! மறவாதீர்!! நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Comments