கரோனாவால் 8 லட்சம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வேலை இழப்பு!

இந்திய வங்கிகளில் ரூ. 1.5 லட்சம் கோடி என்ஆர்அய் சேமிப்பு குறைந்தது

 உலக வங்கி தகவல்

 புதுடில்லி, ஜன.10 கரோனா தொற்றினால் 8 லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வேலை இழந்ததால், இந்திய வங்கிகளில் ரூ.1.5 லட்சம் கோடி என்.ஆர்.அய். சேமிப்பு குறைந்தது என்று உலக வங்கி தகவல் வெளி யிட்டு இருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் சுமார் 12 கோடிபேர் வேலையிழப் புக்கு உள்ளாகினர். இந்தக் காலத்தில், மாதச் சம்பளக்காரர்கள் மட்டும் சுமார் ஒரு கோடியே 89 லட்சம் பேர் வேலையிழந்தனர்.

பின்னர் பொதுமுடக்கத் தளர்வுகள் காரணமாக வேலைவாய்ப்பு படிப்படியாக மேம்பட்டாலும், கரோனாவுக்கு முந்தைய இயல்பான நிலையைஇன்னும் எட்ட வில்லை. சுமார் 68 லட்சம் தினக்கூலி தொழி லாளர்கள் முற்றிலுமாக வேலையிழந்து விட்டதாக இந்திய பொருளாதார கண் காணிப்பு மய்யம் தெரிவித்துள்ளது.

இது உள்ளூர் நிலவரமென்றால், வெளி நாட்டில் வேலைபார்த்து வந்தஇந்தியர்களும், கரோனா காரணமாக வேலையிழந்து தாய் நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். குறிப்பாக, குவைத்தை எடுத்துக்கொண்டால், அங்கு சுமார் 10 லட்சம் இந்தியர்கள் வசித்து வந்தனர். இவர்களில் கேரளத்தைச் சேர்ந்த வர்கள் மட்டும் சுமார் 5.52 லட்சம் பேர் (70 சதவிகிதம்) வேலை இழந்து கேரளம் திரும்பியுள்ளதாகஇந்தியன் எக்ஸ் பிரஸ்' ஏடு தெரிவிக்கிறது.

ஒட்டுமொத்தமாக, கரோனா தொற்றுப் பாதிப்பைத் தொடர்ந்து, குவைத்தில் பணியாற்றிவந்த 10 லட்சம் இந்தியர்களில் 8 லட்சம் பேர் வேலையிழந்து, சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட்டனர். இதுதவிர, பல்வேறு வெளிநாடுகளில் இருந்து கேர ளாவுக்கு மட்டுமே 2020 முதல் 2021 ஜனவரி 4 வரைசுமார் 8.43 லட்சம் பேர் திரும்பி யுள்ளதாகவும், கடந்த 30 நாட்களில் 1.40 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்; 2.08 லட்சம் பேரின் விசா, ஒர்க் பெர்மிட் போன்றவை காலாவதியாகி இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்தான், இவ்வாறு பணி யிழந்த வெளிநாடு வாழ் இந்தியர்களால், இந்திய வங்கிகளில்ஆண்டுதோறும் மேற் கொள்ளப்படும் டெபாசிட் தொகையும் கணிசமாக குறைந்து விட்டதாக தற்போது புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. வெளி நாடுகளிலிருந்து இந்திய வங்கிகளில் டெபா சிட் செய்யப்படும் பணம் கடந்த ஆண்டு 6 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், இது நடப்பாண்டில் 4.7 லட்சம் கோடி ரூபாயாக சரியும் என்று உலக வங்கி கூறியிருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, வெளிநாடுகளிலிருந்து வரும் டெபாசிட் தொகையில் 23 சதவிகித டெபாசிட் இழப்பை - சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி சேமிப்புத் தொகையை, இந்திய வங்கிகள் இழந்திருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

Comments