ரூ.56,000 கோடி மதிப்புள்ள பொதுத் துறை நிறுவனத்தை வெறும் ரூ.720 கோடிக்கு விற்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசு!

பாலக்காடு, ஜன.5 எதிர்ப்புக்கள் இருந்த போதிலும், பொதுத்துறையைச் சேர்ந்த மினி நவரத்னா நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்) விற்க மத்திய அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இதை ஏற்க விரும்புவோர் மார்ச் ஒன்றாம் தேதிக்குள் அணுகுமாறு மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. தனது 54.03 சதவிகித பங்குகளில் 26 சதவிகிதத்தை விற்க அரசு முடிவு செய்துள்ளது.

நிறுவனத்தின் மேலாண்மை கட்டுப்பாடு உள்பட மாற்றப்படும். இதன் மூலம் ரூ.56,000 கோடி மதிப்பிலான பொதுத்துறை நிறுவனம் ரூ.720 கோடிக்கு விற்கப்படுகிறது. முதலாவது மோடி அரசாங்கத்தின் போது, ரூ.518 கோடிக்குஇந்த பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தொழிலாளர்களும், முதல்வர் பினராயி விஜயனும் தெரிவித்த எதிர்ப்பு மற்றும் நாடாளுமன்றத்தில் எம்.பி.ராஜேஷின் தலையீடு காரணமாக, விற்பனை முயற்சி கைவிடப்பட்டது. ஆனால், இரண்டாவது முறையாக மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் 16 கட்டங்களாக விற்க முடிவு செய்தது. கடைசியாக விருப்பம் கோரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி பாதுகாப்புத் துறையில் லாபத்தில் செயல்படும் பொதுத்துறை நிறுவனம் விற்கப்படுகிறது. பாதுகாப்பு துறைக்குத் தேவையான தளவாடங்களை பிஇஎம்எல் தயாரிக்கிறது. இந்திய ராணுவத்திற்கு வாகனங்கள், ராக்கெட் லாஞ்சர்கள், டட்ரா லாரிகளை தயாரிக்கிறது. சுரங்கம், கட்டுமானத் துறைகள் மற்றும் மெட்ரோ ரயில் பெட்டிகள் உற்பத்தியில் தனியார்  நிறுவனங்களுக்குச் சவால் விடுத்து, போட்டி ஒப்பந்தம் மூலம் ரூ.5,000 கோடி மதிப்புள்ள கட்டுமான ஆணைகளை பிஇஎம்எல் சமீபத்தில் வென்றது.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு 1964 இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் இதுவரை லாபம் மட்டுமே ஈட்டியுள்ளது. ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனம் தனியார் மயமாக்கப்படுவதன்மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

தொழிற்சாலைகள் நிறைந்த கஞ்சிகோடு பகுதியில் 2010 இல் இந்த நிறுவனத்தை அமைக்க 375 ஏக்கர் நிலம் மாநில அரசால் இலவசமாக வழங்கப்பட்டது. நிறுவனம் விற்கப்படும் போது, நிலம் உள்பட கார்ப்பரேட்டுகள் கையகப்படுத்தும். பெங்களூரு, மைசூரு, கோலார், கஞ்சிகோடு ஆகிய நான்கு உற்பத்தி பிரிவுகளில் 4,160 ஏக்கர் நிலம் பிஇஎம்எல் வசம் உள்ளது. ரிலையன்ஸ், வேதாந்தா மற்றும் கல்யாணி குழுமம் ஆரம்பத்தில் இருந்தே பிஇஎம்எல்- நிறுவனத்தைப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

Comments