நாதுராம் கோட்சே கல்வி மய்யமாம்!

நாதுராம் கோட்சேயின் பெயரில் மத்தியப் பிரதேசம் குவாலியரில் இந்து மகா சபையின் சார்பில் கல்வி மய்யம் தொடங்கப்பட்டுள்ளது.

எந்த நாதுராம் கோட்சே? தேசத் தந்தை என்று பொதுவாக அழைக்கப்படும் காந்தியாரை மூன்று குண்டுகளால் துளைத்துப் படுகொலை செய்த கொலைகாரன் கோட்சே பெயரில்! சங்பரிவார்களைச் சேர்ந்தவர்கள்  இத்தகைய படுகொலைகளில் ஈடுபடுவது என்பது ஒன்றும் புதிதல்ல. படுகொலை செய்யப்பட்ட பிறகும் காந்தியாரை அவமதிப்பதும், அவரைக் கொன்ற கோட்சேயைப் பெருமையுடன் நினைவு கூர்வதும் வாடிக்கையே! ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்ட பாலத்திற்கு நாதுராம் கோட்சே பெயரைச் சூட்ட முன்வரவில்லையா? கடும் எதிர்ப்புக்குப் பிறகு அது பின் வாங்கப்படவில்லையா?

காந்தியார் பிறந்த நாளில் இதே இந்து மகா சபைத் தலைவர் காந்தியார் உருவத்தைத் துப்பாக்கியால் சுட்டாரே!

ஒவ்வொரு ஆண்டும் மகாராட்டிரத்தில் கோட்சேயின் அஸ்தியை (சாம்பலை) வைத்து சபதம் எடுத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

என்ன சபதம்? அகண்ட பாரதத்தை (பாகிஸ்தானில் உள்ள பல பகுதிகளையும் இணைத்து) உருவாக்கி பாகிஸ்தானில் ஓடும் சிந்து நதியில் கோட்சேயின் அஸ்தியைக் கரைப்பது என்பதுதான் அந்த 'வீர' சபதம்!

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது சங்பரிவார் - ஒரு நாடகத்தை முக்கிய நகரங்களில் அரங்கேற்றினர். அந்த நாடகத்தின் பெயர் "மே நாதுராம்கோட்சே போல்தே" (நான்தான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்) அந்த நாடகத்தை எழுதியவர் பிரவின்டால்மி என்பவராவார்.

காந்தியார் என்ற அரக்கனை மகாவிஷ்ணு கோட்சே அதிகாரம் எடுத்துக் கொன்றான் என்பதே அந்நாடகத்தின் முக்கிய அம்சமாகும்.

காந்தியார் ஏதோ 1948 ஜனவரி 30இல் சுட்டுக் கொல்லப் பட்டார் என்று கருதக் கூடாது. 10 தடவை காந்தியாரைக் கொல்லுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன என்பது கசப்பான உண்மையாகும்.

காந்தியார் படுகொலை உள்பட பல்வேறு காரணங்களால் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் பல்வேறு மதக் கலவரங்களுக்கு மூலக் காரணமாக இருந்து வருவது இந்த ஆர்.எஸ்.எஸ்.!

தானே ஒரு குற்றத்தை செய்து விட்டு மற்றவர்கள் மீது பழி போடுவதும் ஆர்.எஸ்.எஸ். கோவை மாவட்டத்தில் சதுமுகை என்ற ஊரில் உள்ள பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து மற்றவர்கள்மீது பழி போட்ட பித்தலாட்டம் கண்டு பிடிக்கப்பட்டு இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்ட துண்டே! தென்காசி குண்டு வெடிப்பும் அதே கதைதான்!

வன்முறையின் ஊற்றுக்கண்ணான ஆர்.எஸ்.எஸ். பெயரில் ஒரு கல்வி மய்யம். அதன் பெயர் கோட்சே கியான் ஷாலாலாம்.

“1947இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னணியில் இருந்தது காங்கிரஸ் என்பதை மறந்து விடக் கூடாது.எனவே வரும் தலைமுறையினருக்கு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை குறித்து முழுமையான வரலாற்றை அறியும்படிச் செய்ய வேண்டும். இதற்கான நூலகமாகவும் இது இயங்கும். அப்படி யானால் பாகிஸ்தான் பிரிவினைக்கு பச்சைக் கொடி காட்டிய ராஜாஜிபற்றியும் அந்த மய்யம் எந்த வகையில் கற்பிக்குமாம்?

இங்கு குருகோவிந்த் சிங், சத்ரபதி சிவாஜி மகராஜ், இந்து மகாசபைத் துணைத் தலைவர் ஜெயவீர் பரத்வாஜ் போன்ற தலைவர்கள் பற்றி கற்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் மத நஞ்சுதான் புகட்டப்படுகிறது. பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் எல்லாம் சங்பரிவார்களா என்று தட்டிப் பார்த்து நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

நவம்பர் 14 - நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்றால் இவர்கள் அதனை ஏற்க மாட்டார்கள். கோகுலாஷ்டமியைத்தான் (இந்துக் கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம்) கொண்டாடுவார்கள்.

மேனாள் அமெரிக்கக் குடியரசு தலைவர் ஒபாமா பிரதமர் நரேந்திர மோடியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, 'இடித்துசொன்னதுண்டு. 'இந்தியாவில் சகிப்புத் தன்மை - மதச் சார்பின்மை இருந்த வரை அது வளர்ச்சி அடைத்து வந்திருக்கிறது' என்று சொல்லவில்லையா?

காந்தியார் படுகொலைக்கு மூளையாக இருந்த வி.டி. சாவர்க்காரின் படம் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப் பட்டது. இப்பொழுது அவருக்குப் 'பாரத ரத்னா' பட்டம் வழக்குவதற்கான கருத்துருவும் கிளம்பியுள்ளது.

நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி  அரசில் இனி என்ன தான் நடக்காது! வாக்குச் சீட்டு மூலம் பதிலடி கொடுக்க வேண்டியது முக்கிய கடமையாகும்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image