முன் காலத்தில் ‘தை' பிறப்பே ஆண்டுப் பிறப்பு

* டாக்டர் மு. வரதராசனார்

இன்று 'பொங்கல்' என்று திருவிழாக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா?

ஒருவாறு தெரியும். அறுவடையெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாதமாகப் பாடுபட்டு உழைத்த பயன் கிடைத்துவிட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பி விட்டன. புது வெல்லம், புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக் காரணம் யார்? சூரியனே அல்லவா? சூரியன் இல்லாவிட்டால் மழை ஏது? நிலத்தில் குளிர்ச்சி ஏது? பசுமை ஏது? புல் ஏது? தழை ஏது? எல்லா ஒளியும், நிறமும், வளர்ச்சியும் சூரியனால் தானே உண்டாகின்றன?

சூரியன் பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். குடியானவர் வாழ்வுக்கே சூரியன்தான் முதல் காரணம். அவர்கள் சூரியனே கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடு கிறார்கள். சூரியனால் கிடைத்த புதிய பொருள்களைப் பொங்கிச் சமைத்து உண்பதற்கு முன், சூரியன் செய்த நன்றியை மறக்காமல் பொங்கல் விழாக் கொண்டாடுகிறார்கள். நகரங்களிலும் பொங்கல் விழாச் செய்கிறார்களே; அது ஏன்? உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால் தான் நகரங்களில் இருப்பவர்களும் வாழ முடியும். ஆகையால், அவர்களும் பொங்கல்விழா கொண்டாடுகிறார்கள்.

இன்னொரு காரணமும் உண்டு. முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை . தை முதல் நாள் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடி னார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை, புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள்; புதிய காய்களைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். தெருவில் புதுமண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்கிறார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்து கிறார்கள்.

பழைய பகையெல்லாம் மறந்து விடுகிறார்கள். மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரோடும் அன்பாகக் கலந்து பேசுகிறார்கள்; மகிழ்கிறார்கள். இப்படி நகரங்களில் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.

Comments