7 பேர் விடுதலை: வைரமுத்து வலியுறுத்தல்

சென்னை, ஜன. 26- பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை வலியுறுத்தி  கவிப்பேரரசு வைரமுத்து  பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: போதும்! 29ஆண்டுகள் சிறைவாசம் போதும். எழுவர் விடுதலையைத் தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது. ஆளுநரின் அதிகாரம் அறத்தை முன்னிறுத்திச் சட்டத்தை அணுகட்டும். இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு

ஜூலை 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

லண்டன், ஜன. 26- இங்கிலாந்தில் உருமாறிய கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனை யடுத்து அங்கு பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் என வைரஸ் தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தும் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று அதிதீவிரமாக பரவியது. இதனால் இங்கிலாந்து திக்குமுக்காடியது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிக மாக ரத்து செய்வதாக பல நாடுகளும் அறிவித்தன. அதற்குள் சில நாடுகளில் உருமாறிய கரோனா பரவியது. இந்நிலையில் ஜூலை 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.

உருமாறிய கரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ள ஜான்சன், தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும்வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை எனவும் கூறினார். மேலும், கரோனா பாதிப்பு அதிகமுள்ள வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் இதுவரை 97ஆயிரத்து 939 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பழைய ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் இல்லை: ரிசர்வ் வங்கி விளக்கம்

புதுடில்லி, ஜன. 26- கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. அத்துடன், கள்ள நோட்டுகளை தடுக்க பழைய வரிசை ரூபாய் நோட்டுகளை அவ்வப்போது திரும்பப்பெற்று புதிய வரிசை நோட்டுகளை வெளியிடுவது ரிசர்வ் வங்கியின் வழக்கம்.

அதுபோல், புழக்கத்தில் உள்ள பழைய வரிசையை சேர்ந்த ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் திரும்பப்பெற உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், அதற்கு ரிசர்வ் வங்கி நேற்று மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பழைய வரிசை ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகள் விரைவில் திரும்பப்பெறப்பட உள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல் சரியல்ல. அப்படி எந்த திட்டமும் இல்லை.

இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Comments