திமுக தலைவர் கலைஞர் பொங்கல் வாழ்த்து!

தைத்திங்கள் முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு- பொங்கல் திருநாள்! இந்நன்னாளை உற்றார், உறவினர், நண்பர்களின் வாழ்த்தொலி முழங்கக் குடும்பத்தோடு கொண்டாடி மகிழும் எனது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட அருமைத் தமிழ் மக்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

 தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல்; கழக அரசு தொடங்கிய வல்லூர், வடசென்னை, மேட்டூர் அனல் மின்நிலையப் பணிகளை விரைவுபடுத்திச் செயல் பாட்டிற்குக் கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையால் பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் கிடைக்காமல் விவசாயம் முற்றிலும் முடங்கி தமிழக விவசாயிகள் வேதனையில் மூழ்கிக் கிடக்கின்றனர். மேலும், அனைத்துப் பொருள்களின் விலைவாசிகளும் வெகுவாக உயர்ந்து எல்லா வகையிலும் தமிழக மக்கள் அல்லப்படுகின்றனர்.

இந்த நிலையை எண்ணும்போது இதயம் விம்முகிறது. இரு விழிகளிலும் நீர் அருவியாகிறது. எனினும், புலரும் புத்தாண்டு கைகொடுக்கும்! இளம் தளிர்கள் எழுச்சி பெறும்! புதிய வாழ்வு உதயமாகும்! எனும் நம்பிக் கையுடன் தமிழ்ப் புத்தாண்டு- பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன்.

(2013 ஆம் ஆண்டு தி.மு.. தலைவர் கலைஞர் அவர்கள் தெரிவித்த பொங்கல் வாழ்த்துச் செய்தி)

Comments