பொங்கட்டும் புதுமைப் பொங்கல்!

- மதுரை சுப.முருகானந்தம்

"பிறப்பொக்கும்' என்றிருந்த நமது வாழ்வில்

பிழைப்புக்காய் வந்தவர்கள் சதியால் வந்த

சிறப்பில்லா ஜாதிமத பிணக்கால் நாளும்

சீரழிந்த கதைமாற்றிப் பெரியார் தந்த

அறவழியில் வீரமணி அய்யா செல்ல

அவர்வழியில் களம்காண வாஎன் தோழா!

புறங்காட்டி மனுதர்மம் ஓடும் நாளை!

பொன்னான திராவிடந்தான் சூடும் மாலை!!

 

மண்ணினிலே எவையார்க்கும் சொந்த மில்லை

மனிதரிலே எவர்யார்க்கும் உயர்ந்தோ ரில்லை

உண்பதையும்  உழைப்பதையும் சமமாய்ச் செய்தே

உடமையெல்லாம் பொதுவாக்கி இன்பம் காண்போம்!

கண்களிலே கனலேந்திக் களத்தில் நிற்போம்!

கயமைதனை வேரறுத்தே வெற்றி காண்போம்!!

 

பொங்கட்டும் வீடெல்லாம் புதுமைப் பொங்கல்!

பூக்கட்டும் புத்துணர்வு நாட்டில் எங்கும்!!

தங்கட்டும் எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம்!

தன்மானம் தழைக்கட்டும் தமிழர் நெஞ்சில்!!

சிங்கத்தை வலைபோட்டு போர்த்தி விட்டுச்

சிற்றெலிகள் காட்டுவதோ ஆட்ட மிங்கே!!

மங்கித்தான் போயிடுமோ அறிவு மானம்!

வாவாவா நமைவெல்வார் யார்தா னிங்கே!!

Comments