திராவிடத்தின் ‘அறமும்', ஆரியத்தின் ‘‘தருமமும்'' ஒன்றா? அல்ல; வேறு, வேறு!

கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

 

ஆரியம், திராவிடம் என்பது இரு வேறு பண்பாடுகள்; இரு வேறு நாகரிகங்கள் என்ப தற்குப் பல துறைகளிலிருந்து நிறுவிக் காட்ட இயலும்.

இரு வேறு மொழிகள் சார்ந்தவை பண் பாடும், நாகரிகமும் - அந்த மொழிகளில் ஒன்று தமிழ் (திராவிடம்) தென்மொழி.

மற்றொன்று சமஸ்கிருதம் என்ற வடமொழி.

தமிழ் திராவிட மொழி -

சமஸ்கிருதம் ஆரிய மொழியாகும்!

பண்பாட்டை அறிவதற்கும், நாகரிகங்களைப் புரிந்து கொள்வதற்கும் பெரிதும் அம்மொழிச் சொற்கள் அடையாளங்களாக அமைகின்றன.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் மிகவும் எளிமையாய் தமிழர்களுக்குப் பாடம் எடுத்தார்.

‘‘தமிழனே இது கேளாய்-உன்பால்

சாற்ற நினைத்தேன் பல நாளாய்!

கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு

காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு!

நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு

நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு!

தமிழனே இது கேளாய்

தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு;

தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு!

கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு

காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு

தமிழனே இது கேளாய்

வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்

வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்

நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்

நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்.

தமிழனே இது கேளாய்!''

ஆரியத்தின்தருமம்' கூறும் நூல் மனுநீதி

திராவிடத்தின் ‘‘அறம்''பற்றி கூறும் சமயச் சார்பற்ற நூல் திருக்குறள்.

தருமம்' என்பதற்கு என்ன விளக்கம் என்பதை திராவிடர் இயக்கம்பற்றியMinorities in Tamil Nadu' என்ற டாக்டர் சரஸ்வதி எழுதிய ஆராய்ச்சி நூலில் விளக்குகிறார்.

‘‘To the Hindus, Dharma primarily denotes the fulfilling of caste duties. The inexorable law of Karma in which the orthodox place implicit faith, assigns to each man his work and status in accordance with his deeds in previous birth. They hope that by a strict discharge of caste duties one could raise oneself in social scale in a subsequent birth. Dr. Dube elucidates the point, "the concepts of sin, merit and pollution are fundamental to the concept of Dharma. Dharma which means that which is right covers all the phases of human life cycle and fixes several details of intra and inter-group life. Acceptance of caste traditions and the general rules of piety can be said to constitute the Dharma of the people and it is through Dharma that one can look forward to Shaping one's destiny."

இதன் தமிழாக்கம்:

‘‘இந்துக்களுக்கு, ஜாதித் தொழிலைச் செய்வதே தர்மமாகும். கட்டாயத் தன்மையுள்ள கர்ம விதியின்படி மதம் சார்ந்த வெளிப்படையான நம்பிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய முந்தைய பிறவியின் நடத்தைகளின்படி இப்பிறவியில் சமூக அந்தஸ்தும், தொழிலும் விதிக்கப்படுகிறது. ஜாதி அடிப்படையிலான தொழிலைச் சரியாகச் செய்து முடிப்பதால் அடுத்த பிறவியில் ஒருவரது சமூக அந்தஸ்து உறுதி செய்யப்படுகிறது. ஆய்வறிஞர் டாக்டர் துபே கூற்றுப்படி, பாவம், புண்ணியம், தீட்டு ஆகியவைகளே தர்மத்திற்கு அடிப்படையாக உள்ளன. ‘எது சரி?’ என்ற சொல்லக்கூடிய தர்மமானது மனித வாழ்க்கைச் சுழற்சியின் அனைத்து நிலைகளிலும் ஊடுருவி, சமூகப் பிரிவுகளுக்கிடையிலும், சமூகப் பிரிவு களுள் ளேயும் பல விஷயங்களை தீர்மானிக் கிறது. ஜாதி வழக்கத்தை ஏற்றுக்கொள்வதும், பக்தி சார்ந்த பொதுப் பழக்கங்களுமே ‘‘தர்மம்'' என்பதை உருவாக்குகிறது. இப்படிப்பட்ட தர்மத்தின் வழியாகத்தான், ஒருவரு டைய தலை விதி என்பது தீர்மானிக்கப்படுகிறது.''

அறம்' என்றால் தருமம் அல்ல. மேற்சொன்ன ஜாதி தர்மம், குலதர்மம், வர்ணதர்மம் என்ற பொருளில் வருவதாகும்.

மாறாக,

மனத்துக்கண் மாசிலன்' - தூய்மையான மனம் - அதனை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கம்!

ஆரியதர்மத்தில்' - ‘பிராயச்சித்தம்' என்றகழுவாய்'க்கு வாய்ப்பு உண்டு.

ஆனால், திராவிடத்தில் 'அறம்' என்பதில் அதற்கு இடமே தரவில்லை.

தவறு இழைத்தால் தக்க தண்டனையை அனுப வித்தே தீரவேண்டும்.

‘‘எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.'' (குறள் 655)

இதன்படி செய்தமைக்கு தண்டனை உண்டே தவிர,

கழுவாய்', ‘பிராயசித்தம்' கிடையாது.

இது திராவிடர் ஒழுக்கத்தின் விழுமிய பண்பாடு!

எதையும் செய்யலாம் பாவம், மன்னிப்பு உண்டி யலில் பணம் போட்டால் - காணிக்கை அளித்தால் அது அறம் ஆகாது.

அந்தணர் என்ற சொல்பற்றி நாவலர் இரா.நெடுஞ்செழியன் தனது திருக்குறள் ஆய்வுரை விளக்கத்தில் மிகவும் தெளிவாய் விளக்குகிறார்.

‘‘அந்தணர் (குறள் 30, 543) அந்தணன் (குறள் 8) ‘‘அந்தணர்'' என்ற சொல் இக்காலத்தில் பார்ப்பனரைக் குறிக்கும் ஒரு சொல்லாகப் பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது.

இடைக்காலங்களில் அந்தணர் என்ற சொல்லின் சிறப்பையும், மேன்மையையும் கருதி பார்ப்பனர் சூழ்ச்சி செய்து, அதனைத் தம்மைக் குறிக்கும் ஒரு சொல்லாக ஆக்கிக் கொண்டனர்.

வள்ளுவர், அழகிய அருள்தன்மை உடையோரைக் குறிக்கும் ஒரு சொல்லாகத்தான் அந்தணர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.''

அந்தணர் என்போர் அறவோர் என்பது வள்ளுவம் - அதாவதுதிராவிடம்!'

திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில்கூட (அதுவும் ஆயிரம் ஆண்டு கடந்த நிலையில்) பரி மேலழகர் என்ற வைணவப் பார்ப்பனர், உரைப் பாயிரத்தில்,

‘‘அறமாவது மனு முதலிய நூல்களில்

விதித்தன செய்தலும் விலக்கிய தொழிதலும்''

என்ற திரிபுவாதத்தைப் புகுத்தினார் என்றால்,

திருக்குறள்பற்றிய பல்வேறு திரிபுவாதங்கள், காவிச் சாயம் இப்போது பூசுவது ஒரு பண்பாட்டுப் போரின் தொடர்ச்சியேயாகும்!

ஆரியர் ஒழுக்கத்தில்யாகம்' என்பது முக்கியம்.

ஆனால், திராவிடர் ஒழுக்கத் தத்துவத்தில், திராவிட அரசர்கள் யாகங்களைத் தடை செய்ததால் தான் தேவர் (ஆரியர்), அசுரர் (திராவிடர்) போர்களே கூட ஏற்படக் காரணம் என்பது புராண இதிகாசங்களில் காணப்படுகிறது.

யாகங்களையும், அதன் சடங்கு சம்பிரதாயங் களையும் கண்டித்து வள்ளுவர் திருக்குறளில்,

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259)

யாகம், நெய், எரித்தல் என்பவற்றை எப்படி கண்டிக்கிறார் திருவள்ளுவர்! காரணம் யாகம் நடத் துவோர் அணிந்த வேடத்தையே கூட வன்மையாகக் கண்டிக்கிறார்.

திராவிடத்தில்தவம்' என்பது ஒழுக்கத்தின் உறுதி, உறுதி. உறுதியின் வெளிப்பாடு.

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு (குறள் 261)

தனக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும், இரண்டு உடையார்தவம்' செய்வோர் ஆவார்!

எந்த சடங்கும் இதில் அடங்கவில்லை; மாறாத பண்பு நலன்களால் மனிதர்கள் உயரவேண்டும் - இது திராவிடத்தின் மாண்பு - தத்துவம்!

இப்படி இந்த ஆய்வை ஏராளமான தரவுகள்மூலம் தொடரலாம்!

திராவிடர் திருநாளாம் பொங்கல் பெருவிழா சிந்தனையாக இது ஒரு சிறு பகுதி மட்டுமே - தேன்துளி போல்!

‘‘மனுவின் மொழி'' - அறமானதொரு நாள் -

அதை மாற்றியமைக்கும் நாளே தமிழர் திருநாள்

என்றார் புரட்சிக்கவிஞர்!

ஆரியர்கள் தங்களைமேன்மையர்' என்று பொருள் கூறி உயர்த்திக் கொண்டார்கள்.

அவர்கள் எப்படி நுழைந்தார்கள் என்பதை அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் தம் நூலில் (‘இந்து மதம் எங்கே போகிறது?')

‘‘ஆரியர்கள் சிந்து நதி இமயலை என பள்ளத்தாக்குகளைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மலைச் சாலையைவிட அந்த மலைச்சாலை எவ்வளவு கடினமாக இருக்கும்?

நதிக்குக் கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் - இவற்றையெல்லாம் தாண்ட ஆரி யப் பெண்களுக்குத் தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப் பட்டது.

வரும் பெண்கள் வரலாம் - வராதவர்கள் இங்கேயே இருக்கலாம். ஆப்கானிஸ்தானத்தை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, கூட வந்த பெண்கள் கம்மி.''

‘‘ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.'' (பக்கம் 19).

அந்த மனு தர்ம சாஸ்திரத்தில் திராவிடர்களை - ஆரியரல்லாதவர்களை, பழங்குடியினரைக் காட்டிலும் தங்களை மேன்மையர் என்று உயர்த்திப் பொருள் கூறியதோடு,  மற்றவர்களை தஸ்யூக்கள், தாசர்கள், நீஷர்கள் (நீச்சர்கள்), சண்டாளர்கள் என்றும், சூத்திரர், அசுரர்கள், அரக்கர், ராட்சசர்கள் என்றும் இழிவுபடுத்தினர். கருப்பின மக்களை இழிவுபடுத்தும் வண்ணமும் இச்சொற்கள் அமைந்திருக்கின்றன

அதுபோல, தங்களின் வடமொழியைதேவ பாஷை' என்றும், கடவுள் உருவாக்கிய மொழி என்றும், தமிழ் முதலிய மற்றவைநீஷ பாஷை' என்றும் இழி சொற்களால் உருவாக்கிய ஒருவகை பண்பாட்டுப் படையெடுப்பின் பல்வேறு கட்டங்கள் என்பதால்தான், தந்தை பெரியார் நோய் நாடி நோய் முதல் நாடுவதுபோல, நோயின் மூல நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சுயமரியாதை விஞ்ஞானத்தைப் புகுத்தி வெற்றி கண்டார்.

அது பல களங்களில் நடைபெற்றது. அதில் ஒன்று, பொங்கல் என்னும் திராவிடர் திருநாள் என்ற விழாக் கொண்டாட்டமான மீட்டுருவாக்கம்.

மேற்காட்டிய பல கருத்துகளை தந்தை பெரியார் என்ற நம் அறிவு ஆசான், எப்படி தமிழ்நாட்டு மேடைகளில் சமதர்மம், குலதர்மம் என்று பிரித்துக் காட்டி மக்களுக்கு விளக்கி, தமிழ் நிலத்தை பகுத்தறிவு வாதங்களால் உழுது பண்படுத்தி, சுயமரியாதையை விதைத்ததின் விளைவுதான் உழவர் அறுவடைத் திருவிழாவாகவும், பண்பாட்டு மீட்டுருவாக்க விழாவாகவும், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகவும்  அறிவுறுத்தினார்.

திராவிட இனத்தின் எழுச்சி - தத்துவப் போர்களால் தளராமல் நடைபெறுகின்றது - சமூக, அரசியல் பொருளியல் களங்களில்!

பொங்கலோ பொங்கல்!

அனைவருக்கும் அனைத்தும் தந்து உழவை, உழவர் உரிமை காக்க இத்திருநாளில் சூளுரைப்போம்!

Comments