குடியரசு நாள் சிந்தனைக்கு பேச்சுரிமை - கருத்துரிமை - எழுத்துரிமை - சமூகநீதி - மதச்சார்பின்மை- போராடும் உரிமைகளை புதைகுழிக்கு அனுப்பலாமா?

நடப்பது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியா?

பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, சமூகநீதி, மதச்சார்பின்மை, போராடும் உரிமைகளைப் புதைகுழிக்கு அனுப்பலாமா? நடப்பது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியா? என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இன்று (26.1.2021) மத்திய, மாநில அரசுகள் குடியரசு நாளை கொண்டாடுகின்றன. 'குடியரசு', அதுவும் அரசமைப்புச் சட்டக் கூற்றுப்படி ‘ஜனநாயகக் குடியரசு' 'Democratic Republic' என்ற அதன் தன்மை நடைமுறையில் பிரதிபலிக்கிறதா என்ற சுய பரிசோதனைக் கேள்வி மிக முக்கியமாகிறது.

தலைநகர் டில்லியில் பிரதமர் தலைமையில் ஆடம்பர அணி வகுப்புகள் நடைபெறுகின்றன. சம்பிரதாய உரைகளாகத்தான் அந்த உரைகள் உள்ளனவே தவிர, நாட்டு மக்களில் மிகப்பெரும் பாலான மக்களாகிய விவசாயிகளின் வேதனையைப் போக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளனவா?

மக்களின் மனதின் குரலுக்கு 

மத்திய அரசு செவி சாய்த்திருந்தால்...

கடந்த 60 நாள்களுக்கு மேல் கடும் பனியிலும், குளிரிலும் எந்த வன்முறை நிகழ்வுகளுக்கும் இடம் தராது, தங்கள் நலனுக்கு விரோதமாக - தங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தைப் பாதிக்கும் வகையில் இயற்றப்பட்ட - அதுவும் அவசரக் கோலம் அள்ளித் தெளித்ததைப் போல நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் அறப்போரில் மக்களின் மனதின் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்த்திருந்தால் இப்படி விவசாயிகளது டில்லி முற்றுகை வரலாறு காணாததாக ஆகியிருக்குமா? 143 உயிர்கள் பலியாகி உள்ளன!

டில்லியில் மட்டுமல்ல; எல்லா மாநிலங்களிலும் இதன் எதிரொலி அறப்போர்கள் தொடரும் நிலையில், இவ்வாட்சி குடிமக்களின் அரசாக, ஆட்சியாக அமைந்திருந்தால் 11 முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் தேவையின்றி வீண் பிடிவாதம் காட்டுமா? விவசாயிகளை நிலத்திற்குப் போகவிடாமல், டில்லி தலைநகர் சாலைவாசிகளாக - போராட்டக்காரர்களாக்கி நீடிக்க வைப்பதுதான் குடியரசின் அம்சமாகுமா?

மக்கள் விரும்பாத சட்டங்களை மக்கள்மீது திணிப்பது மக்களின் அரசு என்பதற்கு சரியான அடையாளம் ஆகுமா?

சமூகநீதி - இடஒதுக்கீடு நாளும் 

புதை குழிக்கு அனுப்பப்படுகிறதே!

பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை பெரும் அளவில் பறிக்கப்பட்டுள்ளது என்பதற்கு அடையாளமாக, 80 வயதுக்கு மேற்பட்டவர்களை 'தேச நலன்' என்ற  போர்வையைக் காட்டி பிணையில்கூட வர முடியாதபடி, அவர்தம் உடல் நலனைக்கூட காத்துக் கொள்ள இயலாத வகையில் சிறையில் அடைத்துள்ளதானது - குடியரசு என்பதற்குப் பொருத்தம் தானா?

நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான பகுதியில் சமூகநீதி - இடஒதுக்கீடு நாளும் புதை குழிக்கு அனுப்பப்படுகிறதே!

கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உத்தியோக உரிமை - அரசமைப்புச் சட் டப்படி பாதுகாக்கப்படுவதற்கும், பரவலாகப் பின்பற்றப்படுவதற்கும் மாறாக, பறிக்கப்படுகிறதே  இது குடியரசு தினக் கொண்டாட்டத்திற்குரிய அம்சம்தானா?

மதச் சார்பின்மை என்றுள்ள முகவுரை சிதைக் கப்படுகிறது.

ஜனநாயகக் குடியரசு என்ற தத்துவத்திற்கு 

சரியான விளக்கம் ஆகுமா?

பன்மொழி, பல கலாச்சாரம், பல மதங்கள் உள்ள நாட்டில் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம்தான் என்று நடைமுறைப்படுத்தி பன்முக கலாச்சாரத்தை அழித்து ஒற்றைக் கலாச்சாரம், சமஸ்கிருத கலாச்சாரம் என்று திணிக்கப்படுவதும் சரிதானா? மத்தியில் உள்ள அரசின் மய்யப் புள்ளியே கூட்டாட்சி என்று அரசமைப்புச் சட்டம் கூறுவதற்கு மாறாக, ஒற்றை ஆட்சி  (Federal என்பதற்கு பதில் Unitary) என்று நடைமுறையில் ஆதிக்கமயமாக்கி மாநிலங்களின் உரிமைகளை ‘‘பறிமுதல்'' செய்வது குடியரசு - அதுவும் ஜனநாயகக் குடியரசு என்ற தத்துவத்திற்கு சரியான விளக்கம் ஆகுமா?

வேலையில்லாத் திண்டாட்டமும், விலைவாசி ஏற்றமும், ஏழை, நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்த நிலை கண்கூடு.

கார்ப்பரேட் கனவான்களின் சொத்துக்கள் மதிப்போ, உலகப் பணக்காரர்களின் சொத்துக்களை மீறும் அளவுக்கு வளர்ச்சி!

கோடானு கோடி மக்களின் 

கேள்வி

எனவே, இந்த ஆட்சியில் ‘‘வளர்ச்சி'' என்பது உயர் ஜாதியினருக்கு உயர் வர்க்கத்தினருக்குதானா என்பது குமுறும் கோடானு கோடி மக்களின் கேள்வியாக உள்ளதே!

இவைகள் என்று மாறும்?

இவைதான் குடிஅரசு நாள் சிந்தனைகள்.


கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை 

26.1.2021

Comments