இலங்கைவாழ் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பிரச்சினை; அந்நாட்டு அரசே முடிவு செய்யுமாம்!

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் கூற்று சரியா

குற்றவாளிகளே நீதிபதிகள் என்பது ஏற்கத்தக்கதா?

மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினைக்கான தீர்வை இலங்கை அரசே தீர்மானிக்கவேண்டும் என்பது குற்றவாளியே நீதிபதியாக இருக்கலாம் என்று கூறுவது போன்றதாகும் - இது ஏமாற்றம் அளிக்கிறது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

2014 இல் நாடாளுமன்றத் தேர்தலில் பா...வின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டவர் நரேந்திர மோடி. அவர் பிரதமரானால் நாடே வளர்ச் சியின் உச்சத்திற்கே செல்லும், ‘குஜராத் வளர்ச்சி மாடல்' இந்தியாவையே வளைத்துவிடும் என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தில், சரமாரியான வாக்குறுதி களை அள்ளிவிட்டார்கள்! ‘‘ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை; ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் தானே வந்து விழும்; காங்கிரஸ் 60 ஆண்டுகளில் சாதிக்காதவற்றை 60 மாதங்களில் செய்து வரலாறு படைப்பேன்; விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு மடங்கு பெருக்கச் செய்வேன்'' என்றெல்லாம் கூறி பிரச்சாரப் புயலைக் கிளப்பினார்கள்.

புதிதாக தமிழ்நாட்டில் பா...வுடன் கூட்டணி (என்.டி..) சேர்ந்தவர்களின் பக்கவாத்தியங்களும் பலமாக வாசித்தன!

ஈழப் பிரச்சினை: மோடியை நம்பினார்களே, என்ன ஆனது?

தீர்க்கப்படாத ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் தீர்ந்துவிடும் என்றுமந்திரத்தால் மாங்காய் விழும்' என்று நம்பியவர்களைப்போல, அவரது கூட்டணியை ஆதரித்தனர். பிறகுதான் அவை வெறும் வாய்ச் சொல் வீரம், கானல் நீர் வேட்டை என்பது இரண்டாவது தடவை (தமிழ்நாடு ஏமாறாவிட்டாலும்கூட) பதவிக்கு வந்ததும் நாளும் நன்கு புரிந்து வருகிறது!

ஈழத் தமிழர்கள் இலங்கையில் பிறந்தவர்கள் பெரும்பகுதியினர் - (தோட்டத் தொழிலாளர்களும், வணிக பிரமுகர்களும்தான் குடியேறிய தமிழர்கள்) அந்த மண்ணில் பிறந்த தொப்புள்கொடி உறவுகள், அந்த மண்ணைப் பக்குவப்படுத்தி தமது வியர்வை யையும், ரத்தத்தையும், உழைப்பையும் தந்து ஓடாய்ப் போன எம் சகோதர, சகோதரிகள், ஏதோ காங்கிரஸ் ஆட்சியால் அழிக்கப்பட்ட அவர்களது வாழ்வா தாரமும், அரசியல் உரிமையையும் காப்பாற்றிட இதோ நாங்கள்புதிய அவதாரம்' எடுத்துள்ளோம் என்று முழங்கியவரின் முகமூடி தானே கழன்று ஒப்பனை கலைந்து உண்மை நாளும் வெளியாகி வருகிறது!

இலங்கையில் மீண்டும் சிங்கள ராஜபக்சே குடும்பமே முழு அதிகாரத்தினையும் கைப்பற்றி, தமிழர்களின் வாழ்வுரிமையைத் தரைமட்டமாக்கிடத் திட்டமிட்டு இறங்கிவிட்டது!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுவது சரியா? குற்றவாளியே நீதிபதியா?

இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு அதிபர், வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (இவர் தமிழ், முத்திரை குத்தப்பட்ட மன்னார்குடி பார்ப்பனர்),

‘‘இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர் களுக்கு நீதி வழங்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் அந்நாட்டு அரசே முடிவெடுக்க வேண்டும். இலங்கை அரச மைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை நடை முறைப்படுத்துவது குறித்து அந்த நாட்டு அரசுதான் முடிவு எடுக்கவேண்டும்'' என்று கூறியிருப்பது உலகத் தமிழர்களுக்கும், மனித உரிமையில் நம் பிக்கை உள்ளவர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி யைத் தரும் செய்தி அல்லவா!

இதைச் சொல்லவா நம் நாட்டிலிருந்து, நமது வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை சென்று சொல்லிவிட்டுத் திரும்பியிருக்கிறார். ‘‘எங்க வீட்டுக் காரரும் கச்சேரிக்குப் போய் வந்தார்'' என்ற கிராமத்து சொலவடை போல் உள்ளது இது.

அதைவிட பெருங்கொடுமை இந்த வாக்கு மூலத்தில், ‘‘குற்றவாளியே நீதிபதியாக அமர்ந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்'' என்பதுபோல்தானே இது! இதைவிட மகா கேலிக்கூத்து வேறு உண்டா?

பா... மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தால், ஈழத் தமிழர்களுக்குப் புதிய விடியலே கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்தவர்களே, இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்!

ஹிந்துத்துவாவை நம்பும் உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் போன்றோர் சிந்திப்பார்களா?

உருட்டைக்கு நீளம்; புளிப்பில் அதற்கு அப்பன்' என்பதைப் புரிந்துகொள்வீர்!

விடுதலைப்புலி இயக்கத்தவர்களின் தோழரான குறிப்பாக நம்மால் என்றும் மதிக்கப்படும் உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன், மறவன்புலவு .சச்சிதா னந்தம் போன்றவர்களும், ‘ஹிந்துத்துவா'வை நம்பினால் தமக்கு புதிய வழி திறக்கும்; ஹிந்து காவி மயம் ஆனால் - ஆர்.எஸ்.எஸ். தலைமை இடத்திற்கு யாத்திரை சென்றால் ஒரு மீட்சி - புதிய கதவு என்று எண்ணி - தங்களது அடிப்படையிலிருந்தே மாறி ‘‘ஹிந்து'' அவதார ‘‘ஹிந்து சகோதரர்கள்'' ஆன நிலையில், தமிழர் அடையாள இழப்புதான் மிஞ்சியதே தவிர, வேறில்லை என்பதை வேதனையுடனும், உரிமையுடனும் நாளைக்கும் ஈழத் தமிழர் வாழ் வுரிமை காக்கத் தயங்காது - முன்னே நிற்பவர்கள் என்ற நிலைப்பாட்டில் இந்தக் கேள்வியை எழுப்பு கிறோம்.

ஓநாய், ஒருபோதும்

சைவம் ஆகாது!

ஓநாய் ஒருபோதும் சைவமாகாது!'

ஆதிக்கவாதிகளால் விடியலும், வெள்ளியும் முளைக்காது என்பதை இனியாவது உணர்ந்தால் நல்லது!

காலந்தாழ்ந்தேனும் (Better late than Never  என்பதுபோல்) சில உண்மைகளை உணர்ந்து, இழைத்த தவறுகளைத் திருத்திக் கொண்டு, கொண்ட லட்சியப் பாதையை சீரமைக்க முயலவேண்டும்.

உண்மை நண்பர்கள் யார்? உண்மை எதிரிகள் யார்? என்பதை ஈழத் தமிழர்களே, ஈழத் தமிழர் களுக்காக போராடியவர்களே இனியாவது புரிந்துகொள்ளுங்கள்.

‘‘எட்டி பழுத்து யாருக்கென்ன லாபம்?'' சிந்தியுங்கள்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

8.1.2021

Comments