'திருமாவளவன் தனி மனிதனல்ல - இதோ திராவிடர் கழகம் இருக்கிறது என்று காட்டுவதற்காக தமிழர் தலைவர் அளித்த விருதுக்கு - மிக்க நன்றி!'

எழுச்சித் தமிழர் நெகிழ்ச்சியுரை

* நமது சிறப்பு செய்தியாளர்

மனுதர்மம் குறித்து உண்மைத் தன்மையோடு காரண - காரியத்தோடு பெரியார், அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் சார்பில் காணொலியில் நான் கூறிய கருத்துக்காக சனாதன சக்திகள்  நாலாத் திசைகளிலும் சூழ்ந்து நின்று என்மீது அம்பு தொடுத்த கால கட்டத்தில் தாய் உணர்வோடு, கொள்கை வழி நின்று திருமாவளவன் கூறிய கருத்தில் என்ன தவறு இருக்கிறது? என்று கூறி எனக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அரணாக, உந்து சக்தியாக நின்றவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  வீரமணி அவர்கள். அதன் அடையாளம்தான் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் எனக்கு வழங்கப்பட்ட சமூகநீதிக்கான வீரமணி விருது. எனக்காக மட்டும் அல்ல - இலட்சோப இலட்சம் எங்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் சேர்த்து அளிக்கப்பட்ட விருது (பலத்த கரஒலி!)

இன்றைக்கும் சொல்லுகிறேன் - மனுநீதி என்பது ஒரு குலத்துக்கொரு நீதியே. பெண்களை இழிவுபடுத்துவதே- அடிமைப்படுத் துவதே!

மனுதர்மம் என்பது இன்றைய சட்டம் இல் லாததாக இருக்கலாம். அது ஊட்டிய மனப் பான்மை  இன்றும் தொடரத்தான் செய்கிறது. இன்னும் ஜாதிவாரியாக, ஜாதி மனப்பான்மையுடன் பிரிந்து தான் கிடக்கிறார்கள். எடுத்துக்காட்டாக திருமணங்களை எடுத்துக் கொள்வோம் - அது ஜாதிக்குள் தானே பெரும்பாலும் நடக்கிறது.

அதனால்தான் தாழ்த்தப்பட்டவர்கள் வருணா சிரமத் துக்குள் வராதவர்கள்  'அவுட் காஸ்ட்' என்று தந்தை பெரியார்  சொல்வார். சூத்திரர்கள் தான் நான்காம் ஜாதி மக்களாக இழிவு தரும் பொருளில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதனால்தான் தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் மனு தர்ம சாஸ்திரத்தை பகிரங்கமாக எரித்தனர்.

இப்பொழுது சனாதன பார்ப்பன சக்திகள் தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும்பற்றி பிரித்தாளும் தந்திரத்தில் இறங்கி உள்ளனர்.

இந்தியா முழுவதும் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள் - அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுகிறார்கள். இதைக் கண்டு எல்லாம் ஏமாறக் கூடியவர்கள் அல்ல நாங்கள்.

தந்தை பெரியார் வேறு - அம்பேத்கர் வேறு அல்ல - மனுநீதி என்னும் சமூகநீதிக்கு எதிரான தத்துவத்தை எங்களுக்கு போதித்த சித்தாந்த தலைவர்கள்!

முருகன் தமிழ்க் கடவுள் என்கிறார்கள் - முருகன் தமிழக் கடவுள் என்றால் அவன் அண்ணன் விநாயகன் என்ன இந்தி கடவுளா? யாரை ஏமாற்றுகிறார்கள் - முருகன் தமிழ்க் கடவுள் என்றெல்லாம்  காட்டி அந்த வலைக்குள் நம்மை மாட்ட நினைக்கிறார்கள். தை பூசத்திற்கு விடுமுறை அறிவிக்கிறது அரசு. இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏமாந்து விடக் கூடாது. இந்தக் காரணத்தால்தான் திராவிடர் கழகம் இவை எதையும் ஏற்காத கடவுள் மறுப்பு இயக்கமாக இருக்கிறது.

எனக்கு மிக உயர்ந்த விருதைக் கொடுத்துப் பெருமைப் படுத்திய பெரியார் பன்னாட்டு அமைப் புக்கும் ஆசிரியர் அவர்களுக்கும் திராவிடர் கழகத் துக்கும் இந்தப் பாராட்டு விழா நடத்தி "சமூகநீதிப் போர்வாள்" என்ற பட்டத்தையும் கொடுத்த மகளிர் விடுதலை இயக்கத்திற்கும் அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் நன்றி! நன்றி!! என்று எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் கூறினார்.

பல்கலைக் கழகப் பட்டங்களைவிடப் பெரிது ஆசிரியர் பெயரிலான விருது!

- நாஞ்சில் சம்பத் புகழாரம்

கால் சட்டைப் பரு வத்தில் நான் தயாரான கழகம் திராவிடர் கழகம், நான் பேசிய  முதல் கூட்டம் கூட ஆசிரியர் அவர்கள் பேசிய பொதுக் கூட்டம்தான்.

நமது எழுச்சித் தமிழருக்கு பல்கலைக் கழகங்களில் எல்லாம் பெற முடியாத கருத்துகளை நாம் பெறக் கூடிய ஆசிரியர் வீரமணி அவர்கள் பெயரால் உள்ள இந்த விருதுக்கு இணையானது வேறு ஒன்றும் இல்லை. பல்கலைக் கழகம் தரும் பட்டத்தினும் உயர்ந்தது பத்மபூஷன் பட்டத்தினும் பெரிது.

மனுதர்மத்தைப் பற்றி திருமா பேசி விட்டாராம். இல்லாததைப் பேசி விட்டாரா? ஆரோக்கியமான விவாதத்துக்குத் தயாரா? இந்த நிகழ்ச்சியின் வழியாக சவால் விடுகிறேன். மனுதர்மத்தைப் பற்றி என்னோடு விவாதிக்கத் தயாரா! என்றார் நாஞ்சில் சம்பத்.

விடுதலைச் சிறுத்தைகளே 'விடுதலை'யைப் படியுங்கள்

- கலி. பூங்குன்றன்

எழுச்சித் தமிழர் மனுதர்மம் பற்றி தெரி வித்த கருத்துகள் - அதனை எதிர்த்துப் பார்ப்பன ஊடகங்களின் பாய்ச்சல் என்ற நிலை யில் 'விடுதலை' தொடர்ந்து அவற்றை எல்லாம் எதிர் கொண் டது. எழுத்துக்கு எழுத்து வரிக்கு வரி கட்டுரைக்குக் கட்டுரை பதிலடி கொடுத்து ஆதாரத்துடன் 'விடுதலை' எழுதியது.

விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு வேண்டுகோள்! நீங்கள் ஒவ்வொருவரும் 'விடுதலை'யைப் படிக்க வேண்டும் - 'விடுதலை' வாசகர் ஆக வேண்டும்.

தமிழர் தலைவர் ஆசிரியர் திமுக தலைவர் தளபதி மு.. ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆகியோர்மீது நாள்தோறும் பார்ப்பன ஏடுகளும், தினமலர், தினமணி வகையறாக்களும் வாரந்தோறும் வாரந்தோறும் 'துக்ளக்'கும், ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதமும்' அவதூறு பரப்புகின்றன - நாலு கால் பாய்ச்சலில் பாய்கின்றன.

அவற்றிற்கெல்லாம் சூட்டோடு சூட்டாக பதிலடி தருவது 'விடுதலை' ஏடுதான். எனவே 'விடுதலை'யை விடுதலைச் சிறுத்தைகள் நாள்தோறும் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

எழுச்சித் தமிழர் பெரியார் திடலில் வளர்ந்த பிள்ளை - குழந்தைக்கு நோய் வந்தால் எப்படி ஒரு தாய் பத்தியம் இருக்கிறாரோ அதேபோல பெரியார் திடல் பிள்ளைக்கு ஒரு சோதனை என்றால், தாயான திராவிடர் கழகம்  பரிவோடு, உரிமையோடு பாதுகாப்புத் தர முன் வருகிறது. அந்த இடத்தில்தான் தமிழர் தலைவர் இருக்கிறார் என்று கூறினார் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்.

சமூகநீதிக்கான வீரமணி விருது

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் 'சமூகநீதிக்கான வீரமணி விருது' வழங்கும் விழா சென்னை பெரியார் திடலில்  தந்தை பெரியார் நினைவு நாளான கடந்த டிசம்பர் 24ஆம் தேதி முற்பகல் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு வழங்கப்பட்டது.

அதற்கான பாராட்டு விழா சென்னை செனாய் நகர் அம்மா அரங்கத்தில் நேற்று (6.1.2021) மாலை நடை பெற்றது. விடுதலைச் சிறுத்தைகளின் மகளிர் விடுதலை இயக்கத்தின் தலைவர் இரா. நற்சேனை தலைமை வகித் தார். மாவட்ட செயலர் இரா. அருள்செல்வி, வரவேற்புரை யாற்றிட கருத்தரங்கம் தொடர்ந்தது. மனுநூலில் பிரா மணர்கள் - எனும் தலைப்பில் பேராசிரியர் அருணன், 'மனுநூலில் பெண்கள்' எனும் பொருளில் பேராசிரியர் செம்மலர் 'மனுநூலில் வர்ணாஸ்ரமம் எனும் தலைப்பில் யூ டூ புருட்டஸ் மைனர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். புரட்சிக்கனல் இளைய கம்பன், கவிஞர்  உஞ்சை அரசன் ஆகியோர் கவிதை வழங்கினர்.

பாராட்டு அரங்கில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் உரையாற்றியதற்குப் பின் ஏற்புரையை எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் வழங்கினார்.

விழாவில் மகளிர் அணி சார்பில் எழுச்சித் தமிழருக்கு "சமூகநீதிப் போர்வாள்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் பொறுப்பாளர்கள் மலர் மாலைகளையும், சால்வைகளையும் குவித்தனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image