தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள், விளம்பரங்கள்மூலம் மூடநம்பிக்கைகளை பரப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும்!

சட்ட விரோதமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதா?

மத்திய, மாநில அரசுகள் தனிப்பிரிவு உருவாக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்

அவுரங்கபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை,ஜன.10 மராட்டியமாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்துக்கு விரோதமாக  தொலைக்காட்சி விளம்பரங்களில் மூடநம்பிக்கைகளை பரப்புவதைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் 30 நாள்களுக்குள் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என்று அவுரங்காபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜேந்திர கன்பாத்ராவ் அம்போர் என்பவர் தொலைக்காட்சிகளில் மூடநம்பிக்கைகளை பரப்புவதற்கு எதிராக குற்றவழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று

குறிப்பிட்டு அவுரங்காபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 நீதிபதிகள் தானாஜி வி.நலவாடே, முகுந்த் ஜி.சேவ்லிகர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் அவ்வழக்கு கடந்த 5.1.2021 அன்று விசாரணைக்கு வந்தது.

மூத்த வழக்குரைஞர் வி.டி.சக்பால், ஹேமந்த் சர்வே ஆகியோர் மனுதாரர் சார்பில் வாதாடினார்கள்.

''அற்புதங்களை அளிக்கும் என்று கூறிஅனுமான் சாலிசா எந்திரம்என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில் சட்டவிரோதமாக விளம்பரம் ஒளிபரப்பாகி வருகிறது. எந்திரம் என்று கூறி தகடு விற்பனைமூலம் மக்கள் சுரண்டப்படுகிறார்கள். ஆகவே, எந்திர தகடு விற்பனைக்கான விளம்பரங்களுடன் தொலைக்காட்சிகளில்  ஒளிபரப்பு செய்வது மற்றும் எந்திர தகடு விற்பனையையும் தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள டெலிமார்ட் ஷாப்பிங் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் சச்சின் சர்தா தமது வாதுரையில், மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் ஆகியவை தங்களைக் கட்டுப்படுத்தாது என்று வாதிட்டார்.

நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு

நீதிபதி நலவாடே அளித்துள்ள 27 பக்க உத்தரவில் கூறுகையில், ''மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தின் முக்கிய நோக்கம் கல்வியின்மூலம் அனைவரையும் எட்ட வேண்டும் என்பதுதான். இந்த மண்ணில் பிறந்த சீர்திருத்தவாதிகள் மகாத்மா பூலே, டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்  இன்னும் பலர் மூடப்பழக்க வழக்கங்கள் ஒழிவதற்காக தொண்டாற்றி வந்தார்கள். சமுதாயத்தில் மக்களிடையே உள்ள மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வை உருவாக்கி பரப்பினார்கள். மாநிலத்தில் அனைவருக்கும் குறைந்தபட்சம் அடிப்படைக் கல்வி கிடைக்கவேண்டும் என்று பாடுபட்டார்கள். அதுமட்டுமல்லாமல், அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு, சீர்திருத்தம் (அரசமைப்பின்படி அடிப்படைக் கடமைகள்) இன்னமும் மக்களிடையே வளர்ச்சி பெறாமல் உள்ளது.

அனைத்து தரப்பினரும் சுரண்டப்படுகிறார்கள்

படித்தவர்கள், அதிகம் படித்தவர்கள்கூட இதுபோன்ற மந்திரம், தந்திரங்கள், மூடத்தனங்களால் கவரப்படுகின்றனர். சாமியார் என்று சொல்லிக்கொள்பவர்கள்மூலம் எந்திரம், கண்டா இன்னும் பல பெயர்களில் செய்யப்படுகின்ற விற்பனையின்மூலம் ஏழை, பணக்காரன், படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்து தரப்பினருமே சுரண்டப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நிலைகளில், மராட்டிய மாநிலம் போன்ற முன்னேறிய மாநிலம், சீர்திருத்தவாதிகளின் மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தின் தேவையும், அச்சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.

மகாராட்டிரா மாநில மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் 2013 இல் பிரிவு 3 இல் மந்திரவாதிகளின் செயல், பேய் ஓட்டுதல்  உள்ளிட்டவை மட்டுமல்லாமல், அதுபோன்ற மூடநம்பிக்கை கருத்துகளை பரப்புவது, அதுபோன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அந்த பிரிவின்கீழ் தொலைக்காட்சி விளம்பரங்களும் தடுக்கப்பட வேண்டியவையே.

மனித உயிர்ப்பலிகள் தடுப்பு மற்றும் ஒழிப்பு, மனிதத்தன்மையற்ற மூடத்தனங்கள், அகோரி பழக்கங்கள் உள்ளிட்டவற்றை தடுக்கும் மகாராட்டிரா மாநில மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் 2013 இன்கீழ் மூடநம்பிக்கைகளை பரப்பும்  தொலைக்காட்சி விளம்பரங்கள், ஒளிபரப்புகளுக்கு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தண்டிக்கவேண்டும்.

விஜிலன்ஸ் பிரிவு அமைக்கப்பட வேண்டும்

மூடநம்பிக்கைகளை பரப்பிவரும் நபர்கள், விளம்பரங்கள் மற்றும் அதற்கான பொருள்கள் விற்பனை ஆகியவைமீது நடவடிக்கைகளை 2013ஆம் ஆண்டு சட்டத்தின்படி எடுத்திட, கண்காணிப்பு (விஜிலன்ஸ்) அலுவலர்களை  மாநில அரசு  நியமித்து குற்ற வழக்குகளைப்பதிவு செய்து அதுகுறித்த அறிக்கையை அளிக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் உருவாக்கும் பிரிவுகள் மராட்டிய மாநிலத்தில் மூடநம்பிக்கைகளை பரப்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்களைக் கண்காணிக்க வேண்டும்.

மூடநம்பிக்கைகளை பரப்பும் இதுபோன்ற தொலைக்காட்சி ஒளிபரப்புகள், விளம்பரங்கள்  தொலைக்காட்சி ஒழுங்குமுறை சட்டம் 1995இன்படி உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தொலைக்காட்சிகளில் மூடநம்பிக்கைகளை பரப்புவதைத் தடுத்துநிறுத்த போதிய அதிகார அமைப்புகள் இல்லையென்றால், மத்திய அரசு உடனடியாக அதற்கான அதிகாரம்கொண்ட அமைப்பை உருவாக்கிட வேண்டும்.

பெயர்களை மாற்றி சுரண்டல்கள்

மூடநம்பிக்கைகளை பரப்பும் நிகழ்ச்சிகள், விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் நிறுவனங்கள், நிகழ்ச்சிகள், கடவுள், சாமியார், எந்திரங்கள்மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்தால், தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தி வரும் நிறுவனங்கள் தங்கள் பெயரை மாற்றி, அவர்களின் நிகழ்ச்சிகளின் பெயரை மாற்றி, கடவுளின் பெயரை மாற்றி, எந்திரங்களின் பெயர்களை மாற்றி, சாமியார்களின் பெயர்களை மாற்றிக்கொண்டு வேறு பெயர்களில் இதே வேலையைத் தொடரும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, இதுபோன்ற மூடநம்பிக்கைகளை பரப்பும் நிகழ்ச்சிகள், விளம்பரங்களை எந்த ஒரு கடவுளின் பெயராலும், எந்த ஒரு சாமியாரின் பெயராலும் தொடர முடியாதபடி ஒட்டுமொத்தமாக தடுக்க வேண்டியது அவசியமாகும்.

30 நாள்களில் அறிக்கை அளிக்க வேண்டும்

தொலைக்காட்சிகளில் மூடநம்பிக்கைகளை பரப்புவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்து 30 நாள்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.''

இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Comments