செய்தியும், சிந்தனையும்....!

மாறு வேடமோ?

ரஜினியின் ஆசீர்வாதத்தோடு, ரஜினி கட்சிக்காகத் தீட்டிய திட்டத்தோடு புதிய கட்சியைத் தொடங்குகிறேன்: - அர்ஜூனமூர்த்தி.

, கதை அப்படிப் போகிறதா? இதில் கூட மாறு வேடமா? பாச்சா பலிக்காது!.

மீண்டும் கொண்டு வரட்டும்!

பிப்ரவரி முதல் தேதி மத்திய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் - ரூ.80 ஆயிரம் கோடி வரை சலுகை.

இரயில் பயணத்தில் முதியவர்களுக்கு அளித்து வந்த சலுகையை மீண்டும் கொண்டு வரட்டும்; நான்கு  மாநில சட்டமன்ற தேர்தல் படுத்தும் பாடு புரிகிறது.

சட்டம் ஒழுங்கு?

சீர்காழியில் தாய், மகனை வெட்டிக் கொன்று 15 கிலோ தங்க நகைகள் கொள்ளை!

பொழுது விடிந்து பொழுது போனால் கொலை, கொள்ளை, திருட்டுதானா?

உதிக்கட்டும்

உதயசூரியன்!

தமிழக வாக்காளர்ப் பட்டியலில் புதிதாக வாக்களிக்கப் போகும் இளைஞர்கள் ஒரு கோடியே 23 லட்சத்து 95 ஆயிரத்து 696. இதில் 18 முதல் 19 வயதுவரை உள்ளவர்கள் 13 லட்சத்து 9 ஆயிரத்து 311 பேர்.

இளைஞர்களின் எதிர்காலம் ஒளிமயமாகிட சமூகநீதி, மதச்சார்பின்மை கொள்கை உடைய - உதயசூரியனைப் பிரகாசமாக உதிக்கச் செய்யவேண்டும்.

நீர்த்துப் போகச் செய்யும் கொலை வழக்கு

டில்லியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து திருவாரூரில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியை நடத்தியவர்கள்மீது கொலை முயற்சி பிரிவுகளில் வழக்காம்.

கொலை முயற்சி என்ற பிரிவின் தன்மையையே இதுபோன்ற வழக்குகள் கொலை செய்துவிடும்!

இன்னும்

எத்தனைக் காலமோ!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் இரு மாதங்களில் தொடங்கும்: - மத்திய அரசு தகவல்.

அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தத் தகவல் - இந்தத் தகவல் அறிவித்து எத்தனை  ஆண்டுகள் கழித்து மருத்துவமனை தொடங்கப்படுமோ?

அது என்ன

சிதம்பர இரகசியம்?

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 14 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.

சிதம்பரம் தீட்சதர் குடும்பங்களில் பெரும்பாலும் நடக்கும் குழந்தைத் திருமணங்களை மட்டும் அரசு கண்டு கொள்ளாதோ!

அமெரிக்காவைப் பார்!

அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள்.

இந்தியா அமெரிக்காவிடம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று - மதவெறியை மாய்த்து மனிதநேயத்தைக் காப்பதாகும்.

முன்னுரிமை வேலை வாய்ப்பே!

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் 25 கோடியே 50 லட்சம் பணிகள் இழப்பு: - பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு அறிவிப்பு.

அரசுகள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியதும், திட்டங்கள் தீட்ட வேண்டியதும் வேலை வாய்ப்புகளை மய்யப்படுத்தியே!

Comments