அர்னாப் கோஸ்வாமி உரையாடலில் இராணுவ இரகசியம் கசிவு மத்திய பாஜக அரசின் இரகசிய காப்பு சட்ட விதிமீறல்: ராகுல் காந்தி சாடல்

புதுடில்லி,ஜன.21- மோடியின் ஆதரவு தொலைக் காட்சியான 'ரிபப்ளிக்' தொலைக்காட்சியின் தலைமை ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி டிஆர்பி முறைகேடு வழக்கில் கைதானார்.

அர்னாப் கோஸ்வாமியின் 'வாட்ஸ் அப்' உரை யாடலில், பாலகோட் விமான தாக்குதல் உள்ளிட்ட தேசப் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்கள் மற்றும் மத்திய அரசின் நெருக்கமான தொடர்புகள் குறித்த விஷயங்கள் இருப்பது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து டில்லியில் காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் (19.1.2021) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாலகோட் போன்ற இராணுவ ரகசிய தாக்குதல் தொடர்பான தகவல்கள் பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி, விமானப்படை தளபதி போன்றவர்கள் மட்டுமே அறிந்திருக்க முடியும். அப்படிப்பட்ட தகவல் பத்திரி கையாளருக்கு முன்கூட்டியே கசிந்திருக்கிறது என் றால் இது ரகசிய காப்பு சட்ட விதிமீறல் இல்லையா? தேசத்தின் ரகசியம் கசிய விடப்பட்டுள்ளது. தேசியவாதிகள், தேசப்பற்றாளர்கள் என கூறிக் கொள்கிறார்கள், ஆனால், தேச விரோதமான செயல் நடந்திருக்கிறது. அர்னாப்புக்கு தகவல் கசிய விட்டது 'கிரிமினல்' குற்றம். அது நமது விமானப்படையையும், விமானிகளையும் ஆபத்தில் சிக்க வைக்கும் காரியம். இதைப் பற்றி விசாரித்தே தீர வேண்டும். ஆனால், அர்னாப்புக்கு யார் தகவல் தந்திருக்க முடியும்? பிரதமரா? உள்துறை அமைச்சரா? இப்படி இருக் கையில் எப்படி அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்? நிச்சயம் மாட்டார்கள் என்றார்.

வேளாண் சட்டங்கள் குறித்து பேசிய ராகுல், ‘‘வேளாண் சட்டங்கள் விவசாயத்தை அழிக்கவே கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு தெரியும். நான் என்ன செய்தேன் என்று. மோடி யையோ வேறு யாரையும் பார்த்து எனக்கு பய மில்லை. அவர்களால் என்னை தொட முடியாது. ஆனால், சுட முடியும். நான் தேசப்பற்றாளன், இந்த தேசம் என்னை காக்கும்’’ என்றார்.

Comments