ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி. ‘தகுதி - திறமை எனும் மோசடிச் சொல் ஒழிக்கப்படவில்லை என்றால் வைத்திய உலகம் ஆரியர்கள் கைக்கு போய்ச் சேர்ந்துவிடும்‘ என்று பொதுமக்களுக்கு பெரியார் ‘குடிஅரசு’ வாயிலாக (1946) எச்சரிக்கை விடுத்தது இன்றும் அப்படியே பொருந்துவதாக உள்ளதே?

- எஸ். பத்ரா, வந்தவாசி.

பதில்: தந்தை பெரியார் கணக்கில், இந்த இரண்டு சொற்களும் உயர்ஜாதி பார்ப்பனர்களால் நம்மை உயரவிடாமல் வடிகட்டி ஒழிப்பதற்காகவே கண்டு பிடிக்கப்பட்ட இரண்டு தலையறுக்கும் வாள்கள்! முதலில் ஒழிக்கப்பட வேண்டும்.

மேலை நாடுகளில் இதன் பொருள் வேறு. நம் நாட்டில் இது தனி அர்த்தம் கொண்ட சூழ்ச்சிவலை - காமராசரும் இதைத்தான் சொன்னார். இரண்டும் கல்விக்கண்ணைத் தோண்டும் கூர் ஈட்டிகள்! மருத்துவத்தில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் - மறவாதீர்!

கேள்வி. ‘குமரன்’ ஏட்டினை  ஆதரிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திருநெல்வேலி சுயமரியாதை மாநாட்டில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘குமரன்’ ஏடு யாரால் எப்போது நடத்தப்பட்டது?

- மல்லிகா, மாங்காடு.

பதில்:  காரைக்குடியிலிருந்து  திருவாளர் சொ.முருகப்பா என்ற நகரத்தார் (நாட்டுக்கோட்டைச் செட்டியார்) சுயமரியாதைக்காரராய் இருந்து நடத்திய அக்காலத்து ஏடு. அவர் சிறந்த பேச்சாளர். எழுத்தாளர். மரகதவள்ளி என்ற பெண்ணை புரோகித மறுப்பு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். பிறகு சிந்தனையளவில் மாறிப்போனவர்! அக்காலத்தில் ‘குடிஅரசு’ போல ‘குமரன்’ ஏடு ஜனரஞ்சக ஏடு!

கேள்வி.. வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குக் கூட வயிற்றுக்குச் சோறிடும் விவசாயிகள் போராடித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்படுவது ஜனநாயக நாட்டிற்கு உகந்ததா?

- சீதாலட்சுமி, திண்டிவனம்.

பதில்:  உகந்ததில்லை என்பது உங்களுக்கும், எனக்கும், நமக்கும் புரிகிறது!

ஆனால் நம் பிரதமர் மோடிக்குப் புரியவில்லையே! என்ன செய்வது?

வாட்டும் குளிர், கொட்டும் மழை, பறி போகும் உயிர்கள் - இவை எல்லாம் அவர் மனதின் குரலை எழுப்பவில்லையே - மக்கள் மேலும் திரண்டு - ஜனநாயகப் பாடம் போதிப்பார்கள்!

கேள்வி. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் மத்திய - மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியப் படுத்துவது நியாயம்தானா?

- எஸ். பூபாலன், திண்டிவனம்.

பதில்:  விவசாயிகளை எந்த அளவுக்கு மத்திய - மாநில அரசுகள் மதிக்கின்றன - உண்மையாக என்பதற்கு அளவுகோல் இது!

கேள்வி. உருமாறிய கரோனா பரவும் சூழலில், திரையரங்குகளுக்கு 100% மக்கள் செல்லலாம் என, தமிழக அரசு அறிவித்திருப்பது எதனை காட்டுகிறது?

- வெங்கட.இராசா, ம.பொடையூர்.

பதில்:  தவறான முடிவு - உயர்நீதிமன்றம் 50 சதவிகித மக்கள் செல்லலாம் என ஆணை பிறப்பித்து விட்டதே! நிம்மதி அடைவோம்! ‘ஓட்டப்பா, ஓட்டப்பா’ எல்லாம் ஓட்டப்பா!

கேள்வி. கேப்பிடோல் மீது நடத்தப்பட்ட டிரம்ப் ஆதரவாளர்களின் அடாவடி...?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்:  1990 டிசம்பர் 6 அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த அடாவடி - அதுவும் - இராணுவம் முன்பே - பிரதமர் நரசிம்மராவ் காலத்தில்.

2021 ஜனவரி 6 கேப்பிடோல் - யு.எஸ்.நாடாளுமன்ற செனட் நுழைவு ஆக்கிரமிப்பு - 4 பேர் சாவு - துப்பாக்கிச் சூடு! - டொனால்டு டிரம்ப் அதிபர். (ஜனநாயக அவலம்?)

இரண்டும் வலது சாரிகளின் இரக்கமற்ற செயல்கள்!

கேள்வி. உ.பி.யில் கோவிலுக்குச் சென்ற 50 வயதுப் பெண் ஒருவர், பூசாரி உள்ளிட்ட மூவரால் பாலியல் வன்கொமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தேசியப் பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் சந்திரமுஹி தேவி, “அவர் மாலை நேரத்தில் வெளியில் போகாமல் இருந்திருந்தாலோ, உடன் குழந்தையை அழைத்துச் சென்றிருந்தாலோ இந்த நிகழ்வைத் தவிர்த்து இருக்கலாம்” என்கிறாரே? 

- க.க.தென்றல், ஆவடி

பதில்:  பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். காவிகள் பெண்ணியத்தை - பெண்ணினத்தை - தாய்க்குலத்தை மதிக்கும் லட்சணத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! புரியுதுங்களா?

கேள்வி. டில்லியை நோக்கி டிராக்டர் பேரணி என்று மிரள வைக்கிறார்களே விவசாயிகள்?

- பா.ஜீவன், வெள்ளக்கோவில்

பதில்:  மிரள வைக்கவில்லை. தங்கள் வலியின் கொடுமையை உணர்த்த ஜனநாயக வழியை எல்லாம் தேடித்தேடி, ஓடி ஓடிக் கண்டு பிடிக்கிறார்கள்! புரிந்து கொள்ளுவோம்!

கேள்வி. ‘மினி கிளினிக்'குகளில் வேலைக்கு சேர்பவர்களிடம் பணி நிரந்தரம் கோரமாட்டேன் என்ற உறுதிமொழி பெறப்படுகிறதே- இது சரியான செய்கையா?

-அசீனா,  பொன்னேரி

பதில்:  இது அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளுக்கும், மனித நாகரிகத்திற்கும், மனித நேயத்திற்கும், பணிக் கலாச்சாரத்திற்கும் முற்றிலும் விரோதமான ஒன்றாகும்!


Comments