தடுப்பூசி சர்ச்சை முடிவிற்கு வருமா?

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் கோவாக்சின், கோவிஷீல்ட் என இரண்டு விதமான தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது. இதன் முடிவுகள் முழுவதுமாக கிடைப்பதற்குள் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சூழலில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் நிகழ்வை பிரதமர் மோடி ஜனவரி 16-இல் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் தொடங்கி வைத்துள்ளார். இதற்காக லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். முதல்கட்டமாக முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் மூன்று கோடி சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள் அடங்குவர்.

இதையடுத்து 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளான 30 கோடி பேருக்கு அடுத்தகட்டமாக தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம் தடுப்பூசி இருப்பிற்கு ஏற்ப வரும் ஜூலை மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கோவாக்சின் மீதான அச்சத்தால் பெரும்பாலான சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாட்டின் 3,352 மய்யங்களில் கோவின் (Co-WIN) இணைய சேவையை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக தன்னார்வலர்களின் பெயர்களின் பட்டியலை பதிவேற்றம் செய்வதில் தாமதம் உண்டானது. மேலும்  கோவின் செயல்திட்டத்தில் இல்லாத பலர், புதிதாக பெயரைச் சேர்த்துக் கொண்டு கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

புனே உள்ளிட்ட சில நகரங்களில் ஆட்டோமேட்டிக் எஸ்.எம்.எஸ். சரியாக செயல்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிகாரிகள் மாற்று வழிகளை கையாண்டுள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில், "கோவின் ஆப் இணைய செயல்பாட்டில் பெரிய அளவில் பிரச்சினை ஏற்படவில்லை. சிறிய அளவில் தான் பிரச்சினை ஏற்பட்டது. இது விரைவாக சரிசெய்யப்பட்டது.

இதையடுத்து முதல் நாள் தடுப்பூசி முகாம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கோவின் பிளாட்பார்மின் வேகம் மற்றும் செயல்பாடு ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்துவிதமான சர்வர் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கின்றன. பதிவேற்றம் செய்ய முடியாத சுகாதாரப் பணியாளர்களின் பெயர்களை விரைவாக பதிவேற்றம் செய்யலாம்" என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செவ்வாயன்று தடுப்பூசி  போட்டுக் கொண்டவர்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 99 பேருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இருவரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெலங்கானாவைச் சேர்ந்த 11 பேர், மகாராட்டிராவைச் சேர்ந்த 22 பேர், டில்லியைச் சேர்ந்த 52 பேர், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 14 பேர் அடங்குவர்.

டில்லியில் பாதிப்பிற்கு ஆளான 52 பேரில் 51 பேருக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே இருந்துள்ளன. ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொல்கத்தாவில் செவிலியர் ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்ட சில நிமிடங்களில் சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

புரளியாக இருந்தாலும், உண்மையாக இருந்தாலும் இந்தப் பிரச்சினையில் தெளிவுபடுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் முக்கிய கடமையாகும். இதில் அரசியல் தேவை இல்லை.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது வேறுவிதமாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. அரசுகளும் சரியான வழிகாட்டுதலைத் தர வேண்டியது மிகவும் அவசியமாகும்.

Comments