என்று தீரும் இந்த அவலம்

மூடநம்பிக்கையால் மகள்களை நரபலி கொடுத்த பட்டதாரிப் பெற்றோர்

சித்தூர், ஜன.26 ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த புருஷோத்தமன் (நாயுடு) இவர் தீவிர பக்திகொண்டவர். முனைவர் பட்டம் பெற்று அங் குள்ள அரசுக் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார். அவரது மனைவி பத்மஜா. இவரும் முதுகலை பட்டம் பெற்றவர்,  இவர் தனியார் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு.

 இந்த குடும்பத்தினர் அனைவருமே கடுமையான மூடநம்பிக்கை கொண் டவர்கள் ஆவர்.

 இவரது இரண்டு மகள்களில் ஒருவர்  அலெக்யா மற்றும் சாய் திவ்யா. இதில் அலெக்யா (27) தன் முதுகலை நிர்வாக மேலாண்மைப் படிப்பை போபாலில் ஒரு பிரபல கல்லூரியில் படித்து முடித்து விட்டார். 22 வயதான சாய் திவ்யா இளங்கலை நிர்வாக மேலாண் மையைப் படித்தவர். அதோடு ஆர் ரஹ்மானின் மும்பை இசைப் பள்ளியிலும் படித்திருக்கிறார்.

 சமீபத்தில் ஒரு யாகம் ஒன்றை மூன்று முக்கிய சாமியார்களைக் கொண்டுவந்து நடத்தி இருக்கி றார்கள். அப்போது அந்தச்சாமி யார்கள் யாகத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், அதனால் இரண்டு மகள்களின் மீது தீய சக்திகள் புகுந்து விட்டதாகவும் கூறிவிட்டுச் சென் றுள்ளனர்.

 இதனை அடுத்து  அந்தப் பெற்றோர் ஞாயிறு அன்று (ஜன.24)ஒரு மகளை பூஜைக்கு பயன்படுத்திய சூலாயுதத்தால் குத்தி கொலை செய்து தலையை சிதைத்துள்ளார்கள். மற்றொரு மகளை உடற்பயிற்சி செய்யும் இரும்பு பொருள் கொண்டு தலையை பிளந்துள்ளார்கள்.

பின்னர் தனது கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரிடம் "எனது வீட்டில் புகுந்திருந்த கெட்ட ஆவிகளை விரட்டிவிட்டோம், நாளை காலைவரை யாரும் வீட்டிற்கு வரவேண்டாம். அப்படி வந்தால் எனது மகள்களின் நல்ல ஆவி வீட்டைவிட்டு வெளியே போய்விடும், ஆகையால் காலைவரை கதவைத் திறக்கமாட்டோம். மாலை இருவரும் உயிரோடு எழுந்து வருவார்கள்" என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த ஆசிரியர் வீட்டிற்கு வந்து பார்த்து பின் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.

 காவல்துறையினர் முதலில் கதவைத் திறக்கச்சொல்லி கோரிக்கை விடுத்தனர். ஆனால் இருவருமே கதவைத் திறக்காமல் "வீட்டில் நல்ல ஆவிகள் உலவுகின்றன; கதவைத் திறந்தால் அவை வெளியே சென்று விடும். ஆகையால் நாளை மாலை வாருங்கள்" என்று கூறி தொடர்ந்து பூஜைகள் செய்துகொண்டு இருந் தனர்.

பிறகு காவல்துறையினர் உயரதி காரிகளின் அனுமதியோடு வீட்டுக் கதவை நவீன கருவிகள் கொண்டு உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கே இரண்டு மகள்களையும் ஆடை களின்றி படுக்கவைத்து மிகவும் கொடுரமாக கொலை செய்திருப் பதைக் கண்டனர். ஆனால் எந்த ஒரு அச்சமும் இன்றி காவல்துறையினர் வீட்டுக்குள் புகுந்திருப்பதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மந்திரம் சொல்லி பூஜைகள் செய்துகொண்டு இருந்தனர்.

 இது குறித்து கூறிய காவல்துறையினர் அவர்களின் மனநிலை சற்று வித்தியாசமாக இருந்ததாக  தெரிவித்துள்ளனர்.

மேலும் வீட்டிலேயே விசாரணை நடைபெற்றது. அந்த பெற்றோர் "எங்களின் மீது அதிக அழுத்தம் தர வேண்டாம்,  உலக நன்மைக்காக இரண்டு மகள்களைப் பலிகொடுத் துள்ளோம், ஆனால் காவல்துறை சிறிதளவும் அக்கறை இன்றி கதவை உடைத்து வந்ததால் எங்களது மகள்களின் நல்ல ஆவிகள் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டன, எங்களது யாகம் பூஜைகள் அனைத்தும் வீணாகிவிட்டன,இந்த உலகத்திற்கு தீங்கு ஏற்பட்டால் அதற்கு காவல்துறையினர்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

மேலும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் பூக்களை வீசுவதும், காவலர்களை நோக்கி நீங்கள் எல்லாம் கடவுள் பக்தி இல்லாவர்கள், சிவனின் மீதும், காளியின் மீதும் நம்பிக்கை இல்லாத நீங்கள் எல்லாம் இந்துக்களாக வாழ தகுதி இல்லாதவர்கள் என்று கூறியுள் ளனர்.  அவர்களின் இந்தச்செயலைக் கண்ட  காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச சில  உறவினர்களை வீட்டிற்குள் அழைத்துள்ளனர். ஆனால் எல்லோரும் பயத்தில் வீட்டிற்குள் வர மறுத்துவிட்டனர். இதனை அடுத்து  மனநல மருத்துவரின் உதவியை நாடப் போவதாக மதனப் பள்ளி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் "பெற் றோர் இருவருமே மூடநம்பிக்கை களைக் கொண்டவர்களாக இருந் தனர். பெண்களின் உடலை மேலும் ஒரு நாளுக்கு அதே இடத்தில் வைக்குமாறு அவர்கள் கூறினர். அவர்கள் நன்கு படித்தவர்களாக உள்ளனர்" என மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ரவி மனோகர் சாரி தெரிவித்துள்ளார்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, உடலை அப்புறப்படுத்தி, உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றிருக் கிறார்கள். இந்த கொலை தொடர் பாக வழக்கையும் பதிவு செய்திருக் கிறார்கள் காவல் துறையினர்.

காவல்துறையினர் சமீபத்தில் அவர்கள் வீட்டிற்கு வந்து யாகம் செய்துவிட்டுச்சென்ற பார்ப்பனர்கள் குறித்து விசாரணை செய்து வரு கின்றனர்.

Comments