இரு கொடுமைகள் போதிப்பது என்ன?

தலைநகர் டில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் 2018ஆம் ஆண்டு ஒட்டு மொத்தமாக மரணமடைந்து கிடந்த விவகாரத்தில், மந்திரம் மற்றும் பில்லி சூனியம் குறித்து எழுதப்பட்ட நாட்குறிப்பு (டைரி) நிகழ்விடத்திலிருந்து கைப்பற்றப்பட்டது

அதில் அந்த குடும்பத்துக்குத் தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.  அது குறித்து விசாரணையில் ஈடுபட்ட காவலர்கள் தரப்பு கூறும்போது, "தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படும் லலித், பவனேஷ் குடும்பத்தினர் வித்தியாசமான வழிபாட்டு முறையைப் பின்பற்றி வந்துள்ளனர். அதற்காகவே வீட்டுக்குள் சிறிய கோயிலைக் கட்டிவைத்து வழிபட்டுள்ளனர்.

இவர்களின் வழிபாட்டு முறை மிகவும் புதிராகவும், மூடநம்பிக்கை மிகுந்ததாகவும் இருக்கிறது.  ஆனால் இவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் படித்தவர்களே! 

வீட்டில் கைப்பற்றப்பட்ட நாட் குறிப்பில் இருந்து பல்வேறு தகவல்கள் தெளிவாகின.  இவர்கள் தற்கொலை செய்துகொள்ள 2017ஆம் ஆண்டு முதலே தயாராகி வந்துள்ளனர். சொர்க்கத்தை அடையும் வழி என்ற ரீதியிலான குறிப்புகள் நாட் குறிப்பில் உள்ளது. இது தற்கொலைக்கு காரணமாகும்.

உடல்களில் கண்கள், காதுகள், வாய், கை, கால்கள் அனைத்தும் கட்டப்பட்டு இருந்தன. தற்கொலை செய்யும் முறையும்கூட அந்த நாட் குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. எங்களின் முதல் கட்ட விசாரணையில், நாராயண் தேவியை முதலில் அவரின் இரு மகன்களும் கொலை செய்துவிட்டு, மனைவிகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனர். அதன்பின் குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு, இறுதியாக தாங்களும் தூக்குமாட்டி இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.

தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படும் தேதிக்கு முன்னாள் இரவு, உணவு முன்பதிவு செய்துள்ளனர். இரவு 11 மணியளவில் உணவு விநியோகம் ஆகும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  அதன் பின்னர் அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்லவில்லை, யாரும் அந்த வீட்டுக்கு வரவும் இல்லை.

வீட்டில் வளர்த்து வந்த நாயை மொட்டைமாடியில் கட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.

அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நாட் குறிப்பில் சொர்க்கத்தை அடையும் வழி என்று பல   மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டிருந்தது. அதில் வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைதான் தற்கொலை செய்ய வேண்டும் என்ற குறிப்பும் உள்ளது.

தற்கொலை செய்யும் போது, விளக்குகள் அனைத்தும் குறைந்த வெளிச்சத்தில் இருக்க வேண்டும். நள்ளிரவு 12 மணியில் இருந்து ஒரு மணிக்குள்தான் தற்கொலை செய்ய வேண்டும். தற்கொலை செய்யும் போது, அனைவரின் கண்களும் கட்டப்பட வேண்டும், பூஜ்ஜியத்தைத் தவிரவேறு எதையும் பார்க்கக் கூடாது.

தற்கொலைக்குப் புடவை அல்லது கயிறை பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் பாட்டியை தரையில் கீழே படுக்கவைத்து தற்கொலை செய்யவைக்கலாம் என்றும் கூட எழுதப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்புகள் அனைத்தும் 2018 ஜூன் 26ஆம் தேதி எழுதப்பட்டு, ஜூன் 30-ஆம் தேதி இரவு அனைவரும் கடவுளைச் சந்திக்கச் செல்கிறோம். தற்கொலை செய்யும் போது அனைவரும் நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். கைகள், கால்கள், வாய், கண்கள் கட்டப்பட்டு இருந்தால்தான் சொர்க்கத்தை அடைய முடியும்" என அந்த நாட்குறிப்பில்  (டைரியில்) குறிப்பிடப்பட்டுள்ளது.

"அதுமட்டுமல்லாமல் 11 பேரும் தாங்கள் இறந்தபின் தங்களுடைய கண்களைத் தானமாக வழங்கிவிடுங்கள். 22 பேருக்கு பார்வைகிடைக்க நாங்கள் உதவியாக இருப்போம். இது எங்களுடைய விருப்பம் எனவும் தெரிவித்துள்ளனர்" என்று காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்டதில்,  வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(77) தரையில்படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ்(50), லலித் பாட்டியா(45), மகள் பிரதிபா(57). பவனேஷ் மனைவி சவிதா(48), சவிதாவின் மகள் மீனு(23), நிதி(25), துருவ்(15). லலித் பாட்டியாவின் மனைவி டினா(42). இவரின் 15வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33). இவருக்கு திருமணம் நடந்து ஓர் ஆண்டு மட்டுமே ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது - இவர் அய்.டி.யில் பணிபுரிபவர்.

 இது 2018இல் என்றால் 2021இல் ஆந்திராவில் மெத்த படித்த இருவர் தங்கள் இரு பெண்களை சாமியாரின் ஆலோசனையின் பெயரில் படுகொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் முக்கிய அறிக்கையினை வெளியிட்டார்;  படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லாத இந்த நிலைக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ஊடகங்களும், வழிகாட்ட வேண்டியவர்களும் இந்தப் பிரச்சினைக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுக்காதது ஏனோ!

நம் இயக்கத்தின் கொள்கை இந்தியா முழுவதும் பரவ வேண்டிய அவசியம் இருக்கிறது.

Comments