ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·மோடி அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. சட்டத்தை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசும், ரத்து செய்யவில்லை என்றால் போராட்டம் தொடரும் என விவசாய சங்க கூட்டமைப்பும் தெரிவித்துள்ளனர். பேச்சு வார்த்தை மீண்டும் வருகிற சனவரி 8ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

·     ஆந்திர மாநிலத்தில் பேசிய தெலுங்கானா மாநில பாஜக மாநிலத்தலைவர் பண்டி சஞ்சய்,  நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மக்கள் பைபிள் கட்சியின் தலைவர் அல்லது பகவத் கீதை கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள் என பேசி சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

·     இந்தியா மிகவும் தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் உள்ளது. அனைத்து துறைகளிலும் பின்னடவை இந்தியா சந்தித்து வருவதை உலக நாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் மோடி அரசு அதனை மறைத்து செய்திகளை வெளியிடுகிறது என மூத்த பத்திரிக்கையாளர் ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.

·     அமெரிக்காவில் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முதன் முதலாக தொழிற்சங்கத்தை துவக்கியுள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மேற்கு வங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மத்திய அரசில் இயங்கி வந்த திட்டக்குழுவைக் கலைத்து, 2014இல் நிதி ஆயோக் அமைத்த மோடி அரசை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்துள்ளார். இதன் மூலம் மாநில அரசுகள் பெரும்பாதிப்பை அடைந்துள்ளன என தெரிவித்துள்ளார்.

·     வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகள் மீது அரியானா காவல்துறை கண்ணீர்புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீர் பாய்ச்சி விரட்டுதல் என்ற நடவடிக்கைகள் எடுத்ததன் மூலம், அரியானா மாநில முதல்வர் கட்டார், ஜெனரல் டையர் என்றும், அங்கே ஜாலியான்வாலா பாக் போன்ற அக்கிரமம் நடக்கிறது என்றும் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளர் தலைவர் ராகவ் சத்தா குற்றம் சாட்டியுள்ளார்.

·     ஒடிசா மாநிலத்தில் ஓபிசி பிரிவினர்க்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்காமல், புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு திட்டம் என்பது மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் உத்தி என ஓபிசி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தி டெலிகிராப்:

·     'கார்ப்பரேட்' அல்லது 'ஒப்பந்த' விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று ரிலையன்ஸ் கூறுகிறது

·     வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள், இச்சட்டம் முகேஷ் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் நிலையில், விவசாய உற்பத்தியில் தங்கள் நிறுவனம் ஈடுபடும் எண்ணம் இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

·     விவசாயிகளின் எதிர்ப்பு பாஜகவின் தேசபக்திக்கான சோதனை என காங்கிரஸ் கூறியுள்ளது.

·     ஆளும் கட்சி தனது "முதலாளித்துவ சார்பு" நிலைப்பாட்டில் சிக்கித் தவிக்க விரும்பினால், பெரும் அரசியல் விளைவு ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்திய அரசை எச்சரித்துள்ளனர்.

·     அய்.அய்.டி.யில் ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற கல்வி அமைச்சகம் அமைத்த குழுவின் பரிந்துரைக்கு மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாடு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

·             டில்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தை மேம்படுத்துவ தற்காக தமிழ் அகாடமியை அம்மாநில அரசு அமைத்திருக்கிறது. அதன் தலைவராக டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, துணை தலைவராக டில்லி மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் என். ராஜா ஆகியோரை நியமித்து டில்லி அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் கலை, கலாசாரத்தை டில்லியில் வாழும் அனைவரும் அறிந்து கொள்வதற்காக தமிழ் அகாடமியை உருவாக்கி உள்ளோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ்! என டில்லி முதல்வர் கேஜ்ரிவால் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

- குடந்தை கருணா

5.1.2021

Comments