தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

வழக்குரைஞர் இராம. வைரமுத்து

பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் தமிழக முதல்வராக தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தபோது தமிழக சட்டப்பேரவையில் 23.01.2008 அன்று ஆளுநர் உரையில் அறிவிப்பு வெளியிட்டும், 01.02.2008அன்று சட்டமாக நிறைவேற்றியும் தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பதை உறுதி செய்தார். அதை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அம்மையார் அதை மாற்றி ஆணை பிறப்பித்தார். எது உண்மையான புத்தாண்டு என்பதை விவாதத்திற்கு உரியதாக மாற்றி இருக்கும் ஆரியத்தின் சூழ்ச்சியை நம் மக்களில் சிலர் அறிந்திராமல் இருப்பது வருந்தத் தக்கது. ஆரியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எல்லா நிலைகளிலும் திராவிடர் தமிழ் பண்பாட்டை மாற்றி ஆரிய பண்பாட்டை கலந்து வருகிறார்கள். அந்த வகையில் பண்டைய தமிழர்களின் புத்தாண்டு "தை" என்ற உண்மையை மாற்றி கடவுள் கதை சொல்லி சித்திரைக்கு ஆரியம் தான் மாற்றியது. ஆயினும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற குரல் காலம் தோறும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

  சூழ்ச்சியால் வந்த சுழற்சி ஆண்டுகள்

  பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்று கூட தமிழில் இல்லை. தன்மானம் உள்ள தமிழன் அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஏற்றுக் கொள்ள மாட்டான். இந்த அறுபது ஆண்டுகளை கடவுளர் களோடு தொடர்புபடுத்தி ஆபாசம் வழியும் கதைகளை உருவாக்கி விட்டார்கள். நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளின் பெயர்களேபிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’. இந்த ஆண்டுகள் மீண்டும் மீண்டும் சுழற்சியில் வரும் என்பதால் நாம் அந்த ஆண்டுகளை வைத்து வயது, வரலாற்று நிகழ்வு கள் போன்ற எதையும் கணக்கிட்டு சொல்ல முடியாது.

  தமிழர்களுக்கான தொடர் ஆண்டு

  பெரும் புலவரும், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாண சுந்த ரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியம் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தப் பிள்ளை, நாவலர் .மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி..பெ. விசுவ நாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் அய்நூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921ஆம் ஆண்டு சென்னை, பச்சை யப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தமிழர்களுக் கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி ஆலோசித்தனர். அந்தக் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது;

 2. அதனையே தமிழாண்டு எனக் கொண் டாடுவது;

3. வழக்கத்தில் திருவள்ளுவர் காலம் கி.மு. 31அய்க் கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும். திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை, இறுதி மாதம் மார்கழி.

 அதன் பிறகு 1939ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில், தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.., மறைமலை அடிகளார், பி.டி. இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்பட பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் தீர்மானித்தது.

  இலக்கிய சான்று

  தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ (நற்றிணை), ‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ (குறுந் தொகை), ‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ (புறநானூறு), ‘தைஇத் திங்கள் தண்கயம் போல’ (அய்ங்குறு நூறு), ‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ ‘(கலித் தொகை) போன்ற சங்க இலக்கிய வரிகளும், 'தைப் பிறந்தால் வழி பிறக்கும்’, ‘தை மழை நெய் மழை’, 'பழையன கழிதலும் புதியன புகுதலும்" போன்ற நமது பழமொழிகளும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மையை நமக்கு உணர்த்துகின்றன.

  வானியல் சான்று

  புவி தனது அச்சில் சுற்றும் அதே வேளை சூரியனையும் ஒரு நீள் வட்ட வடிவமான ஓடு பாதையில் சுற்றி வருகிறது. புவி தனது அச்சில் தன்னைத் தானே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் சுழல்கிறது. ஒரு முறை புவி சூரியனை சுற்றி வர 365.26 நாட்களை எடுக்கிறது. சனவரி 3 இல் பூமி சூரியனுக்கு அண்மையில் (147.3 மில்லியன் கிமீ) காணப்படுகிறது. ஜூலை 4 இல் பூமி சூரியனுக்கு தொலைவில் (152.1 மில்லியன் கி.மீ.) காணப்படுகிறது. பூமி சூரியனை ஒரு நீள் வட்டத்தில்சுற்றி வருகிறது. இது நமது கண்களுக்கு சூரியன் புவியைச் சுற்றுவது போன்ற மாயையை ஏற் படுத்துகிறது. தை முதல் நாள் சூரியன் தனது தென்திசை பயணத்தை முடித்துக் கொண்டு தனுசு  இராசியில் இருந்து விலகி, வடதிசைப் பயணத்தை மகர இராசியில் இருந்து தொடங்குகிறது சூரியன். அதுவே வானியல் அடிப்படையிலான புத்தாண்டாக இருக்க முடியும்.

 நித்திரையில் இருக்கும் தமிழா!

 சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு!

அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே

 அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள்

 தரணியாண்ட தமிழருக்கு

 தைம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் வரிகளுக்குக்கேற்ப தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை தலைவர் கலைஞர் நடைமுறைப் படுத்தினார். விரைவில் தளபதி மு..ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மலரும் கழக ஆட்சியில் தமிழனின் இந்த பண்பாட்டு உரிமை மீட்டெடுக்கப்படும்.

 தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சி இருந்தபோது தமிழர்களின் புத்தாண்டு தைப் பொங்கல் நாளான தை முதல் நாளே என அறிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது. மலேசியாவிலும் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டாடி வருகிறார்கள். வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் தான் தமிழ் புத்தாண்டு என்பதை உணர்ந்து சூழ்ச்சியை வென்று இனம் மொழி காத்திட  சூளுரைப்போம்.

Comments