பிள்ளைக் கனியமுதே, பெற்றதை திருப்பித் தர வேண்டாமா?

நம் நாட்டு கூட்டுக் குடும்ப முறையில் நன்மை களும் உண்டு. மாறான எதிர் விளைவுகளும் உண்டு. மேலை நாடுகளில் வயது வந்தவுடன் தனித் தனியாக அவரவர் சொந்தக் காலில் நிற்கவும், தானே தன்னம்பிக்கையுடன் உழைத்து, வேலை தேடி முன்னேற வேண்டிய கடமை, அவர்தம் வாழ்க்கையின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும்.

நம் நாட்டில் பழைய கூட்டு குடும்ப முறை பெரிதும் குறைந்தோ, மறைந்தோ வருகிறது. காரணம் பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம் வெளியூர்களில் பணி, வெளிநாடுகளில் வேலை இத்தியாதி! இத்தியாதி!

என்றாலும் வயது முதிர்ந்த பெற்றோர்க ளுடன் ஒன்றாக வாழுவோர், எப்படியெல்லாம் அவர்களது இறுதிக் காலத்தில் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும், குடும்பத்தின் உடன் இருப்பவர்களும் அன்பும், பாசமும் காட்டி, ஆதரவுடன் முதுமையில் தங்களை ஆளாக்கிய வயது முதிர்ந்த, அடிக்கடி மன அழுத்தத்திற்கும், பற்பல நேரங்களில் தேவையற்ற கவலைகளுக்கும் ஆளாகும் பெற்றோரிடம் அலட்சியம் காட்டாமல், மதிப்பற்று நடக்காமல், அன்புடன் அரவணைத்து அவர்களை மகிழ்ச்சியுடன் இறுதிக் காலத்தில் வாழ வைப்பதைவிட, மிகப்பெரிய உதவிகளில் முதன்மையானது எது?

திருவள்ளுவரின் இரண்டு குறட்பாக்களை பலரும் அடிக்கடி எழுத்தில், பேச்சில் கையாளு கிறார்கள்.

அவர்கள் அந்த இரண்டு குறட்பாக்களில் உள்ள சொல்லாட்சியை நுணுகி ஆராய்ந்து கற்க வேண்டும்; அதன்பின்னர் அதன்படி நிற்க (செயலில்) வேண்டும்  .

தலைப்புமக்கட்பேறு'

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல். 

(குறள் 67)

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.

(குறள் 70)

தந்தையின் கடமை மகனுக்கு ஆற்றும் நன்றி! என்ற சொல்லைப் போட்ட வள்ளுவர், மகனைப் பற்றிக் குறிப்பிடுகையில் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்கிறார். இரண்டையும் சற்று ஆழமாகச் சிந்தித்தால்,

தந்தையின் மகனுக்கு நன்றியை ஆற்றுதல் ஆற்றும் உதவி (நன்றி - தவிர்க்கக் கூடாது. உதவுதல் - செய்யலாம், செய்யாமலும் போக வாய்ப்புண்டு)

நன்றி காட்டுதல் கட்டாயம் (No Choice) என்பதை ஆழ்ந்து எண்ணுக! டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்கள் அனுப்பிய ஒரு முக்கிய அறிவு ரைக் கொத்தை இளம் பிள்ளைகளுக்கு வாலிப விருந்தாகப் படைப்பதில் மகிழ்ச்சிஅடைகிறோம்.

"ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டியது.

பொதுவாக தந்தையின் இறுதிக்காலம் மவுனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்திற்குரியது.

இதனால், தந்தைமார்களும் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்றும் முற் றாக ஓய்வு பெற்று மூலைக்குச் செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து ஓடான பின்னர் அவரை, கவுரவமாக வாழ வழி செய்ய வேண்டும்.

(தந்தை என்பதுடன் தாயையும் சேர்த்தே எண்ணுக) எல்லாவற்றிலும் தந்தை இல்லாது தாய் மட்டும் உள்ள பல குடும்பங்கள் உண்டல்லவா?)

மூலையில் இருத்தி, மவுனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தங்களது தந்தைமாரை நடத்தி வரும் கொடுமை பல குடும்பங்களில் கண்கூடு!

வயதான தந்தை, தன் குடும்பத்தாரிடம் மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார்; ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந் தவர் அவர்! கொடுக்க மட்டுமே தெரிந்து வைத் திருந்தவர் அவர்.

பிள்ளைகளுக்குப் பெருமையும், வசதியும், வாய்ப்புகளும், வர வேண்டும் என்பதற்காக தன் கடமையை ஒரு மெழுகுவத்தி போல் செய்தவர் கள் பெற்றோர். குடும்பத்தினர்தான் குறிப்பறிந்து அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைத்து மகிழச் செய்ய வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.

மூலையில் அமர்ந்தால் அவருக்கு சிறிய சிறிய வேலைகளைக் கொடுங்கள்.

பேரன், பேத்திகளை அவர்களிடமிருந்து (பாட்டி, தாத்தா) பிரிக்காதீர்கள்.

தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள் அவர்கள்! அவர்கள்தான் அவரது முதுமைக் கால முதல் நண்பர்கள் - வீட்டில் எளிதில் கிடைத்து மகிழ்விக்கும் மாமருந்துகள்!

குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்துச் செய்த   பெற்றோர்களுக்கு இப்போது உங்க ளுக்கு கிடைத்துள்ள நல்ல, அரிய வாய்ப்பு பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு. (மரங்கள் கூட நட்டு வளர்த்தவர்களுக்கு பயன் தரும்போது, மனிதர்களாகிய நீங்கள் அந்த மரங்களை பார்த் தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?)

அவர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு அதைச் செய்யவில்லையே; இதைச் செய்திருக் கலாமே என்று எண்ணி புலம்புவதைவிட, அவர்கள் உயிருடன் வாழுங்காலத்தில், அது அமைதியாக, மகிழ்வாக அவர்களுக்குச் செல்வ தற்கு துணையாய் இருங்கள். (தொல்லையில் மாறிவிடாதீர்கள்).

வயதானவர்களுக்கு தனிமைதான் மிகவும் கொடுமையானது. ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி. இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக் காட்சி நிகழ்ச்சி பார்க்க விடுங்கள். (உணவுகூட வாரத்தில் ஞாயிறு போன்ற கிழமைகளில் கூட்டாக குடும்பத்தவர் உண்ணுதலும், அதில் கலகலப்பாக பேசி மகிழ்தலும் அனைவருக்கும் நல்லது).

தனது துணைவியை இழந்த தந்தையின் தனிமை மிகக்கொடுமை, (அதுபோலவே கண வனை இழந்த மனைவி (தாயின்) நிலைமையும் கூடத்தான்) கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெண் ஒருவர் கணவனை இழந்தால், அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வார். பெண் சூழலுக்கு ஏற்றாற்போல் வளைந்து கொடுத்து சரிசெய்து கொள்ளும் பக்குவம் உடையவர்தான்!

ஆனால், குடும்பத் தலைவர் என்றும், அதி காரம் செலுத்தியவர், சம்பாதித்துக் கொடுத்தவர். பிறர் மதிப்புக்கு உரியவராக வாழ்ந்தவர், என்றெல்லாம் ஆகிவிட்ட நிலையில் அந்தத் தந்தை தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக்கூடிய மற்றும் எது வேண்டுமென்றாலும் பார்த்துக் கொள்ளக் கூடிய மனைவியை - துணைவியை இழந்த பின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு உரிய மரியாதை செய்யுங்கள்.

அவர் கவுரவிக்கப்பட வேண்டியவர். ஒவ் வொரு மகனும், மகளும் இதை உணர்ந்து, தங்கள் வாழ்க்கையை ஒருவழிப் பாதையாக ஆக்கி விடாமல், இருவழிப் பாதையாக, அவர் களால் பட்ட வாழ்நாளில்  திருப்பித்தர முடியாத கடனை ஓரளவுக்கேனும் கொடுத்து, உங்கள் இறுதிக்காலத்தில் மன நிறைவுடன் கூடிய வாழ்க்கையை வழங்கி பிறருக்கு வழிகாட்டி உயருங்கள்! புரிகிறதா?

Comments